Enable Javscript for better performance
ஸ்ரீகிருஷ்ணரே வணங்கும் ஆறு பேர் யார்? அக்‍ஷய பாத்ரா விழாவில் ஓ. பன்னீர்செல்வம் சொன்ன தகவல்- Dinamani

சுடச்சுட

  

  ஸ்ரீகிருஷ்ணரே வணங்கும் ஆறு பேர் யார்? அக்‍ஷய பாத்ர விழாவில் ஓ. பன்னீர்செல்வம் சொன்ன தகவல்

  By DIN  |   Published on : 15th February 2020 04:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  atchaya_patra_2


   
  சென்னை: அக்‍ஷய பாத்ர அறக்கட்டளை சார்பில் காலை உணவுத் திட்டத்திற்கான சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழா கிரீம்ஸ் சாலையில் இன்று காலை 11.00 மணிக்கு நடைபெற்றது.

  சிறந்த நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமி பூஜை விழாவில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  இவ்விழாவில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆற்றிய உரையில், சாதி மத வேறுபாடு இன்றி, மனித இன மேம்பாடு ஒன்றை மட்டுமே மனதில் கொண்டு, ஏழை எளிய மக்கள் பசியாற, அன்னம் அளிக்கும் அருஞ் சேவை ஆற்றிவரும், அக்‍ஷய பாத்ரா அறக்கட்டளையின் சார்பில், சென்னை மாநகரில் உள்ள பள்ளி மாணவச் செல்வங்களுக்கு, காலை உணவை வழங்கிடும் உன்னத நோக்கத்தை நிறை வேற்றிட, சிறந்த நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் கூடிய சமையல் கூடம் கட்டுவதற்கான பூமிபூஜை விழாவில் பங்கேற்கின்ற நல்வாய்ப்பை எனக்களித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  தானத்தில், அன்னதானம், வித்யா தானம், தண்ணீர் தானம், பொருள் தானம், பண தானம், கண் தானம், ரத்த தானம், உடலுறுப்பு தானம் என பல வகையான தானங்கள் இருக்கின்றன. இவற்றுள் தலையாய தானமாக, தானங்களிலேயே சிறந்த தானமாக, அன்னதானமே விளங்குகிறது.

  ஏழைகளுக்கும், ஏதுமற்ற அனாதைகளுக்கும், நோயுற்றவர்களுக்கும் செய்யும் அன்னதானம் என்பது, அஸ்வமேத யாகம் செய்த அளவிற்கு நற்பலன்கள் அளிக்கவல்லது என்று புராண இதிகாசங்கள் தெரிவிக்கின்றன.

  அன்றொரு நாள், அகிலத்தைக் காக்கும் திருமாலின் அவதாரமான பகவான் ஸ்ரீகிருஷ்ணர், துவாரகையில், பக்தியில் ஆழ்ந்திருந்தார். 

  அதைக் கண்டு வியப்புற்ற, அருகிலிருந்த ருக்மணிதேவியின் மனதில், ஒரு பெருத்த கேள்வி எழுந்தது. “உலக உயிர்கள் எல்லாம் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வணங்குகின்றன. ஆனால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் யாரை வணங்குகிறார்?” என்பதே அந்தக் கேள்வியாகும்.

  தனது மனதில் எழுந்த இந்த கேள்வியை, பகவானிடம் நேரில் கேட்டார் ருக்மணி தேவி. அதற்கு ஸ்ரீகிருஷ்ணர், ஆறு பேரை, தான் வணங்குவதாக பதில் உரைத்தார்.

  மனிதர்கள் வாழும் பூமியில், நான் ஆறு வகையான மக்களை வணங்குகிறேன்.
  1. தினமும் அன்னதானம் செய்வோர்,
  2. தினமும் அக்னிஹோத்ரம் செய்வோர்,
  3. வேதம் அறிந்தவர்கள்,
  4. சஹஸ்ர சந்திர தரிசனம் செய்தோர்
  அதாவது சதாபிஷேகம் செய்து கொண்டோர்.
  5. மாதாந்தோறும் உபவாசம் இருப்போர்,
  6. பதிவிரதையான பெண்கள்,
  இந்த ஆறு பேரை நான் வணங்குகிறேன் என்று பதில் கூறினாராம் கிருஷ்ண பரமாத்மா.

  தான் வணங்கத்தக்கவர்களில் முதலிடத்தில் இருப்பவர் அன்னதானம் செய்பவரே என்று பகவான் கிருஷ்ணரே தெரிவித்துள்ளார்.

  கொடை வள்ளல் கர்ணன் ஒரு முறை பசியோடு வந்த ஒருவருக்கு தன்னையும் அறியாமல் அன்னதானம் செய்யும் இடத்தை ஆள்காட்டி விரலால் சுட்டிக்காட்டியதே, கர்ணனுக்கு சொர்க்கத்தின் வாயில் திறந்திடக் காரணமாய் அமைந்தது என மகாபாரதக் கதை ஒன்று கூறுகிறது.

