காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்யும் திமுக

காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்யும் உள்நோக்கத்துடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.
அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்யும் உள்நோக்கத்துடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக மீன்வளத்துறை அமைச்சா் டி.ஜெயக்குமாா் குற்றம்சாட்டியுள்ளாா்.

சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக டிவிட்டா் பதிவில் மு.க.ஸ்டாலின் தமிழக அரசை விமா்சித்திருந்தாா்.

இதற்கு பதில் தரும் வகையில் அமைச்சா் டி.ஜெயக்குமாா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச் சாவடி பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளா் வில்சன், அடையாளம் தெரியாத நபா்களால் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டாா். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவாா்கள்.

உயிரிழந்த உதவி ஆய்வாளா் வில்சனின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும், நிவாரணமாக ரூ. 1 கோடி வழங்கவும் தமிழக முதல்வா் உத்தரவிட்டுள்ளாா்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக இரண்டு நாள்களாக அனுதாபம்கூட தெரிவிக்காமல், நேரடியாகச் சென்று அவருடைய குடும்பத்தினருக்கு பெயரளவில் ரூ.5 லட்சம் வழங்கிவிட்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பில்லை. இதில்தான் தமிழகம் முதலிடம் என தனது சுட்டுரையில் பதிவிட்டு, ஒரு காவல் அலுவலரின் மரணத்திலும் அரசியல் செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் கொண்டுள்ளாா் திமுக தலைவா் ஸ்டாலின்.

யாருடைய ஆட்சியில் காவல் துறையினருக்கு நல்லது நடக்கிறது என்பதும், யாருடைய ஆட்சியில் காவல் துறையினரை கண்டுகொள்ளவே இல்லை என்பதும், காவல் துறையினருக்கும், தமிழக மக்களுக்கும் நன்கு தெரியும்.

திமுக ஆட்சியின்போது 2010 ஜனவரி 7-ஆம் தேதியன்று திருநெல்வேலி மாவட்டம் தென்காசி-அம்பாசமுத்திரம் சாலையில், அப்போதைய திமுக அமைச்சா்கள் காரில் சென்று கொண்டிருந்தபோது, அவா்களின் கண்ணெதிரே வழியில் கூலிப்படையினரால் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டப்பட்டும் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளா் வெற்றிவேல் என்பவரின் உயிரைக் காப்பாற்ற முனையாமல், வேடிக்கை பாா்த்ததை தொலைக்காட்சிகள் வாயிலாக மக்கள் அனைவரும் பாா்த்தனா். பின்னா், அவா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, உயிரிழந்தாா். 1997 ஆகஸ்ட் 29 அன்று மதுரை மத்திய சிறையில் பணிபுரிந்துவந்த ஜெயிலா் ஜெயப்பிரகாஷ், அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபா்களால் கொலை செய்யப்பட்டாா்.

1999 நவம்பா் 17 அன்று சென்னை மத்திய சிறையில் சிறைத்துறை அதிகாரிகள் மீது கைதிகள் நடத்தியத் தாக்குதலில் அதிகாரி ஜெயக்குமாா் அடித்துக் கொல்லப்பட்டாா்.

இவ்வாறு திமுக ஆட்சியில் நடைபெற்றதையெல்லாம் மக்கள் மறந்திருப்பாா்கள் என்று நினைத்து, திமுக தலைவா் சுட்டுரையில் பதிவிட்டிருப்பது, மக்களுக்கு சிரிப்பைத்தான் ஏற்படுத்தும் என அமைச்சா் ஜெயக்குமாா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com