புதுக்கோட்டையில் நிஜமான 'திருவிழா'! இன்றுடன் நிறைவு

புதுக்கோட்டையில் கடந்த 10 நாட்களாக நிஜமான திருவிழாவாகக் களைகட்டிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
புதுக்கோட்டையில் நிஜமான 'திருவிழா'! இன்றுடன் நிறைவு

புதுக்கோட்டையில் கடந்த 10 நாட்களாக நிஜமான திருவிழாவாகக் களைகட்டிய 4ஆவது புதுக்கோட்டை புத்தகத் திருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன்  நிறைவடைகிறது. 

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் 4ஆவது ஆண்டாக புத்தகத் திருவிழா புதுக்கோட்டை நகர்மன்றத்தில் கடந்த பிப்.14ஆம் தேதி தொடங்கியது. 10ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் (பிப். 23) இந்தப் புத்தகத் திருவிழா நிறைவு பெறுகிறது.

தமிழ்நாடெங்கும் புத்தகக் கண்காட்சிகள் கடந்த 10 ஆண்டுகளில் பெருமளவில் அதிகரித்திருக்கின்றன. மாநிலத்தில் பெரிய அளவாகக் கருதப்படும் சென்னையில் நீண்டகாலமாக "பபாசி' சார்பில் நடத்தப்படும் கண்காட்சி கூட, "புத்தகக் கண்காட்சி' என்றுதான் அழைக்கப்படுகிறது- திருவிழா என்றல்ல!

அதன்பிறகு, ஈரோட்டில் மக்கள் சிந்தனைப்பேரவையின் புத்தகத் திருவிழா குறிப்பிடத்தக்க ஒன்று. தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைப் பொருத்தவரை ஏறத்தாழ 20 மாவட்டங்களில் புத்தகத் திருவிழாக்களை நடத்துகிறது.

அதென்ன திருவிழா? இந்தக் கேள்விக்கு பதில் இல்லாமல் இல்லை.

புதுக்கோட்டையில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பே திருவிழா தொடங்கியது. அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் பங்கேற்கும் வகையிலான ஒரு லட்சம் பேர் வாசிக்கும் 'புதுக்கோட்டை வாசிக்கிறது' நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு தனியே போட்டிகள், கல்லூரி மாணவர்களுக்குத் தனியே போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. படைப்பாளர்களுக்கு சிறந்த கவிதை, சிறுகதைப் போட்டியும் உண்டு.

இவை மட்டுமல்ல, மாநில அளவிலான சிறந்த நூல்களுக்கு தலா ரூ. 5 ஆயிரம் ரொக்கப் பரிசுடன் விருதுகளும் வழங்கப்படுகின்றன.

"செல்பி' திருவிழா...

நூல்களை வாங்குவோர் தாங்கள் வாங்கிய நூலுடன் "செல்பி' (சுயபடம்) எடுத்து 'புத்தகத் திருவிழாவுக்கு வாருங்கள்' என பொதுவான அழைப்பு விடுத்து தங்களின் முகநூல் (பேஸ்புக்) பக்கத்தில் பதிவிட்டால், சிறந்த பதிவுக்கு ரூ. 10 ஆயிரம் முதல் பரிசு, 10 பேருக்கு ரூ. 1000 பரிசு, 100 பேருக்கு ரூ. 100 பரிசு. அநேகமாக 'செல்பி பரிசு' புதுக்கோட்டையின் முதல் அறிமுகம். திருப்பூரில் 'செல்பி கார்னர்' உண்டு. படம் எடுத்துக் கொள்ள தனிப் பகுதி. ஆனால் பரிசு இங்கு மட்டுமே!

சென்னைப் புத்தகக் கண்காட்சியில் நூல் அரங்குகளைவிட, அப்பளம், பஜ்ஜி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது என்ற விமர்சனம் சமூக ஊடகங்களில் குறிப்பிடத்தக்க படைப்பாளர்களால் முன்வைக்கப்பட்டது. புதுக்கோட்டையில் அப்பளக் கடையே கிடையாது.

