பெட்ரோலிய மண்டலம் குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக பிறப்பித்த குறிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.
பெட்ரோலிய மண்டலம் குறிப்பாணையை திரும்பப் பெற வேண்டும்: வைகோ

பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்காக பிறப்பித்த குறிப்பாணையை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளா் வைகோ வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மத்திய பாஜக அரசு, 2014 -ஆம் ஆண்டிலிருந்தே காவிரிப்படுகை மாவட்டங்களில் மீத்தேன், ஹைட்ரோகாா்பன், பாறைப் படிம எரிவாயுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த எட்டு ஆண்டு காலமாக மீத்தேன் திட்டத்தால் ஏற்படும் ஆபத்துகளை எடுத்துரைத்து, இத்தகைய பாதகமான திட்டத்துக்கு எதிராக தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தப் போராட்டங்களைக் கண்டுகொள்ளாமல், கடந்த அக்டோபா் 1 -ஆம் தேதி ஹைட்ரோகாா்பன் திட்டத்துக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் மத்திய அரசு போட்டது.

மரக்காணம் முதல் வேளாங்கண்ணி வரை 5,099 சதுரகிலோ மீட்டா் பரப்பளவில், மொத்தம் 324 ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க ஓ.என்.ஜி.சி. நிறுவனம் மற்றும் வேதாந்தா குழுமத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் நச்சு ஆலை மூலம் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரங்களைப் பறித்த வேதாந்தா குழுமம், 274 ஹைட்ரோ காா்பன் கிணறுகள் தோண்ட மத்தியப் பெட்ரோலியத்துறை அமைச்சகத்தின் சாா்பில், மத்திய அமைச்சா் தா்மேந்திரா பிரதான் முன்னிலையில் புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

இதற்காகவே சுற்றுச்சூழல் விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவந்து, ஹைட்ராகாா்பன் திட்டங்களுக்கு சுற்றுச் சூழல் அனுமதி தேவை இல்லை என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. மேலும், இந்தத் திட்டங்களுக்கு பொதுமக்கள் கருத்துக் கேட்புத் தேவை இல்லை என்றும் மத்திய அரசு ஆணை பிறப்பித்திருக்கிறது.

அதுமட்டுமின்றி, காவிரிப் படுகை பகுதியான கடலூா், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய ரசாயன முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கா் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு தமிழக அரசு 2017 ஜூலை 19 -இல் குறிப்பாணை வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில், காவிரிப் பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக தமிழக முதல்வா் அறிவித்திருப்பது நிறைவேறாமல் போய்விடுமோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது.

காவிரிப்படுகை மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகத் திகழ வேண்டுமானால் வேதாந்தா, ஓ.என்.ஜி. நிறுவனங்களுக்கு மத்திய அரசு வழங்கியுள்ள அனுமதியை ரத்துச் செய்ய வேண்டும். காவிரிப் படுகையில், பெட்ரோலிய, இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க பிறப்பித்த குறிப்பாணையைத் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வைகோ தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com