ஊராட்சித் தலைவரால் சிறிய குடியரசை உருவாக்க முடியும்: பேராசிரியர் க.பழனித்துரை

ஒவ்வோர் ஊராட்சித் தலைவராலும் ஒரு சிறிய குடியரசை உருவாக்க முடியும் என்று காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் க.பழனித்துரை பேசினார்.
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் க.பழனித்துரை
காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் க.பழனித்துரை

ஒவ்வோர் ஊராட்சித் தலைவராலும் ஒரு சிறிய குடியரசை உருவாக்க முடியும் என்று காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக ஓய்வுபெற்ற பேராசிரியர் க.பழனித்துரை பேசினார்.

கோவையில் நடைபெற்ற ஊராட்சித் தலைவர்களுக்கான பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது:

 கிராமங்களில் வறுமையை ஒழித்து பொருளாதார மேம்பாட்டை உருவாக்குதல், தீண்டாமையை ஒழித்து சமூக நீதியை ஏற்படுத்துதல், அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து திட்டங்களை உருவாக்குதல், ஜனநாயகத்தை வலுப்படுத்துதல் என ஊராட்சித் தலைவர்களுக்கு 4 கட்டாயக் கடமைகள் உள்ளன.

 கிராம சபைக் கூட்டத்தை நடத்தி அனைத்துத் தரப்பு மக்களின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து, ஊராட்சிகளுக்குத் தேவையான திட்டங்களை முடிவு செய்ய வேண்டும். கிராம சபை மூலம் கிராமத்தின் வளர்ச்சிப் பணிகள், சுகாதாரம், கல்வி குறித்து விவாதித்து தேவையான தீர்மானங்களை நிறைவேற்ற முடியும்.

 ஊராட்சிகளின் பணிகளுக்கு, ஊராட்சிகளின் வரி வருவாயைத் தவிர்த்து மக்களவை உறுப்பினர், சட்டப் பேரவை உறுப்பினர், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர், ஒன்றியக்குழு உறுப்பினர் வளர்ச்சித் திட்டங்களின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதிகளைப் பெறும் வழிமுறைகளைத் தெரிந்துவைத்திருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் நிதி அளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நமக்குத் தேவையான நிதி எங்கே இருக்கிறது என தேடிச் செல்ல வேண்டும்.

 தமிழகத்தில் 37 அரசுத் துறைகள் உள்ளன. இதன் கீழ் ஊராட்சிகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே இந்தத் துறைகளின் கீழ் ஊராட்சிகளுக்கு அறிவித்துள்ள திட்டங்கள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், நிதி செலவினங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேண்டும்.

 கிராமங்களுக்குத் தேவையான திட்டங்களை அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களே தயாரித்து வந்தனர். ஆனால், தற்போது கிராம ஊராட்சி வளர்ச்சித் திட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவினர் ஜல்சக்தி அபியான், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் ஆகியவற்றை இணைத்து கிராமத்துக்குத் தேவையான திட்டத்தை உருவாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 ஊராட்சித் தலைவர் தலைமையிலான இந்தக் குழுவிடம் கிராமத்தைப் பற்றிய புரிதல், புள்ளி விவரங்கள் இருக்க வேண்டும்.

 கிராமங்களின் புள்ளி விவரம் இருந்தால் மட்டுமே ஊராட்சிகளுக்குத் தேவையான திட்டங்களைத் தயாரித்து, அதற்கான நிதிகளையும் முறையாகப் பெற்று திறம்பட செயல்படுத்த முடியும். ஊராட்சிகளுக்கான திட்டங்களைத் தயாரிப்பதற்கான புள்ளி விவரங்களை சேகரித்து தருவதற்கும், திட்டமிடலுக்கு உதவுவதற்கும் கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களை ஒருங்கிணைத்து ஒரு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த உள்ளது. இதை ஊராட்சித் தலைவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

 கிராமத்தைப் பற்றிய விரிவான திட்டங்களை உருவாக்கி, கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும். கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அரசியல் அமைப்பு ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. இதனால், நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் திட்டங்களாக செயல்படுத்துவதற்கான வாய்ப்பு உள்ளது.

 கிராம வளர்ச்சிக்குத் திட்டமிட முயற்சி செய்து, அனைத்துத் துறைகளின் திட்டங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தினால் ஒவ்வோர் ஊராட்சித் தலைவராலும் ஒரு சிறிய குடியரசையே உருவாக்கிட முடியும் என்றார்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com