  ஏழைகளுக்கு வயிற்றுப் பசிக்கு உணவளிப்பதைவிட சிறந்த யாகம் எதுவும் கிடையாது என்கிறது இராமாயணம்.
  “இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர்” என்று நமது முன்னோர்கள் அன்னதானம் செய்பவர்களின் மேன்மையை எடுத்துக் கூறினார்கள்.

  முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், இளவயதில் தான் சந்தித்த பசித் துன்பத்தை, இனி எவரும் அனுபவிக்கக் கூடாது என்றும் பசியின் காரணமாக பள்ளி செல்லாமல் இருத்திடக் கூடாது என்றும் உயர்ந்த எண்ணத்துடன் சிந்தித்து, இந்தியாவில் வேறெங்கும் இல்லாத திட்டமான சத்துணவுத் திட்டத்தினை 1982 ஆம் ஆண்டு தொடங்கினார்.

  தற்போது தமிழ்நாட்டில் 43,283 பள்ளிகளில் தினந்தோறும் 49,85,335 மாணவ, மாணவிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்துணவு வழங்கப்பட்டு வருகிறது.

  தமிழகத்திலுள்ள திருக்கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்கள், பசியாறி வயிறும் மனமும் குளிர ஆண்டவனை தரிசித்து அகமகிழ்ந்திட, 754 திருக்கோயில்களில் தினந்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்தை அம்மா அவர்கள் செயல்படுத்தினார்கள். இதனால் தினந்தோறும் 65,000 பக்தர்கள் பயன் அடைந்து வருகிறார்கள் என்பதை எடுத்துக் கூறுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  தமிழக அரசுக்கு, உறுதுணையாக இருக்கும் வகையில், பக்தி வேதாந்த சுவாமி ஸ்ரீல பிரபுபாதர் அவர்களது ஆசியோடு, பெங்களூரில் இஸ்கான் அமைப்பின் உதவியால் அமைக்கப்பட்டுள்ள, அக்‍ஷய பாத்ரா அறக்கட்டளை அமைப்பு சமூகத் தொண்டுகளை ஆற்றி வருவதை வெகுவாக பாராட்டுகின்றேன்.

  அக்‍ஷயா பாத்ரா அறக்கட்டளை இந்திய நாடு முழுவதும் மத்திய, மாநில அரசுகளின் ஆதரவோடு, இலட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவை அர்ப்பணிப்பு உணர்வுடன் அளித்து வருவதையும், தற்போது 12 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 16,856 பள்ளிகளில் உள்ள 18 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவினை வழங்கி மகத்தான சேவை ஆற்றி வருவதையும் அறிந்து, மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  ஏற்கெனவே இந்த அறக்கட்டளை அமைப்பு, தமிழகத்தில், சென்னை மாநகராட்சியின் உதவியுடன், சென்னையில் 24 பள்ளிகளில் பயிலும் 5785 குழந்தைகளுக்கு தினந்தோறும் காலை உணவினை அளித்து வருவது மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.

  இந்த மனித நேயப் பணியின் தொடர்ச்சியாக, இன்று பூமி பூஜை போடப்படும், நவீன வசதிகளுடன் அமையவிருக்கும் சமையற் கூடம் வாயிலாக சென்னை மாநகராட்சியின் 35 பள்ளிகளைச் சேர்ந்த 12000 பிள்ளைகளுக்கு சத்தான காலை உணவினை வழங்க அக்ஷய பாத்ரா அமைப்பு திட்டமிட்டுள்ளது என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  இதற்காக, அக்‍ஷய பாத்ரா அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ மதுபண்டிட் தாசாவுக்கும், அறக்கட்டளையின் ஏனைய பொறுப்பாளர்களுக்கும் எனது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

  இந்த மகத்தான மனித நேயப் பணியை வெற்றிகரமாகச் செயல்படுத்திட, நமது ஆளுநர், தனது விருப்ப நிதியிலிருந்து, 5 கோடி ரூபாய் வழங்கியுள்ளார்கள் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  தமிழகத்தின், குறிப்பாக சென்னை மாநகராட்சியின், பள்ளி மாணவச் செல்வங்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு, ஆளுநர் அளித்துள்ள இந்த நிதியுதவிக்கு, எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  சமூக கண்ணோட்டத்துடன், இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்விற்கு அக்‍ஷயா பாத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வரும் முயற்சிகள் அனைத்தும் பாராட்டுக்குரியதாகும். இத்தகைய மக்கள் சேவையை ஆற்றிவரும் அக்‍ஷயா பாத்ரா அறக்கட்டளைக்கு தமிழக அரசு, ஆக்கமும் ஊக்கமும் அளிக்கும் என்பதைத் தெரிவித்துக்கொண்டு, அக்‍ஷயா அறக்கட்டளை போன்று, பிற தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கான பணிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai