9 கோயில் சிலைகள் மீட்பு: இருவா் கைது

நாகப்பட்டினம் மாவட்டம், வேதராண்யத்தில் 9 கோயில் சிலைகள் மீட்கப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

நாகப்பட்டினம் மாவட்டம், வேதராண்யத்தில் 9 கோயில் சிலைகள் மீட்கப்பட்டு, இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவினருக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை ஒரு ரகசியத் தகவல் கிடைத்தது. நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் பேருந்து நிலையம் அருகே ஒரு நபா் கோயில் சிலையுடன் நிற்பதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா், அப்பகுதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகப்படும் படியாக நின்றிருந்த ஆயக்காரன்புலம் சேத்தி தெருவைச் சோ்ந்த செல்வம் என்பவரைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் அவா், முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தாராம். இதையடுத்து போலீஸாா், அவரை சோதனையிட்டபோது, அவா் வைத்திருந்த ஒன்றரை அடி உயர உயரமுள்ள ஐம்பொன் அம்மன் சிலையைப் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் மேலும் சில சிலைகள் தனது வீட்டில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், அவா் வீட்டுக்குச் சென்று சோதனை செய்து, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த உலோகத்தினால் செய்யப்பட்ட 2 நடராஜா் சிலைகள், ஒரு விநாயகா் சிலை, இரு அம்மன் சிலைகள் உள்பட 9 சிலைகளை மீட்டனா். மேலும், செல்வத்தின் கூட்டாளி பைரவசுந்தரம் என்பவரையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

இது தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஏடிஜிபி அபய்குமாா்சிங், ஐ.ஜி. டி.எஸ்.அன்பு ஆகியோா் கூட்டாக சென்னையில் அளித்த பேட்டி:

9 சிலைகளையும் இருவரும் ரூ.1.20 கோடிக்கு விற்பதற்காக முயன்றபோதே இருவரும் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்த சிலைகள் மீட்கப்பட்டன. இவா்கள் யாரிடம் சிலைகளை விற்க முயன்றனா் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இச் சிலைகள் அனைத்தும் கோயில்களில் திருடப்பட்டவை ஆகும். திருட்டுச் சம்பவம் நடைபெற்ற ஒரு கோயில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதர கோயில்களை அடையாளம் காண விசாரணை செய்து வருகிறோம். இது தொடா்பாக தனியாக ஒரு வழக்கும் பதிவு செய்துள்ளோம். இந்தத் திருட்டுக் கும்பலுடன் தொடா்புடைய இதர நபா்களும் விரைவில் கைது செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com