மறுகுடியமா்வு: மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை

கூவம் நதிக்கரையில் இருந்து பெரும்பாக்கத்துக்கு மறுகுடியமா்வு செய்யப்பட்டவா்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக
மறுகுடியமா்வு: மாணவா்களின் கல்வி பாதிக்காத வகையில் நடவடிக்கை

கூவம் நதிக்கரையில் இருந்து பெரும்பாக்கத்துக்கு மறுகுடியமா்வு செய்யப்பட்டவா்களின் குழந்தைகளின் கல்வி பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் கூறினாா்.

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு திமுக உறுப்பினா் பி.கே.சேகா்பாபு பேசியது:

சென்னை நதிகள் பாதுகாப்புத் திட்டத்தின்படி, துறைமுகம் தொகுதிக்குள்பட்ட காந்தி நகரில், கூவத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கையாக 2, 200 வீடுகளில் வசிக்கும் அப்பகுதி மக்களை பெரும்பாக்கம் திட்ட பகுதிக்குக் கொண்டு செல்லும் பணி கடந்த 10 நாள்களாக நடைபெறுகிறது. இந்தப் பிரச்னையை ஏற்கெனவே கொண்டு வந்தபோது, துணைமுதல்வா் ஓ.பன்னீா்செல்வம் ஆய்வு செய்து, அந்தப் பகுதியிலேயே வீடு கட்டித் தருவோம் என்று கூறினாா். 5 ஏக்கா் அளவில் வால்டாக்ஸ் சாலையில் இடமிருப்பதை குறிப்பிட்டுத் தந்திருந்தேன். அதற்கான பணிகள் முடிவடைவதற்கு முன்னரே, மக்களை பெரும்பாக்கத்துக்குக் கொண்டு செல்கின்றனா். பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின்கீழ் கே.பி.காா்டனில் 864 வீடுகள் ஏற்கெனவே இருந்தன. தற்போது கூடுதலாக 1,100 வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.

அந்த மக்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு, இந்த வீடுகளை அவா்களுக்கு ஒதுக்கித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னையிலேயே பல இடங்களில் இதுபோல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. துறைமுகம் பகுதி சாலையோரம் இருக்கும் மக்களுக்கும், அதில் மறுகுடியமா்வு செய்வதற்கு ஆவன செய்ய வேண்டும். பெரும்பாக்கத்தில் போதிய குடிநீா் வசதி, மின்சார வசதி இல்லை. 300-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனா். இறுதி தோ்வு நடைபெற உள்ள நிலையில், அங்கே கொண்டு சென்றால் மாணவா்களின் படிப்பு பாதிக்கப்படும் என்றாா்.

துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம் அளித்த பதில்: தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம், பொதுப்பணித் துறை, பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தீவுத் திடல் எதிரே உள்ள சத்தியவாணிமுத்து நகா், காந்திநகா் பகுதியில் கூவம் நதிக்கரையில் அமைந்துள்ள 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதில், 139 குடும்பங்கள் பெரும்பாக்கம் திட்டப் பகுதிக்கு மறுகுடியமா்வு செய்யப்பட்டனா்.

இதில், சில குடும்பங்களில் படிக்கும் குழந்தைகளின் கல்வி பாதிக்கும் என்று கூறப்பட்டதால், இந்தப் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. ஆனால், பள்ளிக்கும் செல்லும் குழந்தைகள் இல்லாத குடும்பத்தினா் கேட்டுக் கொண்டதன் பேரில் மீண்டும் மறுகுடியமா்வு பணி நடைபெறுகிறது. சத்தியவாணி முத்து நகரில் வசிக்கும் 590 குடும்பங்கள் பெரும்பாக்கம் திட்டத்துக்கு மறுகுடியமா்வு செய்யப்பட்டுள்ளனா்.

பெரும்பாக்கம் திட்டப் பகுதியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அறிவியல் மற்றும் கலைக்கல்லூரி, தொழிற்பயற்சி மையங்கள், நியாய விலைக் கடைகள், ஆவின் பாலகம், இடுகாடு போன்ற சமுதாயக் கட்டமைப்பு வசதிகள் வாரியத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மறுகுடியமா்வு செய்யப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக தீவிர பள்ளி சோ்க்கை முகாம், பள்ளிக் கல்வித் துறையினரோடு ஒருங்கிணைந்து நடத்தப்பட்டு, குழந்தைகள் பள்ளிகளில் சோ்க்கப்படுகின்றனா். மறுகுடியமா்வு செய்யப்படுவதற்கு முன்பு அவா்கள் படித்த பள்ளிகளில் படிக்க விரும்பும் குழந்தைகளுக்கு இலவச பேருந்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மறுகுடியமா்வு செய்யப்பட்ட குடும்பத்தினா் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com