மனிதக் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம்: சர்வதேசப் பயிற்சி மையமாக மாறியுள்ள நீலகிரி மாவட்டம்

மனிதக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தின்
மனிதக் கழிவில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம்: சர்வதேசப் பயிற்சி மையமாக மாறியுள்ள நீலகிரி மாவட்டம்

உதகை: மனிதக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டம், நாட்டிலேயே முதல் முறையாக நீலகிரி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், இந்தத் திட்டத்தின் செயல்பாடு குறித்து பயிற்சி பெற பல்வேறு நாடுகளில் இருந்து அதிகாரிகள் வருவதால், நீலகிரி மாவட்டம், கேத்தியில் உள்ள வளம் மீட்புப் பூங்கா சர்வதேசப் பயிற்சி மையமாக மாறியுள்ளது.
 அமெரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் உயர் அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், பிப்ரவரி 27-ஆம் தேதி கேத்திக்கு வந்து இந்தத் திட்டத்தைப் பார்வையிட்டு, தங்களது நாடுகளிலும் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர்.
 நீலகிரி மாவட்டம், அருவங்காட்டில் இயங்கிவரும் கிராமிய அபிவிருத்தி இயக்கம் சார்பில் கடந்த 2010-ஆம் ஆண்டில் தனிநபர் கழிவறை கட்டும் திட்டம், நீலகிரியில் தொடங்கப்பட்டது. இதன் மூலம், கடந்த 10 ஆண்டுகளில் 68,000 கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, கிராமிய அபிவிருத்தி இயக்கம் மூலமாக ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டு, இதுவரையிலும் சுமார் 10 லட்சம் தனிநபர் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன.
 இத்திட்டத்தில், தொட்டிகளில் சேகரிக்கப்பட்ட மனிதக் கழிவுகள் திறந்தவெளி, பொது இடங்களில் கொட்டப்பட்டு வந்ததால் சுகாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காண கிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் இயக்குநர் என்.கே.பெருமாள், நெதர்லாந்து நாட்டில் உள்ள "வேஸ்ட்' என்ற நிறுவனத்தின் மூத்த அலுவலர் வெலன்டின் என்பவருடன் விவாதித்தபோது, மனிதக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்க முடியும் என்பது தெரியவந்தது.
 இதையடுத்து, அந்த நிறுவனத்தின் உதவியுடன் நீலகிரியில் உள்ள சாம்ராஜ் எஸ்டேட் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் மனிதக் கழிவு சுத்திகரிப்பு மையம் 2017-இல் தொடங்கப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. இந்த உரம் விவசாயத்துக்கு ஏற்ற உரம் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சான்று அளித்துள்ளது. மேலும், சென்னை, ராஜஸ்தானில் உள்ள தரக் கட்டுப்பாட்டு ஆய்வு மையங்களிலும் தரச்சான்று பெறப்பட்டுள்ளது.
 இதுகுறித்து கிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் இயக்குநர் என்.கே.பெருமாள் கூறியதாவது:
 மனிதக் கழிவுகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் திட்டத்தை வணிகரீதியாகக் கொண்டுசெல்லும் வகையில், கேத்தி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதியில் வளம் மீட்புப் பூங்கா தொடங்கப்பட்டு மனிதக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கும் மையம் தொடங்கப்பட்டது.
 இதைத் தொடர்ந்து நாட்டிலேயே முதல் முறையாக கேத்தி பேரூராட்
 சியில் மனிதக் கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டம் குறித்து கேள்வியுற்ற நீதி ஆயோக் அமைப்பு, கேத்தியில் செயல்படுத்தப்படும் திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டங்களை ஆய்வு செய்து பாராட்டியுள்ளது.
 இதையடுத்து, நீதி ஆயோக் அமைப்பின் தலைமைச் செயலர் அமிதாப் காந்த், அனைத்து மாநில தலைமைச் செயலர்களுக்கும் கடந்த ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இத்திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
 மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தும் இத்திட்டத்தை வரவேற்று, ராஜஸ்தான் மாநிலத்திலும் இத்திட்டத்தை விரைவில் செயல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளார். மனிதக் கழிவுகளில் இருந்து தரமான உரம் தயாரித்தல் தொடர்பாக நெதர்லாந்து, இலங்கை, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நிபுணர்கள் கேத்திக்கு வரவழைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
 இதன் காரணமாக, தற்போது கேத்தி வளம் மீட்புப் பூங்கா சர்வதேசப் பயிற்சி நிலையமாக மாறியுள்ளது. அமெரிக்கா, நெதர்லாந்து, இலங்கை, வங்கதேசம், கென்யா, உகாண்டா, தான்சானியா, எத்தியோப்பியா உள்ளிட்ட நாடுகளின் உயர் அரசு அலுவலர்கள் அடங்கிய குழுவினர், பிப்ரவரி 27-ஆம் தேதி கேத்திக்கு வந்து திட்டத்தைப் பார்வையிட்டு, தங்களது நாடுகளிலும் செயல்படுத்துவது குறித்து விவாதிக்க உள்ளனர் என்றார்.

கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் நடராஜ் கூறியதாவது: மனிதக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம் 20 சதவீதம், மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் உரம் 80 சதவீதம் என கூட்டு உரமாக கிலோ ரூ. 8 என்ற அடிப்படையில் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 2 டன் வரை உரம் தயாரிக்கப்படுகிறது.
 மேலும், குடியிருப்புப் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், குழாய்கள் மூலம் சேகரிக்கப்பட்டு மறுசுழற்சி மூலம் சுத்திகரிக்கப்பட்டு விவசாயத்துக்குப் பயன்படுத்தப்படுவதால் ஆண்டுக்கு 1 லட்சம் லிட்டர் தண்ணீர் சேமிக்கப்படுகிறது என்றார்.
 அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள யு.எஸ்.எய்டு நிறுவனம்தான் உலகில் பல்வேறு நாடுகளில் மனிதக் கழிவுகளில் இருந்து விவசாயத்துக்காக உரம் தயாரித்து வருகிறது. ஆனாலும் உலகிலேயே கேத்தியில்தான் இத்திட்டம் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்படுவதாக பல்வேறு ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளனர். இதன் வெற்றிக்குக் காரணமான கிராமிய அபிவிருத்தி இயக்கத்தின் இயக்குநர் என்.கே.பெருமாள் மார்ச் 16-ஆம் தேதி வாஷிங்டனில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பாராட்டப்பட உள்ளார்.
 இத் திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் கண்காணிப்பு அலுவலர் நீதிபதி பி.ஜோதிமணி பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 -ஏ.பேட்ரிக், உதகை
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com