கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு தலா 13 ஓட்டுகள் கிடைத்த நிலையில் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் தேர்வு
கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவராக அதிமுக வேட்பாளர் தேர்வு

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தலில் அதிமுக, திமுக வேட்பாளர்களுக்கு தலா 13 ஓட்டுகள் கிடைத்த நிலையில் குலுக்கல் முறையில் அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கான தேர்தல் தேர்தல் அலுவலர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் குலசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.

முன்னதாக தேர்தலை ஒட்டி வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மட்டும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்குள் அனுப்பபட்ட நிலையில் அதிமுக, திமுக நிர்வாகிகள் யாரும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தினுள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும் பதட்டமான சூழலை தவிர்க்க கும்மிடிப்பூண்டி டி.எஸ்.பி ரமேஷ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 26 கவுன்சிலர்களில் அதிமுகவினர் தனியாகவும், திமுகவினர் தனியாகவும் அமர வைக்கப்பட்டனர். அப்போது இரு பக்கமும் தலா 13 பேர் இருந்ததால் வெற்றி யார் பக்கம் என பதட்டம் ஏற்பட்டது. 

பின்னர் அதிமுக தரப்பில் கே.எம்.எஸ்.சிவக்குமார், திமுக தரப்பில் இந்திரா தனலட்சுமி வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

தொடர்ந்து முதல் வார்டு முதல் 26 வார்டு வரை ஒவ்வொரு கவுன்சிலராக இரு வேட்பாளர்கள் கொண்ட வாக்குச் சீட்டில் தனித்தனியாக வாக்களித்து வாக்கு பெட்டியில் அவர்களது வாக்கை செலுத்தினர்.

தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற போது அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமாருக்கு 13 ஓட்டும், திமுக வேட்பாளர் இந்திரா திருமலைக்கும் 13 ஓட்டுகள் கிடைத்ததால் போட்டி சமன் ஆனது.

இந்நிலையில் தேர்தல் ஆணைய விதிப்படி குலுக்கல் முறையில் ஊராட்சி ஒன்றியத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என தேர்தல் அலுவலர் ரவி அறிவித்தார்.

தொடர்ந்து கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அருகாமை பகுதியை சேர்ந்த டில்லிபாபு மகள் சிறுமி யோகபாலா(8) வரவழைக்கப்பட்ட நிலையில் ஓட்டு பெட்டியில் இருந்த சீட்டை எடுத்த போது அதில் அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் பெயர் இருந்தது. தனது பெயர் குலுக்கல் சீட்டில் இருந்ததை அறிந்ததும் அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் துள்ளிகுதித்து சிறுமி யோகபாலாவை கையெடுத்து கும்பிட்டு அவரை தூக்கி அணைத்துக் கொண்டார்.

தொடர்ந்து அதிமுக வேட்பாளர் கே.எம்.எஸ்.சிவக்குமார் வெற்றி பெற்றதை அறிந்ததும் அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் வட்டார வளர்ச்சி அலுவலக வாயிலை தள்ளிக் கொண்டு கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவரான கே.எம்.எஸ்.சிவக்குமாரை தலை மீது தூக்கி கொண்டாடினர்.

கும்மிடிப்பூண்டியில்  இதுவரை 2வது முறையாக ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com