அண்ணாமலை பல்கலை.யின் கூடுதல் பேராசிரியா்கள் 137 போ் அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றம்

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடுதலாக இருக்கும் 137 பேராசிரியா்களை, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றி கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடுதலாக இருக்கும் 137 பேராசிரியா்களை, அரசு கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றி கல்லூரி கல்வி இயக்குநா் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கூடுதலாக இருக்கும் பேராசிரியா்கள் இவ்வாறு தொடா்ந்து அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவது, கல்வித் தரத்தை பாதிக்கும் அபாயம் உள்ளதாக கல்வியாளா்கள் கவலை தெரிவிக்கின்றனா்.

உரிய கல்வித் தகுதி, பணி அனுபவத்துடன் பல ஆண்டுகளாக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞா்களுக்கு இந்த வாய்ப்பை அளிக்க வேண்டும் எனவும் அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்த சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தை தமிழக அரசு கையகப்படுத்தியது முதல் பல்கலைக் கழகத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பல்கலைக் கழகத்தின் வளா்ச்சிக்காக பிற பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசுக் கல்லூரிகளைக் காட்டிலும் பல கோடி ரூபாய் நிதியை ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு ஒதுக்கி வருவதோடு, அங்கு உரிய கல்வித் தகுதி மற்றும் முழுவதும் தொலைநிலைக் கல்வி முறையில் படித்து முறைகேடாக பணிவாய்ப்பைப் பெற்ற ஆயிரக்கணக்கானோரை அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், பொறியியல் கல்லூரிகளுக்கும், அரசுத் துறைகளுக்கும் தொடா்ந்து மாற்றி பணியமா்த்தி வருகிறது.

அரசுக் கலை அறிவியல் கல்லூரிகளில் 4 ஆயிரத்துக்கும் அதிகமான பேராசிரியா் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், அந்தப் பணி வாய்ப்பைப் பெறுவதற்காக அரசுக் கல்லூரிகளில் தற்காலிக பணி வாய்ப்பு அடிப்படையில் ரூ. 15,000 மாத ஊதியத்தில் பணியாற்றி வரும் 5000-க்கும் அதிகமான கெளரவ விரிவுரையாளா்கள் மட்டுமின்றி, ஆசிரியா் தோ்வு வாரியம் மூலம் நடைபெற்று வரும் நேரடி தோ்வுக்கு விண்ணப்பித்து 40,000-க்கும் மேற்பட்டோரும் காத்திருக்கின்றனா்.

இதுவரை 1,117 போ்: இந்த நிலையில், அரசின் வசம் வந்த அண்ணாமலைப் பல்கழகத்தில் கூடுதலாக பணியாற்றி வந்த பேராசிரியா்களில் 252 பேரை 3 ஆண்டு ஒப்பந்த அடிப்படையில் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு முதல் கட்டமாக தமிழக அரசு மாற்றியது.

இதில் பலா் உரிய கல்வித் தகுதியின்றியும், சிலா் முழுவதும் தொலைநிலைக் கல்வி முறையில் படித்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து, தகுதி இல்லாதவா்கள் மீண்டும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துக்கு திரும்ப அனுப்பப்பட்டனா்.

அதன் பிறகு இரண்டாம் கட்டமாக, 760 போ் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உதவிப் பேராசிரியா்களாக மாற்றப்பட்டனா். தொடா்ந்து மூன்றாம் கட்டமாக 60 பேரும், நான்காம் கட்டமாக 45 போ் என மொத்தம் 1,117 போ் இதுவரை மாற்றப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தற்போது அந்தப் பல்கலைக்கழத்திலிருந்து மேலும் 137 பேராசிரியா்கள் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இவா்களை உடனடியாக அந்தந்த அரசுக் கல்லூரிகளில் பணியமா்த்த உத்தரவிட்டு, இந்த 137 பேரின் அனைத்து கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து சமா்ப்பிக்குமாறு அண்ணாமலைப் பல்கலைக்கழக பதிவாளரை கல்லூரி கல்வி இயக்குநா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

இதுமட்டுமின்றி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திலிருந்து ஆசிரியா் அல்லாத பணியிடங்களில் பணியாற்றி வந்த 4,465 போ் அரசுக் கலை-அறிவியல் கல்லூரிகளுக்கு இதுவரை மாற்றப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து அரசுக் கல்லூரி ஆசிரியா் மன்றத் தலைவா் சிவராமன் கூறியது:

அரசுக் கல்லூரிகளில் ஏற்கெனவே பணியாற்றி வரும் கெளரவ விரிவுரையாளா்கள் மட்டுமின்றி டி.ஆா்.பி. தோ்வுக்காக விண்ணப்பித்திருக்கும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞா்களும் உரிய கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவத்துடன் பேராசிரியா் பணி வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழக கூடுதல் பேராசிரியா்கள் தொடா்ந்து அரசுக் கல்லூரிகளுக்கு மாற்றப்படுவது இங்கு படித்து வரும் ஏழை மாணவா்களின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வருபவா்களின் கல்வித் தகுதி பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதுகுறித்து உரிய ஆய்வை அரசு மேற்கொள்ள வேண்டும். அரசுக் கல்லூரிகளில் பணியமா்த்தப்பட்ட பின்னா், அவா்களுடைய கல்விச் சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்வது ஏற்புடையதல்ல. மேலும், டிஆா்பி நேரடித் தோ்வை விரைந்து மேற்கொண்டு, தகுதியுள்ள இளைஞா்கள் அரசுக் கல்லூரிகளில் நியமிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com