ஆனைமலைக் காடுகளில் தொடரும் அத்துமீறல்கள்!

ஆனைமலைக் காடுகளில் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்று வருவதால் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  
ஆனைமலைக் காடுகளில் தொடரும் அத்துமீறல்கள்!

பொள்ளாச்சி: ஆனைமலைக் காடுகளில் தொடர்ந்து பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்று வருவதால் தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி, திருப்பூர் என இரண்டு கோட்டங்களாகச் செயல்பட்டு வருகிறது. இதில் பொள்ளாச்சிக் கோட்டம், பொள்ளாச்சி, உலாந்தி, வால்பாறை, மானாம்பள்ளி, உடுமலை, அமராவதி என 6 வனச் சரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 

958 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகமானது புலி, சிறுத்தை, யானை, வரையாடு, பல வகையான பறவைகள், மான்கள், ராஜநாகம் உள்ளிட்ட பல்லுயிரினங்களின் சிறந்த வாழிடமாக உள்ளது. இருந்தபோதும் பல்வேறு அத்துமீறல்கள் நடைபெறுவதால் தற்போது வன உயிரினங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.  

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் குழிப்பட்டி, குறுமலை, மாவட்டப்பு ஆகிய பகுதிகளில் சுமார் 4,500 ஏக்கர் பரப்பளவில் சந்தனக் காடுகள் இருந்தன. இங்கு சந்தன மரங்கள் சிலவற்றை வனத் துறை அதிகாரிகள் உதவியுடன் 2009-ஆம் ஆண்டில் சிலர் கடத்தினர். 4,500 ஏக்கர் பரப்பளவில் இருந்த சந்தன மரங்களும் முழுமையாக வெட்டிக் கடத்தப்பட்ட பிறகே இந்தக் கடத்தல் வெளியில் தெரியவந்தது.

சந்தன மரங்கள் வெட்டப்பட்ட பகுதிகளில் அப்போது சைலேந்திரபாபு தலைமையிலான அதிரடிப் படையினர் முகாம் அமைத்த பிறகே சந்தனமரக் கடத்தல் கும்பலின் நடமாட்டம் குறைந்தது. 2009-ஆம் ஆண்டு அதிரடிப் படையினர் முகாம் அமைக்க வனப் பகுதிக்குள்  சென்றபோது ஒரு சந்தன மரம்கூட எஞ்சியிருக்கவில்லை.

உலாந்தி வனச் சரகத்தில் 2012-ஆம் ஆண்டில்  கத்தி, பேட்டரி, ஒயர் உள்ளிட்டவை கிடந்தன. புலிகள் வேட்டைக்காக இதைப் பயன்படுத்தினரா அல்லது தீவிரவாதிகள் நடமாட்டமா என்பது குறித்து ஆய்வு செய்ய மீண்டும் அதிரடிப் படையினர் ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் சில நாள்களாக தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் யாரும் சிக்கவில்லை. 

ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதிகளில் யானைகள் மர்மமான முறையில் உயிரிழப்பது தொடர்கிறது. 2016-ஆம் ஆண்டில் உடுமலை பகுதியில் யானைகள் வேட்டையாடப்பட்டு தந்தங்கள் கடத்தப்பட்டன. பொள்ளாச்சி வனச் சரகத்தில் யானைகளைக் கொன்று தந்தங்களை வேட்டையாடியவர்களுக்குப் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது. 

உலாந்தி வனச் சரகத்தில் 2012-இல் 1,400-க்கும் மேற்பட்ட தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டன. இதுகுறித்து அந்தக் காலகட்டத்தில் ஆனைமலை புலிகள் காப்பகத் தலைமை வனப் பாதுகாவலராக இருந்த மனோஜ்குமார் சர்க்காருக்கு சில ஆதாரங்கள் சிக்கின. 

ஆனைமலைக் காடுகளில் விதிகளை மீறி பாறைகள் உடைக்கப்பட்டு வனப் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரிக்க, அப்போது உதவி வனப் பாதுகாவலராகப் பணியாற்றிய ராகுல், பொள்ளாச்சி வனச் சரக அலுவலராக இருந்த கணேஷ்ராம் ஆகியோரை ஆய்வு அதிகாரிகளாக மனோஜ்குமார் சர்க்கார் நியமித்தார்.

