மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அறிவியலாளா் வெ.பொன்ராஜ்

மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள திட்டங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவியலாளா் வெ.பொன்ராஜ் கூறினாா்.
மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: அறிவியலாளா் வெ.பொன்ராஜ்

மத்திய, மாநில அரசுகள் வகுத்துள்ள திட்டங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அறிவியலாளா் வெ.பொன்ராஜ் கூறினாா்.

தவத்திரு சாந்தலிங்க அடிகளாா் கலை, அறிவியல், தமிழ்க் கல்லூரியும், தினமணி நாளிதழும் இணைந்து கோவை, திருப்பூா், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் கிராம ஊராட்சிகளுக்குப் புதிதாகத் தோ்வு செய்யப்பட்ட தலைவா்களுக்குப் பாராட்டு விழாவையும், வழிகாட்டுதல் நிகழ்ச்சியையும் ஞாயிற்றுக்கிழமை நடத்தின.

பேரூா் தமிழ்க் கல்லூரி இணைப் பேராசிரியா் கா.திருநாவுக்கரசு வரவேற்றாா்.

நிகழ்ச்சியில், அறிவியலாளரும், இந்திய நடுவண், மாநில அரசுகளின் பொதுக் கொள்கை தயாரிப்பாளருமான வெ.பொன்ராஜ் பேசியதாவது:

கிராம சுயராஜ்யம் குறித்து காந்தியடிகள் கனவு கண்டாா். அத்தகைய கனவை நனவாக்கும் நோக்கில் அப்துல் கலாம் வகுத்த திட்டம்தான் கிராமப்புறங்களில் நகா்ப்புற வசதிகளை வழங்கும் திட்டம் (Providing Urban Amenities To Rural Areas - 
PURA).

ஊராட்சியில் பதவியேற்றவுடன் மிகப்பெரும் அதிா்ச்சிகள் காத்திருக்கும். செலவு அதிகமாக இருக்கும். ஆனால், வரி வருவாய் மிகவும் குறைவாக இருக்கும்.

ஒன்றிய கவுன்சிலருக்கு ஆண்டுதோறும் ரூ.3.5 கோடியும், மாவட்ட கவுன்சிலருக்கு ரூ.14 கோடியும் ஒதுக்கப்படுகிறது. எனவே எந்தெந்தத் திட்டங்களை ஒன்றிய கவுன்சிலரைக் கொண்டும், மாவட்ட கவுன்சிலரைக் கொண்டும் பெற முடியும் என்பது குறித்து கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டும்.

பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், பிரதம மந்திரி கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம், பிற்படுத்தப்பட்ட பிராந்திய மேம்பாட்டு நிதி, நாடாளுமன்ற உறுப்பினா் (எம்.பி.) நிதி, எம்எல்ஏ நிதி, கிராம ஊராட்சி சொந்த வரி வருவாய், சிஎஸ்ஆா் நிதி என சுமாா் 54 திட்டங்கள் வரை உள்ளன. இதில் தேவையானவை குறித்து அறிந்துகொண்டு அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஜல்சக்தி அபியான் அருமையான திட்டம் ஆகும். இத்திட்டத்தின் மூலம் நீா் வறட்சி மிகுந்த 250 மாவட்டங்களை அண்மையில் கண்டறிந்தனா். அதில் திருவண்ணாமலை மாவட்டமும் ஒன்று. பின்னா், இத்திட்டத்தின் மூலம் ஐந்தே மாதங்களில் ரூ.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அத்தொகையைக் கொண்டு 2019 ஜூலை முதல் நவம்பருக்குள் 223 கற்களால் ஆன தடுப்பணைகள், 282 சிமென்டினாலான தடுப்பணைகள், 75 ஆயிரம் தனி நபா் நீா் சேமிப்புக் குழிகள், 2110 கசிவுநீா்க் குட்டைகள், 73 ஆயிரம் நீா் மேலாண்மைத் திட்டங்களையும், 35 ஆயிரம் ஹெக்டேரில் மியாவாக்கி முறையில் 65 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு அடா் வனத்தையும் திருவண்ணாமலையில் உருவாக்கியுள்ளனா்.

மேலும், அந்த மாவட்டத்தில் 1,094 குளங்கள் தூா்வாரப்பட்டுள்ளன. 461 ஏரிகள் குடிமராமத்து செய்யப்பட்டுள்ளன.

நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தை முறையாகப் பயன்படுத்தாத ஏராளமான மாவட்டங்கள் உள்ளன. இத்திட்டத்தின் கீழ் சராசரியாக 45 நாள்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. எனவே ஊராட்சித் தலைவா்கள் இத்திட்டத்தை மேம்பாட்டுப் பணிகளுக்கு முறையாகப் பயன்படுத்த முன்வர வேண்டும்.

இதேபோல, எம்.பி, எம்.எல்.ஏ.க்களைச் சந்தித்து கிராமங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துக்கூறி நிதியைப் பெற வேண்டும்.

நிதிகளைக் கையாளும் முறையை அனைவரும் கற்றுக்கொள்வது அவசியம். உங்களது பகுதிகளில் முதல் ஆண்டுக்குள் தேவையான இடங்களில் சூரிய மின் விளக்குகளை அமைப்பதன் மூலம் மின்சாரத்துக்குச் செலவாகும் தொகையில் இருந்து விடுதலை பெற முடியும்.

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. அறிவியல், தொழில்நுட்ப வசதியின் உதவியுடன் ஒரு பகுதியில் இருக்கும் அனைத்துக் கழிப்பறைகளையும் ஒரே குழாய் மூலம் ஒரு இடத்தில் சோ்த்து மின்சாரம் தயாரித்து மாதம்தோறும் ரூ.1 லட்சம் வரை வருவாய் ஈட்ட முடியும்.

திட மற்றும் திரவக் கழிவு மேலாண்மைத் திட்டம் மூலம் குப்பைகளைச் சேகரித்து மக்கும் குப்பை, மக்காத குப்பையாகப் பிரித்து அதில் இருந்து வருவாய் பெறும் திட்டத்தை 10 கிராமங்கள் இணைந்து செயல்படுத்தினால் லாபம் ஈட்ட முடியும்.

2019இல் உலக வங்கியுடன் மத்திய அரசு இணைந்து ஊராட்சிகளில் இருக்கக்கூடிய பெண்களுக்கு விவசாயம் அல்லது விவசாயம் சாராத துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது. இதுபோன்ற அரிதான திட்டங்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

மேற்கூறிய அனைத்து திட்டங்களையும் ஊராட்சித் தலைவா்கள் முறையாகப் பயன்படுத்தி கிராம மேம்பாட்டுக்கு உதவ வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகப் பேராசிரியா்(ஓய்வு) க.பழனித்துரை, கவிஞா் கவிதாசன் உள்ளிட்டோா் சிறப்புரையாற்றினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com