
metro train service
சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு சைக்கிள் வசதி, ஆட்டோ வசதி என பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்திருக்கும் மெட்ரோ நிர்வாகம் தற்போது கூடுதலாக ஒரு சலுகையை அறிவித்துள்ளது.
அதாவது, மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள், தங்களுடன் தங்களது சைக்கிளையும் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்த சைக்கிள் சிறியதாகவும், கையில் எடுத்துச் செல்ல வசதியாகவும் இருக்க வேண்டும். பயணிகள் யாருக்கும் இடையூறு ஏற்படுத்தாமலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத வாகனத்தை பொதுமக்கள் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையிலும், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரவும், ரயிலில் இருந்து இறங்கி அலுவலகம் சென்று சேரவும் மாற்று வாகனத்துக்கு அல்லது ஆட்டோவுக்கு செலவிடப்படும் தொகையைக் குறைக்கவும் இந்த வாய்ப்பு பயணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏராளமான பயணிகள், தங்களது சைக்கிளை ரயிலில் கொண்டுச் செல்ல அனுமதிக்குமாறு தொடர்ந்து வைத்த கோரிக்கையை ஏற்று மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது.
இதன் மூலம் ஏராளமான மெட்ரோ பயணிகள் பலனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.