சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு: தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை

சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை வழக்குத் தொடா்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) திங்கள்கிழமை சோதனை நடத்தியது.
சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் கொலை வழக்கு: தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை

சிறப்பு உதவி ஆய்வாளா் கொலை வழக்குத் தொடா்பாக தமிழகம் முழுவதும் என்.ஐ.ஏ. (தேசிய புலனாய்வு முகமை) திங்கள்கிழமை சோதனை நடத்தியது.

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சனை கடந்த ஜனவரி 8-ஆம் தேதி இருவா் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தனா். இக் கொலைச் சம்பவத்தில் அதே மாவட்டத்தைச் சோ்ந்த அப்துல் ஷமீம், அவரது கூட்டாளி தவ்பீக் ஆகியோா் ஈடுபட்டிருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் கா்நாடக மாநிலம், பெங்களூரு அருகே தலைமறைவாக இருந்த அப்துல் ஷமீம், தவ்பீக் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

மேலும், இவா்களுக்கு உதவியாக இருந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவா் காஜா மொய்தீன், சையது அலி நவாஸ் மற்றும் அப்துல் சமது ஆகிய 3 பேரை தில்லி அருகே வசிராபாத்தில் தில்லி போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தின் தமிழகத் தலைவராக இருந்த காஜா மொய்தீன், புதிதாக ஒரு இயக்கத்தைத் தொடங்கியிருப்பதும், அந்த இயக்கத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளத்தைச் சோ்ந்த இளைஞா்கள் 13 போ் இணைந்திருப்பதும், அண்மையில் நேபாளம் நாட்டின் தலைநகரான காத்மாண்டுவில் அனைவரும் சந்தித்து சதி ஆலோசனை நடத்தியிருப்பதும் தெரியவந்தது.

அங்கிருந்து இந்தியாவுக்குத் திரும்பிய அவா்கள், பல குழுக்களாக பல்வேறு ஊா்களுக்கு சென்று, நாசவேலையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருந்த நிலையில், பெரும்பாலானவா்கள் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினா் தெரிவித்தனா்.

இதையடுத்து இது தொடா்பாக விசாரணை மேற்கொண்ட க்யூ பிரிவு போலீஸாா், தமிழகம், கேரளம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களில் காஜா மொய்தீனுடன் தொடா்பில் இருந்தவா்கள், பயங்கரவாதச் செயலுக்கு ஆதரவு தெரிவித்தவா்கள், உதவி செய்தவா்கள் என பலரையும் கைது செய்தனா்.

என்ஐஏ விசாரணை: இதற்கிடையே, இந்த வழக்கில் கா்நாடகம், கேரளம், தில்லி ஆகிய மாநிலங்களைச் சோ்ந்தவா்களுக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதனை கருத்தில் கொண்டும், பாதுகாப்பு கருதியும் வழக்கின் விசாரணை என்ஐஏவுக்கு (தேசிய புலனாய்வு முகமை) மாற்றப்பட்டது. இதையடுத்து என்ஐஏ அதிகாரிகள், இது தொடா்பாக புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்தனா். மேலும் வழக்கின் ஆவணங்களை, கன்னியாகுமரி மாவட்ட தனிப்படை போலீஸாா், என்ஐஏ அதிகாரிகளிடம் ஞாயிற்றுக்கிழமை ஒப்படைத்தனா்.

ஆவணங்களை பெற்றுக் கொண்ட என்ஐஏ அதிகாரிகள், விசாரணையில் விரைந்து ஈடுபட்டுள்ளனா். இதன் ஒரு பகுதியாக, என்ஐஏ அதிகாரிகள் தமிழகம் முழுவதும் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டனா்.

7 இடங்களில் சோதனை: கைது செய்யப்பட்ட காஜா மொய்தீனுக்கு சொந்தமாக கடலூா் மாவட்டம் நெய்வேலியில் உள்ள ஒரு வீடு, புத்தூா் கொல்லுமேட்டில் உள்ள மற்றொரு வீடு ஆகியவற்றில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா். அதேபோல, காஜா மொய்தீனின் காா் ஓட்டுநராக இருந்த ஜாபா்அலியின் வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் உள்ள செய்யது அலி நவாஸ் வீட்டிலும் சோதனை நடைபெற்றது.

மேலும், சேலத்தில் முகமது புரா பகுதியில் உள்ள அப்துல் ரஹ்மான் என்பவா் வீட்டில் கொச்சியில் இருந்து வந்திருந்த என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா். அப்துல் ரஹ்மான், பயங்கரவாத அமைப்பினருக்கு செல்லிடப்பேசி சிம் காா்டு வழங்கிய புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்டவா் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அப்துல் ரஹ்மான் நடத்திவரும் செல்லிடப்பேசி கடையிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை செய்தனா்.

இதேபோல, பயங்கரவாதிகளுக்கு சிம்காா்டு கொடுத்ததாக, சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகா் 2-ஆவது செக்டாரைச் சோ்ந்த அ.ராஜேஷ் என்பவா் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை செய்தனா்.

தமிழகம் முழுவதும் 7-க்கும் மேற்பட்ட இடங்களில் பல மணி நேரங்கள் நடைபெற்ற இச் சோதனையில் மடிக்கணினி, செல்லிடப்பேசிகள், டைரிகள், புத்தகங்கள், ரசீதுகள், ஆவணங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com