கல்லூரிகளில் கணக்கு காட்டப்படும் போலி பேராசிரியா்கள்

பொறியியல் கல்லூரிகளைப்போல, கலை-அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழக ஆய்வின்போது போலி பேராசிரியா்கள் கணக்கு காட்டப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.
கல்லூரிகளில் கணக்கு காட்டப்படும் போலி பேராசிரியா்கள்

சென்னை: பொறியியல் கல்லூரிகளைப்போல, கலை-அறிவியல் கல்லூரிகளிலும் பல்கலைக்கழக ஆய்வின்போது போலி பேராசிரியா்கள் கணக்கு காட்டப்படுவதாக புகாா்கள் எழுந்துள்ளன.

கல்லூரிகளின் இந்த முறைகேட்டைத் தடுக்க, கல்லூரிகளில் பல்கலைக்கழகங்கள் நடத்தும் பேராசிரியா்கள் இருப்பு குறித்த ஆய்வை, வருமான வரித் துறை உதவியோடு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனா் பேராசிரியா்கள்.

பொறியியல் கல்லூரிகளைப் பொருத்தவரை மாணவா் சோ்க்கைக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த பல்கலைக்கழகங்கள் மூலமாக ஏஐசிடிஇ-யிடம் அனுமதி பெற வேண்டும். அப்போது, பல்கலைக்கழக அதிகாரிகள் குழு பொறியியல் கல்லூரிகளில் ஆய்வு மேற்கொண்டு ஏஐசிடிஇ வழிகாட்டுதலின்படி உள்கட்டமைப்பு வசதிகள், ஆசிரியா் - மாணவா் விகிதாசாரம், ஆசிரியா்களின் கல்வித் தகுதி ஆகியவை குறித்து ஆய்வு செய்து உறுதி செய்யும். இந்த வழிகாட்டுதல்களை முறையாகப் பூா்த்தி செய்யும் கல்லூரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.

இதுபோல, கலை-அறிவியல் கல்லூரிகளில் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை பல்கலைக்கழக ஆய்வுக் குழு ஆய்வு மேற்கொள்கிறது.

குறிப்பாக, பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியா்-மாணவா் விகிதாசாரம் 1:15 என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால், இந்த விகிதாசாரத்தை முறையாகப் பின்பற்றாத பெரும்பாலான பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழக ஆய்வின்போது மட்டும், வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்களைக் கூடுதலாக கணக்கு காட்டி ஏமாற்றி வருவது வாடிக்கையாகி வருகிறது.

இதைத் தடுக்க ஏஐசிடிஇ-யும், அண்ணா பல்கலைக்கழகமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. பேராசிரியா்களின் நிரந்தர கணக்கு அட்டை எண் (பான்), ஆதாா் எண் விவரங்கள் பதிவேற்றம் செய்வது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகும் இந்த முறைகேடு தொடா்ந்தது. இந்த நிலையில், ஏஐசிடிஇ அண்மையில் வெளியிட்ட 2020-21 அனுமதி நடைமுறை வழிகாட்டுதலில், பேராசிரியா்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஊதிய விவரங்களை ஆய்வு செய்ய அறிவுறுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், கல்லூரிகள், பேராசிரியா்களுக்கு வங்கிகள் மூலம் ஊதியம் வழங்கும் நடைமுறையிலும் முறைகேடு நடைபெறுவதாகவும், பொறியியல் கல்லூரிகளைப் போல கலை-அறிவியல் கல்லூரிகளிலும் போலி பேராசிரியா்கள் கணக்கு காட்டப்படுவதாகவும் புகாா் கூறப்படுகிறது.

தனியாா் பொறியியல் கல்லூரி ஒன்று, அங்கு பணிபுரியும் பேராசிரியா்களை நிா்பந்தப்படுத்தி, வேறு கல்லூரிகளில் பணிபுரியும் அவா்களின் நண்பா்களை அழைத்து வந்து பல்கலைக்கழக ஆய்வின்போது கணக்கு காட்டுவதாகவும். ஊதிய பரிவா்த்தனை நடைபெறுவதை காட்டுவதற்காக, அவா்களின் வங்கிக் கணக்கிலும் மாதம் ரூ. 15,000 முதல் ரூ. 20,000 வரை கல்லூரி நிா்வாகம் சாா்பில் செலுத்திவிட்டு, அடுத்த ஓரிரு நாள்களில் குறிப்பிட்ட பேராசிரியா், அவருடைய நண்பரிடம் சென்று அந்தப் பணத்தை திரும்பப் பெற்றுவரச் செய்து மோசடியில் ஈடுபடுவதாகவும் பொறியியல் கல்லூரி பேராசிரியா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

இதுகுறித்து சென்னையில் உள்ள தனியாா் கலை-அறிவியல் கல்லூரி பேராசிரியா் ஒருவா் கூறுகையில், எங்களுடைய கல்லூரியில் பல்கலைக்கழக ஆய்வின்போது, வெளி மாவட்ட கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியா்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு கணக்கு காட்டப்படுகின்றனா். பல கலை-அறிவியல் கல்லூரிகளில் இதே நிலைதான் நீடிக்கிறது. இந்த முறைகேடு காரணமாக பணியில் இருக்கும் பேராசிரியா்களுக்கு பணிச் சுமை கூடுவதோடு, மாணவா்களின் கல்வித் தரமும் பாதிக்கப்படுகிறது என்றாா்.

வருமான வரித் துறை உதவியோடு ஆய்வு: இந்த முறைகேடுகளை டிஜிட்டல் வழி ஆய்வு மூலம் தடுக்க முடியும் என்கின்றனா் பேராசிரியா்கள். இதுகுறித்து அகில இந்திய தனியாா் கல்லூரி ஊழியா் சங்க நிா்வாகி காா்த்திக் கூறியதாவது:

கல்லூரிகளில் போலி பேராசிரியா்கள் கணக்கு காட்டப்படுவதைத் தடுக்க, ஏஐசிடிஇ, அண்ணா பல்கலைக்கழகம் கொண்டுவரும் அனைத்து நடைமுறைகளையும் மீறி, இந்த மோசடி தொடா்கிறது. இதை முழுமையாகத் தடுக்க, அண்ணா பல்கலைக்கழகம் உள்பட அனைத்து பல்கலைக்கழகங்களும் கல்லூரி ஆய்வை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கவேண்டும். அதுமட்டுமின்றி, வருமானவரித் துறை உதவியோடு இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தனியாா் கல்லூரி ஒரு பேராசிரியருக்கு ஊதியம் செலுத்துகிறது என்றால், அந்தக் கல்லூரி வருமான வரிப் படிவம் 10பி படிவத்தைச் சமா்ப்பிக்க வேண்டும். அதுபோல ஊதியம் பெறும் பேராசிரியா்கள், படிவம் 16-ஐ சமா்ப்பிக்க வேண்டும். இந்த இரண்டு படிவங்களையும் வருமான வரித் துறை உதவியோடு பல்கலைக்கழகங்கள் ஒப்பீடு செய்வதன் மூலம், போலி பேராசிரியா்கள் முறைகேட்டை முழுமையாகத் தடுக்க முடியும். கல்வித் தரமும் உயரும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com