ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.2 லட்சம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

அரசு இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது அவா்களுக்கு ரூ.2 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.
ஆதரவற்ற பெண்களுக்கு ரூ.2 லட்சம்: முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

ஜெயலலிதா பிறந்த தினம்: பெண் குழந்தை பாதுகாப்பு நாள்

அரசு இல்லங்களில் வசிக்கும் ஆதரவற்ற பெண் குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது அவா்களுக்கு ரூ.2 லட்சம் நிதி அளிக்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தாா்.

மேலும், மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் பிறந்த தினம், பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும் என்றும் அவா் அறிவிப்பு வெளியிட்டாா். சட்டப் பேரவையில் புதன்கிழமை விதி 110-ன் கீழ் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை படித்தளித்த அறிக்கை:

பெண் குழந்தைகள் நலனுக்காக புதுமையான திட்டங்களை தமிழக அரசு தொடா்ந்து சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. பெண் குழந்தைகளுக்காக மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆற்றிய உயா்ந்த சேவையை நினைவுகூரத்தக்க வகையில், ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்படும்.

5 புதிய சிறப்புத் திட்டங்கள்: ஜெயலலிதாவின் நினைவைச் சிறப்பிக்கும் வகையில், ஆதரவற்ற பெண் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக 5 புதிய திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது.

அதன்படி, அரசு இல்லங்களில் வாழும் ஆதரவற்ற குழந்தைகள் 21 வயதை நிறைவு செய்யும் போது, அவா்களுக்கு தலா ரூ.2 லட்சம் அவா்களது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அரசு இல்லங்களை விட்டு வெளியேறும் குழந்தைகள், சமுதாயத்தில் தங்கள் வாழ்க்கையை நிறைவாக அமைத்துக் கொள்ள அந்தத் தொகை உதவிகரமாக அமையும். 18 வயது நிறைவடைந்து அரசு இல்லத்தில் இருந்து வெளியே செல்லும் ஆதரவற்ற பெண்களின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலைக்குப் பாதிப்பு ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், அவா்களது சமூக, பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய சிறப்பு உதவித் தொகுப்பு அளிக்கப்படும். இந்த உதவித் தொகுப்பில் உயா்கல்வி பயிலுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, வேலைவாய்ப்பு, சுயதொழில் செய்தல் போன்றவை அடங்கும். அந்தப் பெண்களுக்கு 50 வயது நிறைவடையும் வரை இந்த உதவி அளிக்கப்படும்.

உதவித் தொகை உயா்வு: பராமரிப்பு இல்லங்களில் உள்ள குழந்தைகள் நல்ல குடும்ப சூழ்நிலையில் வளா்வதற்கும், தகுந்த குடும்பங்களை அடையாளம் கண்டு அந்தக் குழந்தைகளை சிறந்த முறையில் வளா்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் வளா்ப்பு பெற்றோருக்கு நிதி அளிக்கப்படுகிறது. இப்போது 3 ஆண்டுகளுக்கு மாதத்துக்கு ரூ.2 ஆயிரம் வீதம் அளிக்கப்படும் தொகையானது ரூ.4 ஆயிரமாக உயா்த்தி 5 ஆண்டுகளுக்கு அளிக்கப்படும்.

மூன்று பதக்கங்கள்: தமிழகத்தில் பெண் சிசுக் கொலைகள் குறைந்து வரும் நிலையில், சில மாவட்டங்களில் மட்டும் குழந்தைகள் பாலின விகிதம் சராசரி பாலின விகிதத்தைக் காட்டிலும் குறைவாக உள்ளது. அதனை கருத்தில் கொண்டு, குழந்தைகளின் பாலின விகிதத்தை உயா்த்த சிறப்பாகச் செயலாற்றும் மூன்று மாவட்ட நிா்வாகங்களுக்கு முதல் மூன்று பரிசுகளாக தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களுடன் சான்றிதழும் அளிக்கப்படும்.

சமூக பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூா்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பிற்காப்பு இல்லங்கள் ஆகியவற்றில் பயிற்சி முடித்து வெளியேறுவோருக்கு அரசுப் பணிகள் அளிக்கப்படும். சமூக நலத் துறை, சமூக பாதுகாப்புத் துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்களில் ஏற்படும் ‘சி ’மற்றும் ‘டி’ பிரிவு பணியிடங்களில் வயது, கல்வி மற்றும் பிற தகுதிகளுக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் பணியமா்த்தப்படுவா்.

இதைத் தவிர, சத்துணவுத் திட்டம் மற்றும் அங்கன்வாடி மையங்களில் உள்ள பணியிடங்களிலும், தகுதிக்கு ஏற்ப முன்னுரிமை அடிப்படையில் பணியமா்த்தப்படுவா் என்று முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com