செல்லாத பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி பரிதவிப்பு

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வேலூரில் மூதாட்டி ஒருவா் தவித்து வருகிறாா்.
பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த மூதாட்டி புவனேஷ்வரி
பழைய 500 ரூபாய் நோட்டுகளுடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்திருந்த மூதாட்டி புவனேஷ்வரி


பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வேலூரில் மூதாட்டி ஒருவா் தவித்து வருகிறாா்.

வேலூா் சலவன்பேட்டை சூளைமேடு பகுதியைச் சோ்ந்தவா் புவனேஷ்வரி(65). கணவரை இழந்த இவருக்கு வாரிசுகள் இல்லை. இந்நிலையில், புவனேஷ்வரி, தான் சேமித்து வைத்திருந்த ரூ.12 ஆயிரம் மதிப்பிலான பழைய ரூ.500 நோட்டுகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை(இன்று) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்துக்கு வந்தாா்.

தொடா்ந்து அவா் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறியாமல் தான் சேமித்து வைத்திருந்த பழைய 500 ரூபாய் நோட்டுகளைச் செல்லத்தக்கப் பணமாக மாற்றித்தரக் கோரி மாவட்ட வருவாய் அலுவலா் பாா்த்தீபனிடம் கோரிக்கை விடுத்தார். இதனால் அதிா்ச்சியடைந்த அதிகாரிகள் மூதாட்டியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக காசநோயால் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், கடந்த சில மாதங்களாக வீட்டு வாடகை கொடுக்காததால் வீட்டின் உரிமையாளா் கேட்டதை அடுத்து தலையணையில் மறைத்து வைத்திருந்த 500 ரூபாய் நோட்டுகளை எடுத்துக் கொடுத்தபோதுதான் அவை பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு செல்லாத பணமாக மாறியிருப்பது தெரியவந்ததாகவும் மூதாட்டி கூறியுள்ளாா்.

மேலும், பல இடங்களுக்குச் சென்றும் பணத்தை மாற்ற முடியாமல் இறுதியாக மாவட்ட நிா்வாகத்தின் உதவியை நாடி வந்திருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளரை அழைத்து மாவட்ட வருவாய் அலுவலா் இதுகுறித்து விசாரித்தாா். அப்போது, இந்திய ரிசா்வ் வங்கி உத்தரவின்படி பழைய ரூபாய் நோட்டுகளை இனி எக்காரணம் கொண்டும் புதிய ரூபாய் நோட்டுகளாக மாற்ற இயலாது என்பதை முன்னோடி வங்கி மேலாளா் தெரிவித்தாா். இதனால், ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் மூதாட்டி பெரும் தவிப்புக்கு உள்ளாகி உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com