அவர்கள் நடத்திய ஆய்வில், மரங்கள் வெட்டப்பட்டதும், முறைகேடாக தடுப்பணைகள் கட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது. தடுப்பணைகள் கட்டியதில் பல லட்ச ரூபாய் ஊழல் நடைபெற்றதும் தெரியவந்தது. அதன்பிறகு தமிழக அரசு நியமித்த சிறப்புக் குழுவும் ஆய்வு நடத்தி மரங்கள் வெட்டப்பட்டதை உறுதி செய்தது. இதையடுத்து உலாந்தி வனச் சரகத்தில் பணிபுரிந்த வனத் துறையினர் அனைவரும் இடமாற்றம் செய்யப்பட்டனர். 

பொள்ளாச்சி, உடுமலை வனச் சரகங்களில் வன விலங்குகளைக் கணக்கெடுக்கப் பொருத்தப்பட்ட தானியங்கி கேமராக்கள் திருடப்பட்டுள்ளன. இதுகுறித்து ஆழியாறு, தளி காவல் நிலையங்களில் வனத் துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

2018-ஆம் ஆண்டில் பொள்ளாச்சி வனச் சரகத்தில் சிறுத்தை வேட்டையாடப்பட்டது; யானைகள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளன. உயிரிழந்த வன விலங்குகளை பிரேதப் பரிசோதனை செய்வதில் குளறுபடி இருந்துவருகிறது. 

கடந்த ஆண்டு ஆனைமலை புலிகள் காப்பகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியதில் வனச் சரக அலுவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட வனச் சரக அலுவலர், உயரதிகாரிகளுக்காக லஞ்சம் வாங்கியதாகக் கூறியுள்ளார். சமீபத்தில் வேட்டைத் தடுப்புக் காவலர்களின் ஊதியத்தில் முறைகேடு நடந்தது தொடர்பாக சென்னையில் இருந்து வந்த கூடுதல் தலைமை வனப் பாதுகாவலர் ஆய்வு நடத்திச் சென்றார். 

டைகர் ஃபவுண்டேஷனில் இருந்து ஒதுக்கப்பட்ட நிதியில் வேட்டைத் தடுப்புக் காவலர்கள், வாட்சர்கள் போன்றோர் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்தது போன்று கணக்குக் காண்பித்து அந்த நிதியில் முறைகேடு செய்த புகாரில் சிக்கிய மாவட்ட வன அலுவலர் மாரிமுத்து வேறு இடத்துக்கு பணி மாறுதலாகிச் சென்றுள்ளார்; பொள்ளாச்சி மாவட்ட வன அலுவலராக ஆரோக்கியராஜ் சேவியர் பணியில் சேர்ந்துள்ளார். பொள்ளாச்சி கோட்டத்தில் இவருக்கு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன.

கூடுதல் வனப் பகுதிகளை இணைக்கத் திட்டம்?  இப்படி தொடர் அத்துமீறல்கள் நடைபெற்றுவரும் நிலையில், ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் கொடைக்கானல், பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கூடுதல் வனப் பகுதிகளை இணைத்து கூடுதலாக இரண்டு வனச் சரகங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆனைமலை புலிகள் காப்பகத்துடன் கூடுதல் பகுதிகளை இணைக்க நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், பல்வேறு அத்துமீறல்கள் நடைபெற்று வருவதற்கு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.    

இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் வினோத்குமார், சுரேஷ்குமார் ஆகியோர் கூறுகையில், ""ஆனைமலை புலிகள் காப்பகத்தில் சந்தனமரக் கடத்தல், சிறுத்தை வேட்டை,  யானைகள் மர்மச் சாவு, மரங்கள் கடத்தல் எனப் புகார்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. சமீபத்தில் ஊதிய முறைகேடு புகாரும் எழுந்துள்ளது. இது குறித்து அரசு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.

புதிதாகப் பொறுப்பேற்றுள்ள மாவட்ட வன அலுவலர் ஆரோக்கியராஜ் சேவியரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, ""பொள்ளாச்சி கோட்டத்தில் வனப் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படும். பொள்ளாச்சி வனக் கோட்டத்தில் முறைகேடுகள் நடந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com