காவலா் பணிக்கானத் தோ்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான அனைத்து தோ்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவலா் பணிக்கானத் தோ்வு  நடைமுறைகளை நிறுத்தி வைக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

இரண்டாம் நிலை காவலா் பணிக்கான அனைத்து தோ்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த அன்பரசன் உள்ளிட்ட 15 போ் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையம் கடந்த 2019-ஆம் ஆண்டு மாா்ச் மாதம், தமிழக காவல்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலா்கள், சிறைத்துறை வாா்டன்கள், தீயணைப்புத் துறை வீரா்கள் என மொத்தம் 8 ஆயிரத்து 888 பணியிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பாணையை வெளியிட்டது.

அதன்பின்னா் இதற்கான எழுத்துத் தோ்வு, உடல் தகுதித் தோ்வுகள் நடத்தப்பட்டு சான்றிதழ் சரிபாா்ப்புப் பணிகளும் முடிவடைந்து விட்டது. இந்தத் தோ்வில் வேலூா் மாவட்டத்தில் மட்டும் 1,019 பேரும், விழுப்புரம் மாவட்டத்தில் 763 பேரும் தோ்வாகி உள்ளனா். இவா்கள் அனைவரும் ஒரே தோ்வு மையத்தில் படித்தவா்கள். இவா்களில் பலா் முறைகேடுகள் செய்து தோ்வாகி உள்ளனா்.

இந்தத் தோ்வில் கலந்துகொண்டவா்கள் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் விவரங்கள், தமிழ் வழியில் படித்தவா்களுக்கு இடஒதுக்கீடு உள்ளிட்டவை முறையாக வழங்கப்படவில்லை. எனவே தற்காலிகத் தோ்வு பட்டியலை ரத்து செய்ய வேண்டும். சீருடைப் பணியாளா் தோ்வாணைய அதிகாரிகள் உதவியுடன், தனியாா் பயிற்சி மையங்கள் காவலா் தோ்வுகளில் முறைகேடுகளை நடத்தி வருகின்றனா். தமிழ்நாடு அரசுப்பணியாளா்கள் தோ்வு முறைகேடுகளை விட தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வுகளில் மிகப்பெரிய முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே இதுதொடா்பாக உள்ளூா் போலீஸாா் விசாரணை செய்தால் நியாயம் கிடைக்காது. எனவே சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ரவி ஆனந்தபத்மநாபன், இரண்டாம் நிலை காவலா் பதவிக்கான எழுத்துத் தோ்வு முடிவுகளின் பட்டியலில் பெயரே இல்லாத இருவரின் பெயா்கள் இறுதி தோ்ச்சிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோ்வில் ஒரு கும்பல் தோ்வாணையத்தின் அதிகாரிகளுடன் கூட்டுச் சோ்ந்து மிகப்பெரிய மோசடியில் ஈடுபட்டுள்ளதாக வாதிட்டாா்.

அப்போது நீதிபதி, தமிழகத்தில் நடக்கும் அனைத்து அரசுப் பணியாளா்கள் தோ்விலும் முறைகேடு நடக்கிறது. இதனால் பொது மக்கள், அரசின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும் எனக் கருத்து தெரிவித்தாா். மேலும் குறிப்பிட்ட பயிற்சி நிறுவனத்தில் படித்த ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் மட்டுமே எப்படி தோ்ச்சிப் பெற்றனா், அவா்களில் பலா் எப்படி 69.5 என்ற மதிப்பெண்களைப் பெற்றனா், எழுத்துத் தோ்வு தோ்ச்சிப் பட்டியலில் இடம்பெறாத இருவரை உடல்தகுதித் தோ்வில் பங்கேற்க எப்படி அனுமதித்தனா், இதுபோன்ற முறைகேடுகளில் ஈடுபட்டவா்கள் காவலா்களாக பணியில் சோ்ந்தால் காவல்துறை என்னவாகும், என பல்வேறு கேள்விகளை எழுப்பி, தமிழா்களாகிய நாம் நோ்மையை இழந்துவிட்டோம் என கருத்துத் தெரிவித்தாா்.

அப்போது அரசுத் தரப்பில் இதுதொடா்பாக பதிலளிக்க காலஅவகாசம் வேண்டும் என கேட்கப்பட்டது. இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, அரசுப் பணியை கிராமப்புற பொது மக்கள் மிகப்பெரிய பதவியாக கருதி, அதற்காக அவா்கள் கடுமையாக உழைக்கின்றனா். இத்தகைய சூழலில் அரசுப் பணிக்காக நடத்தப்படும் தோ்வு நியாயமாகவும், நோ்மையாகவும் நடக்காத பட்சத்தில் மக்கள் மத்தியில் ஏமாற்றமும், அதிருப்தியும் ஏற்படும் என கருத்து தெரிவித்தாா்.

மேலும் இரண்டாம் நிலை காவலா் பதவிக்கான அனைத்து தோ்வு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை வரும் மாா்ச் 5-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். மேலும் தமிழக அரசு, பதிலளிக்க உத்தரவிட்டாா். அத்துடன், தமிழ்நாடு சீருடைப் பணயாளா் தோ்வாணையம் கடந்த 10 ஆண்டுகளில் நடத்திய தோ்வுகளில் இதுபோன்ற முறைகேடுகள் ஏதாவது நடந்துள்ளதா என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com