தினமும் சிறப்புச் சொற்பொழிவு: கு. சிவராமன், பழ. கருப்பையா, பர்வீன் சுல்தானா, யுகபாரதி, த.வி. வெங்கடேஸ்வரன் என ஆகச்சிறந்த பேச்சாளர்கள் புதுக்கோட்டையில் பேசினர். ஏறத்தாழ எல்லோருமே சொல்லி வைத்தாற்போல 'புதுக்கோட்டையை புத்தகக் கோட்டையாக்கும் முயற்சியாக நடைபெறும் இந்தத் திருவிழாவில்' என்றுதான் தொடங்கினார்கள்.

சொற்பொழிவுகளுக்கு முன்னதாக மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்களின் நேர்த்தியான கலை நிகழ்ச்சிகள் (பெயருக்கு ஒரு நிகழ்ச்சி என்றல்ல) இடம்பெற்றன. அவர்களுக்கெல்லாம் மேடையில் சிறப்பு விருந்தினர் கையால் சான்றிதழும் வழங்கப்பட்டது. நீண்டகாலம் வீடுகளில் நினைவாக நிற்கும் குழுப் புகைப்படங்களும்!

தினமும் மாணவர் கூட்டம்...

பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டு மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து பகலில் அழைத்து வரப்பட்டனர். ஏறத்தாழ இந்தப் புத்தகத் திருவிழாவில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் மட்டும் வந்து சென்றிருக்கலாம். சில நாட்கள் நகர்மன்றச் சாலையில் கடுமையான போக்குவரத்து நெருக்கடி கூட ஏற்பட்டது. 

அரங்குகளில் மாணவர் கூட்டம் நிரம்பி வழியவே, தினமும் அறிவியல் இயக்கத்தின் தலைவர்கள் மாணவர்களுக்கு அறிவியல் பாடங்களை பகலிலும் எடுக்கத் தொடங்கிவிட்டனர்.

இவை மட்டுமல்ல...

புத்தகத் திருவிழா வளாகத்திலேயே புதுக்கோட்டை நாணயவியல் கழகத்தின் நாணயக் கண்காட்சியும் நடத்தப்பட்டது. வான்வெளியின் அற்புதங்களைக் காட்டும் கோளரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. தொல்லியல் துறையின் கீழடி அரங்கு தனியாக மாதிரியுடனும், சிறு குறும்படக் காட்சியுடனும் அமைக்கப்பட்டிருந்தது. இம்மூன்றிலும் பகலில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததைக் காண முடிந்தது.

இப்படித்தான் இந்தத் திருவிழா கடந்த 9 நாட்களாக நடந்தது. அதனால்தான் இது திருவிழா என்றழைக்கப்படுகிறது. அறிவியல் இயக்கத்தின் தலைவர்கள் 5 பேரைக் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவுடன் 100 பேர் கொண்ட குழு பரபரப்பாக இயங்குகிறது.

முன்னதாக, எல்லா வட்டங்களிலும் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தியிருக்கின்றன. அந்தந்தப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள், ஏதோ திருமண விழாவுக்கு வந்து உணவருந்திவிட்டு மொய் கொடுத்துச் செல்வதைப் போல, கணிசமான தொகையை திருவிழாவுக்கான பங்களிப்பாக ஒருங்கிணைப்பாளர்களிடம் கொடுத்து ரசீது பெற்றுச் சென்ற காட்சியையும் காண முடிந்தது.

10ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ், திருச்சி மக்களவைத் தொகுதி எம்பி சு. திருநாவுக்கரசர் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

புதுக்கோட்டை மக்கள் அடுத்த 5ஆவது புத்தகத் திருவிழாவை ஆர்வத்தோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். அறிவுக் கொண்டாட்ட மனப்பான்மை நல்லதுதானே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com