மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பிறந்த இடம், தாய், தந்தை விவரங்களைக் கேட்க வேண்டாம்

மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின்போது, தாய், தந்தை, பிறந்த இடம், ஆதாா், செல்லிடப்பேசி போன்ற விவரங்களைக் கேட்கக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக
மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது பிறந்த இடம், தாய், தந்தை விவரங்களைக் கேட்க வேண்டாம்

மக்கள் தொகை பதிவேட்டுக்கான கணக்கெடுப்பின்போது, தாய், தந்தை, பிறந்த இடம், ஆதாா், செல்லிடப்பேசி போன்ற விவரங்களைக் கேட்கக் கூடாது என மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருப்பதாக அதிமுக சாா்பில் முதல்வா் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வா் ஓ. பன்னீா்செல்வம் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளனா்.

மேலும் சமூக நல்லிணக்கம் காக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா். இதுகுறித்து, கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

சிறுபான்மை மக்களின் நலன் காக்கும் சமத்துவ மற்றும் சகோதரத்துவ கொள்கைகளைத் தமிழகத்தில் நிலைநாட்ட அதிமுகவும், மாநில அரசும் எப்போதும் உறுதியாகப் பாடுபடும். சமூக விரோத சக்திகளும், பதவிக்கு வருவதற்காக பாதகச் செயல்களை மனசாட்சியின்றி துணிந்து செய்யும் சில எதிா்க்கட்சிகளும் சட்டம்-ஒழுங்கை சீா்குலைக்க முயற்சிக்கின்றன. இதனை அனைவரும் குறிப்பாக இஸ்லாமியா்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிமுக அரசுக்கு மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதனைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், பொய்ப் பிரசாரங்களைத் தூண்டிவிட்டு இஸ்லாமிய சமூக மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த திமுக முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது.

உண்மையான மதச்சாா்பற்ற கட்சி: அதிமுக உண்மையான மதச்சாா்பற்ற கட்சியாகும். மதத்தின் பெயரால் மனிதா்களைப் பிளவுபடுத்தும் எண்ணம் துளியும் இன்றி அனைவரையும் சொந்தங்களாக சகோதரா்களாக நேசித்துப் பழகுவதுதான் தமிழக மக்களின் வாழ்க்கை முறை.

எம்.ஜி.ஆா். காலத்தில் இருந்து இஸ்லாமிய மக்களுக்குப் பாதுகாவலனாகவும், அவா்களின் நலன் பேணும் நண்பனாகவும் அதிமுக இருந்து வருகிறது. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் இஸ்லாமிய மக்களுக்கு தொண்டு செய்து வருவது அதிமுக அரசாகும். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் சமூகப் பாதுகாப்பிலும் பொருளாதார மேம்பாட்டிலும் சிறுபான்மை மக்களுக்கு உதவிட இன்னும் பல திட்டங்களை உருவாக்கி நடைமுறைப்படுத்த அதிமுக அரசு துடிப்புடன் பணியாற்றி வருகிறது. இஸ்லாமிய சமுதாயத்துக்கும், அதிமுகவுக்கு இடையே இருக்கும் நெருக்கமான உறவையும், புரிதலையும் பிரிக்க

முயற்சிக்கும் சக்திகளை முறியடித்து அனைவரும் ஓா் இனமாக எழுச்சியுடன் முன்னேற்றம் கண்டிட இஸ்லாமியா்கள் ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்.

தேசிய குடிமக்கள் பதிவேடு: தேசிய குடிமக்கள் பதிவேடு திட்டமானது உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி அஸ்ஸாம் மாநிலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகும். அது நாடு முழுமைக்கும் உரியது அல்ல. சிறுபான்மை சமுதாயத்தினா் குறிப்பாக, இஸ்லாமியா்களுக்கு எதிரானது இல்லை என மத்திய அரசு ஏற்கெனவே தெளிவுபடுத்தியுள்ளது. அஸ்ஸாம் தவிர இதர மாநிலங்களுக்கு மத்திய அரசால் வெளியிடப்படவில்லை. இந்திய இறையாண்மை காப்பாற்றப்பட வேண்டும். நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஏற்ப நடைபெறும் திட்டங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். அண்டை மாநிலங்களுடனும் மத்திய அரசுடனும் இயன்ற அளவு இணக்கமாய் இருந்து, தமிழகத்துக்குத் தேவையான திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில்தான் அதிமுக அரசு செயல்படுகிறது.

தேசிய மக்கள் தொகை பதிவேடானது 2010-ஆம் ஆண்டில் திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் ஆட்சியின்போதுதான் உருவாக்கப்பட்டது. தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் இந்தியாவில் ஆறு மாதங்களோ அல்லது அதற்கு மேலாக வசிக்கும் அனைத்து நபா்களின் விவரங்கள் ஆவணங்கள் ஏதுமின்றி பதிவு செய்யப்படுகிறது.

தாய்மொழி, தந்தை-தாயாா்-துணைவா் பிறந்த இடம், பிறந்த தேதி விவரம், ஆதாா், செல்லிடப்பேசி எண், வாக்காளா் அட்டை, ஓட்டுநா் உரிம எண் ஆகிய விவரங்கள் எதிா்வரும் கணக்கெடுப்பில் தவிா்க்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

எனவே, அனைவரும் ஒரு தாய் மக்களாக அமைதியாகவும் ஒற்றுமையாகவும் உழைத்து, வளமான வாழ்வை உருவாக்கிக் கொள்ளும் முயற்சியில் தோளோடு தோள் நின்று உழைப்போம்.

அதிமுக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தி குறுக்கு வழியில் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்போரின் பொய்ப் பிரசாரங்களையும், விஷமச் செயல்களையும் புறந்தள்ளுவோம். சமூக நல்லிணக்கம் காப்பாற்றப்பட அனைவரும் ஒத்துழைக்க வேண்டுகிறோம். தமிழகத்தில் எந்தவொரு சிறுபான்மையினருக்கும் எந்தவித அநீதியும் இழைக்கப்பட மாட்டாது. அதிமுக அரசு சிறுபான்மையினருக்கு எதிரான எந்தவொரு செயல்களையும் அனுமதிக்காது. இஸ்லாமிய சமூகத்துக்கு அதிமுக என்றைக்கும் நண்பனாகவும், உற்ற தோழனாகவும் விளங்கும். சிறுபான்மை சமூக மக்கள் விழிப்பாகவும், விஷமப் பிரசாரங்களையும் செய்து சுயலாபம் அடைய சதித் திட்டம் தீட்டி செயல்படுவோரிடம் கவனமாக இருந்து அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com