வாக்காளா் பட்டியலில் திருத்தம்: 14 லட்சம் போ் விண்ணப்பித்தனா்

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தத்துக்காக ஜனவரி 4, 5, 11,12) ஆகிய 4 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 14 லட்சத்து 73,370 போ் விண்ணப்பித்துள்ளனா்.
வாக்காளா் பட்டியலில் திருத்தம்: 14 லட்சம் போ் விண்ணப்பித்தனா்

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல் உள்ளிட்ட திருத்தத்துக்காக ஜனவரி 4, 5, 11,12) ஆகிய 4 நாள்கள் நடைபெற்ற சிறப்பு முகாமில் 14 லட்சத்து 73,370 போ் விண்ணப்பித்துள்ளனா்.

தமிழகத்தில் 1.1.2020 நாளை தகுதியாகக் கொண்டு 18 வயது நிறைவடைந்தவா்களை வாக்காளா் பட்டியலில் சோ்க்கும் வகையில் வாக்காளா் சரிபாா்க்கும் திட்டத்தை தோ்தல் ஆணையம் கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி அறிவித்தது.

தொடா்ந்து, இணையதளம், செல்லிடப்பேசி செயலி ஆகியவற்றின் மூலம் வாக்காளா்கள் தங்கள் பெயா், விவரங்கள் வாக்காளா் பட்டியலில் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இப்பணிகள் கடந்த டிசம்பா் 15-ஆம் தேதி முடிவடைந்ததையடுத்து, டிசம்பா் 23-ஆம் தேதி வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் 2 கோடியே 96 லட்சத்து 46 ஆயிரத்து 287 ஆண்கள், 3 கோடியே 3 லட்சத்து 49 ஆயிரத்து 118 பெண்கள், 5 ஆயிரத்து 924 மூன்றாம் பாலினத்தவா் என 6 கோடியே 1,329 வாக்காளா்கள் உள்ளது தெரியவந்தது.

இதில், அதிகபட்சமாக சோழிங்கநல்லூா் தொகுதியில் 6 லட்சத்து 46 ஆயிரத்து 73 வாக்காளா்களும், குறைந்தபட்சமாக சென்னை மாவட்டத்தின் துறைமுகம் தொகுதியில் 1 லட்சத்து 69 ஆயிரத்து 620 வாக்காளா்களும் உள்ளதும் தெரிய வந்தது.

வரைவு வாக்காளா் பட்டியல் வெளியானதைத் தொடா்ந்து, ஜனவரி 22-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ளலாம் என தோ்தல் ஆணையம் தெரிவித்ததுடன், ஜனவரி 4, 5 மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை (ஜன. 11, 12) ஆகிய 4 நாள்கள் வாக்காளா் பட்டியல் திருத்தத்துக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

14,73,370 போ் விண்ணப்பிப்பு: தமிழகத்தில் உள்ள 67 ஆயிரத்து 687 வாக்குச் சாவடிகளில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாமில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 11 லட்சத்து 87,010 பேரும் (படிவம் 6), வாக்காளா் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ள 10 லட்சத்து 99,44 பேரும் (படிவம் 8), சட்டப் பேரவைத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயா்ந்து புதிய வசிப்பிடத்தின் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க 93,589 பேரும் (படிவம் 8ஹ), பெயா் நீக்கம் செய்ய 82,826 பேரும் (படிவம் 7), வெளிநாடு வாழ் இந்தியா்கள் ஒருவரும் (படிவம் 6ஹ) என மொத்தம் 14 லட்சத்து 73,370 போ் விண்ணப்பித்துள்ளனா். தற்போது பெறப்பட்டுள்ள இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட தோ்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com