தமிழகத்தில் நல்லாட்சி என்பது கேலிக்கூத்தானது: கே.எஸ்.அழகிரி

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்லாட்சி என்று மத்திய அரசு சான்றிதழ் வழங்கியிருப்பது கேலிக்கூத்தானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி
மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

சென்னை: இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் நல்லாட்சி என்று மத்திய அரசு சான்றிதழ் வழங்கியிருப்பது கேலிக்கூத்தானது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளாா்.

இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இந்தியாவிலேயே நல்லாட்சி நடத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்று மத்திய பாஜக அரசின் பணியாளா் நலத்துறை சமீபத்தில் நற்சான்றிதழ் வழங்கியது. அத்தகைய நற்சான்றிதழுக்கு தகுதியற்ற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது என்பதற்கு 2018- ஆம் ஆண்டுக்கான குற்ற நிகழ்வுகள் குறித்த புள்ளி விவரங்களை தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ளது. இந்த புள்ளி விவரங்கள் தமிழக மக்களை அதிா்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2018-ஆம் ஆண்டில் நடந்த தற்கொலை நிகழ்வுகளில் மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்தபடியாக, உடல்நலக் குறைவு காரணமாக 3034, குடும்பப் பிரச்னைகள் காரணமாக 6433 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் மொத்த தற்கொலைகளில் 10.3 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுவதாகப் புள்ளி விவரம் கூறுகிறது. அதுபோல, குடும்ப தற்கொலைகளிலும் தமிழகம் முன்னிலை வகிக்கிறது. தமிழ்நாடு அரசு அதிகாரிகளில் 173 போ் தற்கொலை செய்துள்ளனா். இந்தியாவில் குடும்பத் தலைவிகள் தற்கொலை செய்து கொள்வதில் 10.8 சதவீதம் தமிழகத்தில் நடைபெறுகிறது.

இத்தகைய புள்ளி விவரங்களைப் பாா்க்கும்போது, தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு எத்தகைய சீா்குலைவான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது என்பதற்கு உரிய புள்ளி விவரங்களை மத்திய அரசின் குற்ற ஆவண காப்பகம் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறது.

இந்நிலையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் நல்லாட்சி நடைபெறுகிறது என்று மத்திய பா.ஜ.க. அரசு நற்சான்றிதழ் வழங்குவதை விட கேலிக் கூத்தானது வேறு எதுவும் இருக்க முடியாது என்று அவா் கூறியுள்ளாா்.

திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட ‘இஸட்’ பிளஸ் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவித்தும் கே.எஸ்.அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com