உள்ளாட்சி நிர்வாகத் திறன் தமிழனின் மரபணுவில் கலந்துள்ளது: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

உள்ளாட்சி அமைப்பை நிர்வாகம் செய்யும் திறன் தமிழனின் மரபணுவிலேயே கலந்துள்ளது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசினார்.
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்
தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன்

உள்ளாட்சி அமைப்பை நிர்வாகம் செய்யும் திறன் தமிழனின் மரபணுவிலேயே கலந்துள்ளது என்று தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் பேசினார்.

 கோவையில் நடைபெற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான பாராட்டு விழா, வழிகாட்டுதல் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்து அவர் பேசியதாவது:
 கிராம ஊராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவதை விடவும் கடினமானது. ஏனெனில், மக்களவைத் தேர்தலிலோ, சட்டப் பேரவைத் தேர்தலிலோ போட்டியிடும் வேட்பாளர் பற்றி வாக்காளர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருக்காது.

 ஆனால், கிராம ஊராட்சித் தேர்தலில் ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டுமானால் அவர் அந்த ஊரில் உள்ள ஒவ்வொருவருக்கும் தெரிந்தவராக இருக்க வேண்டும்.

 இந்தியாவின் ஆன்மா கிராமங்களில்தான் இருக்கிறது என்று சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே மகாத்மா காந்தியடிகள் கூறினார். அவரது தொலைநோக்குப் பார்வை நம்மை வியக்கச் செய்கிறது.

 நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒரு பகுதியினர்.

அல்லாவின் ஆணைப்படியே ஒருவர் தலைவர் ஆகிறார் என்கிறது திருக்குர்ஆன். எனவே வெறும் வாக்குகள் மட்டுமல்ல, இறைச் சித்தமும் இருந்தால் மட்டுமே ஒருவரால் தலைவராக முடியும். அந்த வகையில் மக்களுக்குத் தொண்டு செய்வதற்காக நீங்கள் இறைவனால் தேர்வு செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளீர்கள்.

 மக்களவைத் தேர்தலும், சட்டப் பேரவைத் தேர்தலும் தமிழகத்துக்கும், இந்த உலகத்துக்கும் புதிதாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சங்க காலம் தொட்டே தேர்தல் நடைபெற்று வருகிறது என்பது தமிழன் பெருமைப்படக் கூடிய விஷயங்களில் ஒன்றாகும்.

 இந்த உலகம் மன்னராட்சி குறித்து சிந்தித்துக் கொண்டிருந்த காலத்தில், குடவோலை முறை மூலம் மக்களாட்சியை அமல்படுத்திய பெருமை தமிழ் மண்ணுக்கு உள்ளது. இதை தமிழர்கள் தலைநிமிர்ந்து சொல்லலாம்.

 தமிழக உள்ளாட்சி அமைப்புகள் மிகச் சிறப்பாக செயல்பட்டு, உலகம் நம்மை உற்றுநோக்கும் காலம் வரும்போது, உள்ளாட்சி நிர்வாகம் என்பது தமிழனுக்குப் புதிய விஷயமல்ல, அது அவனது மரபணுவில் கலந்ததுதான் என்பதை இந்த ஒட்டுமொத்த உலகமும் உணரும்.

 சேலம் நகராட்சித் தலைவராக இருந்த ராஜாஜி தமிழக முதல்வரானார். விருதுநகர் மாவட்ட கமிட்டி தேர்தலில் வெற்றி பெற்று படிப்படியாக உயர்ந்த காமராஜர்தான் பின்னர் தமிழ்நாட்டின் முதல்வரானார்.

 அதுபோல உங்களில் யார் வேண்டுமானாலும் நாளை தலைவராகலாம், தமிழகத்தை வழிநடத்தலாம்.

 நீங்கள் ஒவ்வொருவரும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் பற்றி படித்துத் தெரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய அதிகாரங்கள் என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட வேண்டும் என்றார்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com