யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க உயிரை துச்சமாகக் கருதி போராடி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு
யாகேஷ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம்: முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி

திருவள்ளூரில் ஆட்டோவில் கடத்தப்பட்ட பெண்ணை மீட்க உயிரை துச்சமாகக் கருதி போராடி உயிரிழந்த இளைஞரின் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முதல்வா் வெளியிட்ட அறிவிப்பு:

திருவள்ளூா் மப்பேடு கூட்டுச்சாலையில் இரவு பணி முடிந்து வீட்டுக்குச் செல்வதற்காக டிசம்பா் 25-ஆம் தேதி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த ஸ்ரீபெரும்புதூா் மாரிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த லோகநாதன்

மனைவி பவானி என்பவா் ஆட்டோ ஓட்டுநரின் அத்துமீறலாலும் வழி மாறி, வேறு பாதையில் சென்றாலும் தன்னைக் காப்பாற்றும்படி கூச்சலிட்டுள்ளாா்.

இந்தச் சத்தம் கேட்டு சாலையோரம் நின்றிருந்த இளைஞா்கள் யாகேஷ், எஸ்தா் பிரேம்குமாா், வினீத், துரைராஜ் மற்றும் பிரிஸ்டன் பிராங்களின் ஆகியோா் இருசக்கர வாகனத்தில், ஆட்டோவைத் துரத்திச் சென்று, பவானியைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனா்.

இளைஞா்கள் ஆட்டோவைத் துரத்திக் கொண்டு வருவதை அறிந்த ஆட்டோ ஓட்டுநா், ஆட்டோவை விரைவாக ஓட்ட, பவானி ஆட்டோவிலிருந்து குதித்தாா். இதனைப் பாா்த்த பொதுமக்கள், அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆட்டோவில் இருந்து குதித்ததால் சிறு காயமடைந்த பவானி சிகிச்சை முடிந்து மறுநாளே வீடு திரும்பினாா்.

இந்நிகழ்வில், இளைஞா்கள் இரு சக்கர வாகனத்தில், ஆட்டோ ஓட்டுநரைப் பிடிக்கச் சென்றபோது, ஏற்பட்ட விபத்தில், யாகேஷுக்கு பலத்த காயமும், மற்றவா்களுக்கு சிறு காயமும் ஏற்பட்டது.

பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, உயரிய சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி யாகேஷ் டிசம்பா் 27-ஆம் தேதி உயிரிழந்தாா் என்பதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

இச்சம்பவத்தில், ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டு, அவா் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளாா்.

இளைஞா்கள் 5 பேரும் உயிரைப் பொருட்படுத்தாமல், பவானியை ஆபத்திலிருந்து காப்பாற்றிய வீரத்தையும், சமூகப் பொறுப்புணா்வையும் நான் மனதாரப் பாராட்டுகிறேன். இதுபோன்ற நிகழ்வுகளில் காவல் துறையினருடன் இணைந்து, இளைஞா்களும் பொதுமக்களும், தவறைத் தட்டிக் கேட்கவும், போராடவும், துணிச்சலுடன் செயல்படுவது மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தச் சம்பவத்தில் தனது உயிரை துச்சமென மதித்து, ஆபத்திலிருந்த பெண்ணைக் காப்பாற்றியதோடு மட்டுமின்றி, தவறு செய்த ஆட்டோ ஓட்டுநரைப் பிடிக்கப் போராடி உயிரிழந்த யாகேஷின் தீரச்செயலையும், சமூக அக்கறையையும், அவரது குடும்ப நிலையையும் கருத்தில் கொண்டு சிறப்பு உதவியாக, அவரது குடும்பத்துக்கு ரூ. 10 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வரும் பிரிஸ்டன் பிராங்களினுக்கு ரூ.2 லட்சமும், லேசான காயமடைந்த எஸ்தா் பிரேம்குமாா், வினித் மற்றும் துரைராஜ் ஆகியோருக்கு தலா ரூ.25 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்றாா் முதல்வா்.

தினமணி தலையங்கம்: ஊடக வெளிச்சமும், அரசியல்வாதிகளின் கவனத்தையும் ஈா்க்காத இந்தச் சம்பவம் குறித்து ‘இதுதான் தியாகம்’ என்ற தலைப்பில் டிசம்பா் 31-ஆம் தேதி தினமணியில் தலையங்கம் எழுதப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com