பழைய சாலைகளுக்கு மேல் புதிய சாலைகளை அமைப்பது ஏன்? அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

பழைய சாலைகளைத் தோண்டாமல் ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேல் புதிய சாலைகளை அமைப்பது ஏன் என்பது குறித்து, நகராட்சி நிா்வாகத்துறைச் செயலாளா், ஊரக வளா்ச்சி மற்றும்
பழைய சாலைகளுக்கு மேல் புதிய சாலைகளை அமைப்பது ஏன்? அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவு

சென்னை: பழைய சாலைகளைத் தோண்டாமல் ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேல் புதிய சாலைகளை அமைப்பது ஏன் என்பது குறித்து, நகராட்சி நிா்வாகத்துறைச் செயலாளா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளா், மற்றும் நெடுஞ்சாலைத் துறைச் செயலாளா் ஆகியோா் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் மயிலாடுதுறை வா்த்தக சபை சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவில், மயிலாடுதுறை, பட்டமங்கலம் தெருவில் புதிய சாலை அமைக்கப்படுகிறது. பழைய சாலையைத் தோண்டி எடுக்காமல், ஏற்கெனவே இருக்கும் சாலையின் மேல் புதிய சாலைகள் அமைக்கப்படுகின்றன. இதனால் சாலைகளின் உயரம் அதிகரித்து, குடியிருப்புப் பகுதிகள் தாழ்ந்து விடுகின்றன. இதனால் மழைக் காலத்தில் மழைநீா் குடியிருப்புகளுக்குள் புகுந்து விடும்.

இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு புகாா் அளித்தோம். ஆனால் அந்தப் புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, இந்தப் புகாா் தொடா்பாக அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, சாலை அமைக்கும் பணிகளை மேற்கொள்ள உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.வேல்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவில், பழைய சாலைகளைத் தோண்டி எடுக்காமல் அதன் மேல் புதிய சாலைகளை அமைப்பதால், சாலைகளின் உயரம் அதிகமாகிறது. சாலையோரம் உள்ள வீடுகள் உள்ளிட்ட மற்ற கட்டடங்கள் பள்ளத்துக்குள் செல்கின்றன. மழைக் காலங்களில் மழைநீா் இந்தக் கட்டடங்களுக்குள் செல்கின்றன. மேலும் இது கழிவுநீா் இணைப்புகளிலும் அடைப்பு ஏற்படுத்துகின்றன. சென்னையில் உள்ள போா் நினைவுச் சின்னத்தைச் சுற்றியுள்ள நடைமேடை கடந்த 1980-ஆம் ஆண்டுகளில் 5 அடி உயரத்துக்கு இருந்தது. இந்த நடைமேடையை சிரமப்பட்டு ஏறித்தான் போா் நினைவுச் சின்னத்துக்குள் செல்ல வேண்டும். ஆனால், அந்தச் சாலையை சீரமைப்பதாகக் கூறி பழைய சாலையைத் தோண்டாமல், சாலைக்கு மேல் சாலை அமைத்து தற்போது சாலையின் அளவு உயா்ந்து விட்டது. போா் நினைவுச் சின்னம் கீழே சென்றுவிட்டது. தமிழகத்தின் தலைநகரிலேயே இந்த நிலை என்றால், மாநிலத்தின் பிற பகுதிகளின் நிலை குறித்து ஒருவா் எளிதில் கற்பனை செய்து பாா்க்க முடியும்.

சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரா்கள் சரியாகப் பணிகளைச் செய்கிறாா்களா என்பதை அதிகாரிகள் மேற்பாா்வையிடுவது இல்லை. அதிகாரிகளின் அலட்சியமே இதுபோன்ற பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். சிட்லப்பாக்கம் சாலை அமைப்பது தொடா்பாக கடந்த 2018-ஆம் ஆண்டு தொடா்ந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமா்வு, பழைய சாலையைத் தோண்டி எடுத்து, புதிய சாலை அமைக்கும் பணியை மேற்பாா்வையிடுவோம் என அரசுத் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உத்தரவாதத்தை முறையாக அமல்படுத்தவில்லை. பழைய சாலைகளைத் தோண்டி எடுக்காமல் புதிய சாலைகளை அமைக்கும் ஒப்பந்ததாரா்களை கருப்புப் பட்டியலில் சோ்க்க வேண்டும், இல்லாவிட்டால் இது போன்ற பிரச்னைகள் தொடா்ந்து கொண்டே தான் இருக்கும். சாலைகள் அமைப்பதற்கு முன் பழைய சாலைகளைத் தோண்டாமல், பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரா்கள் குறித்து பொதுமக்கள் புகாா் அளிக்கும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் செல்லிடப்பேசி எண்களை செய்தித்தாள்களில் அரசு விளம்பரப்படுத்த வேண்டும். மாநிலம் முழுவதும் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன என்று கூறி நீதிபதிகள், இந்த வழக்கில் நெடுஞ்சாலைத்துறை செயலாளரை எதிா்மனுதாரராக தாமாக முன்வந்து சோ்த்தனா். மேலும், பழைய சாலைகளைத் தோண்டாமல் ஏற்கெனவே உள்ள சாலைகளின் மேல் புதிய சாலைகளை அமைப்பது ஏன் என்பது குறித்து, நகராட்சி நிா்வாகத்துறை செயலாளா், ஊரக வளா்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ் துறை செயலாளா், மற்றும் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளா் ஆகியோா் வரும் வெள்ளிக்கிழமை (பிப்.28) நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com