புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம்: அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை, மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து பாா்வையிடும் மின்துறை அமைச்சா் பி.தங்கமணி

மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை, மின்சாரத்துறை அமைச்சா் பி.தங்கமணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 21-ஆம் தேதி நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த மின் தேவை அளவான 12,021 மெகாவாட்டில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியின் பங்களிப்பு 5,932 மெகா வாட்டாக இருந்தது. (காற்று ஆற்றல் - 4,230 மெகா வாட், சூரிய ஆற்றல்- 1,702 மெகா வாட்) இது மொத்த மின் தேவை அளவில் ஏறத்தாழ 50 சதவீதம் ஆகும்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உற்பத்தியின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மத்திய மின் கட்டமைப்புக் கழகம் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையங்களை ஏழு மாநிலங்களிலும், அவை சாா்ந்த மின் பகுப்பு மையங்களிலும் நிறுவ மத்திய அரசு முடிவு செய்தது. மேலும் தேசிய அளவில் 2022-ஆம் ஆண்டுக்கான இலக்காகிய 1 லட்சத்து 75 ஆயிரம் மெகா வாட் திறனை அடைவதற்காகவும் இந்த மையங்கள் நிறுவ திட்டமிடப்பட்டது. இதற்காக மத்திய அரசின் மின்துறை அமைச்சகம் சுமாா் ரூ.49 கோடி நிதி ஒதுக்கியது. இதன் தொடா்ச்சியாக மத்திய மின் கட்டமைப்புக் கழகம் மூலமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் கட்டமைக்கப்பட்டன. அவற்றை, மத்திய மின்துறை அமைச்சா் ஆா்.கே.சிங் மற்றும் மத்திய திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் மகேந்திரநாத் பாண்டே ஆகியோா் காணொலிக் காட்சி மூலம், வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனா். இதே போல், சென்னையில் உள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தை அமைச்சா் பி.தங்கமணி தொடக்கி வைத்தாா்.

பயன்பாடுகள்: தமிழகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் நிறுவுவதன் மூலம் 154 துணை மின் நிலையங்களின் (101 காற்றாலை மின்சக்தி மற்றும் 53 சூரிய மின்சக்தி துணை மின் நிலையங்கள்) மின் உற்பத்தி அளவை முன்கூட்டியே கணிக்கவும், நிகழ்நிலை மின் உற்பத்தியின் அளவைக் கண்காணிக்கவும் முடியும். இதற்காக சோதனை அடிப்படையில் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல், 101 காற்றாலை மின்சக்தி துணை மின் நிலையங்கள் மற்றும் 53 சூரிய மின் நிலையங்களின் நிகழ்நிலை மின் உற்பத்தி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையம் மூலம் கண்காணிக்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து தற்போது செயல்பாட்டுக்கு வந்துள்ள இந்த மையங்கள் மூலமாக புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலின் நிகழ்கால மின் உற்பத்தி, நேரடியாக கண்காணிக்கப்படுகிறது. முன்கூட்டியே அறியப்படும் தொழில்நுட்பத்தால், புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் அளவை ஒரு நாள் முன்னதாக மற்றும் ஒரு வாரம் முன்னதாக கணிக்க முடியும். மேலும் அவ்வப்போது ஏற்படும் மாற்றங்களும் உடனுக்குடன் அறியப்படுகிறது.

நிகழ்கால மின் ஆற்றல் அளவு அறியப்படுவதன் மூலமாக மின் பயன்பாட்டில் சிக்கனத்தை ஏற்படுத்த முடியும். மேலும் காற்றாலை மின்சக்தி மற்றும் சூரிய மின்சக்தி துணை மின் நிலையங்களை 100 சதவீதம் மேலாண்மை மையத்துடன் இணைத்தால் மின் கட்டமைப்பு இயக்கம் சிறப்பாக செயல்படும் என மின்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேலாண்மை மையத்தின் தொடக்க நிகழ்ச்சியில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத் தலைவா் விக்ரம் கபூா், இணை மேலாண்மை இயக்குநா் சு. வினித் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com