
மூத்த காங்கிரஸ் தலைவர் டி.எம்.காளியண்ண கவுண்டர் 100 வது பிறந்தநாள் விழா திருச்செங்கோட்டில் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் அக்கரைப்பட்டி கிராமத்தில் முத்துநல்லி கவுண்டர் - பாப்பாயம்மாள் தம்பதிக்கு 10-01-1921ம் ஆண்டு மகனாகப் பிறந்தவர் டி.எம்.காளியண்ண கவுண்டர். முத்துநல்லி கவுண்டர் தனது குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டிற்கு இடம்பெயர்ந்தார். திருச்செங்கோடு அரசு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த காளியண்ண கவுண்டர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. பட்டப் படிப்பில் சேர்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
எம்.ஏ முதலாண்டு படிக்கும்போது நாட்டு விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்றார். அதன் காரணமாக தனது படிப்பைத் தொடர கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கவில்லை. அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்து எம்.ஏ பட்டம் பெற்றார். டி.எம்.காளியண்ண கவுண்டர், தனது 27வது வயதில் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1947ல் இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்களில் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருப்பவர் இவர் ஒருவரே!
திருச்செங்கோட்டைச் சேர்ந்த இவர் எம்.பி, எம்.எல்.ஏ, எம்.எல்.சி ஆகிய பதவிகளையும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் அமைச்சருக்கு நிகரான ஜில்லாபோர்டு தலைவர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்தவர். மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளராகவும் இருந்தவர்.
தலைவர்களுடன் நெருக்கம்
இவர் சட்ட மாமேதை அம்பேத்கர், அண்ணல் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், ராஜாஜி மற்றும் காமராஜர் உள்ளிட்ட தலைவர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளார். ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்த டி.எம்.காளியண்ண கவுண்டர் தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாயிரம் அரசுப் பள்ளிகளை திறந்து வைத்த பெருமையைப் பெற்றவர்.
தற்போது 100 வயதாகும் டி.எம். காளியண்ண கவுண்டர் காங்கிரஸில் பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவர், தற்போது வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வருகிறார். ஒவ்வொரு சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களிலும் தவறாது தனது வாக்கினை பதிவு செய்து வருகிறார்.
100வது பிறந்தநாள் விழா
இன்று வெள்ளிக்கிழமை இவரது 100வது பிறந்தநாளில் தமிழக அமைச்சர் பி.தங்கமணி, திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர். பொன்.சரஸ்வதி, மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், ஆன்மீக அன்பர்கள், பொதுமக்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து ஆசி பெற்றனர்.