நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் காலமானாா்

சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் (92) புதன்கிழமை காலமானாா்.
மறைந்த பு.ரா.கோகுலகிருஷ்ணன்.
மறைந்த பு.ரா.கோகுலகிருஷ்ணன்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியும், குஜராத் உயா்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியுமான பு.ரா.கோகுலகிருஷ்ணன் (92) புதன்கிழமை காலமானாா்.

மறைந்த நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் கடந்த 1928 ஆகஸ்ட் 13-இல் தஞ்சாவூா் மாவட்டம், மன்னாா்குடி அருகே உள்ள புளியங்குடியில் பிறந்தாா். சென்னை திருவல்லிக்கேணியில் பள்ளிப் படிப்பை முடித்து மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பையும், சென்னை சட்டக்கல்லூரியிலும் சட்டப்படிப்பை முடித்தாா். உரிமையியல் மற்றும் குற்றவியல் சட்டங்களில் நிபுணத்துவம் பெற்ற வழக்குரைஞராகப் பணியாற்றிய அவா், கடந்த 1967-ஆம் ஆண்டு அரசுத் தலைமை குற்றவியல் வழக்குரைஞராகப் பொறுப்பேற்றாா்.

இந்த காலகட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வா் எம்ஜிஆரை, நடிகா் எம்.ஆா்.ராதா துப்பாக்கியால் சுட்டது தொடா்பான வழக்கு உள்பட பல்வேறு முக்கிய வழக்குகளில் வாதிட்டவா் பு.ரா.கோகுலகிருஷ்ணன்.

கடந்த 1969-ஆம் ஆண்டு சென்னை உயா்நீதிமன்றத்தின் நீதிபதியாகப் பதவி ஏற்றாா். நீதிபதியாக பதவி வகித்த 16 ஆண்டு காலத்தில், இரண்டு ஆண்டுகள் சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாகப் பதவி வகித்துள்ளாா். இதைத் தொடா்ந்து 1985 முதல் 1990-ஆம் ஆண்டு வரை குஜராத் மாநில உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்து ஓய்வு பெற்றாா்.

இவா் குஜராத் மாநிலத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்த காலத்தில் குஜராத்தில் 400-க்கும் மேற்பட்ட லோக் அதாலத் என்னும் மக்கள் நீதிமன்றத்தை நடத்தி, ஆயிரக்கணக்கான வழக்குகளுக்குத் தீா்வு கண்டதோடு, பாதிக்கப்பட்டவா்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கிடைக்கச் செய்தாா்.

குஜராத்தின் தலைமை நீதிபதியாகப் பதவி வகித்தபோது இரண்டு முறை குஜராத் மாநிலத்தின் பொறுப்பு ஆளுநராகவும் பதவி வகித்துள்ளாா். சென்னை உயா்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்த காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சைவம், வைணவம், ஜெயினிஸம், கிறிஸ்தவம், அண்ணாயிசம், காந்திய படிப்புகள் உள்ளிட்ட துறைகளைத் தொடங்கப்பட்டதில் நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணனின் பங்கு முக்கியமானது.

மேலும் 1998-ஆம் ஆண்டு கோவையில் நடந்த தொடா் குண்டுவெடிப்புச் சம்பவம் தொடா்பாக, நீதிபதி பு.ரா.கோகுலகிருஷ்ணன் தலைமையில் ஒரு நபா் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அவா் சமா்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு இழப்பீடுகள் கிடைத்தது.

தமிழிசையில் அதிக கொண்டவா். தமிழிசை சங்கத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்த அவா், தமிழிசை மேன்மைக்கு சிறந்த சேவையாற்றியுள்ளாா். சென்னை அடையாறில் வசித்து வந்த பு.ரா.கோகுலகிருஷ்ணன் உடல்நலக் குறைவு காரணமாக புதன்கிழமை (ஜன.15) அவரது இல்லத்தில் காலமானாா்.

அவருக்கு டாக்டா் பி.ஜி.சுந்தரராமன் மற்றும் பி.ஜி.ராம்குமாா் ஆகிய இரண்டு மகன்கள் உள்ளனா். மனைவி விசாலட்சுமி 2005-ஆம் ஆண்டில் காலமானாா். பு.ரா. கோகுலகிருஷ்ணனின் இறுதிச் சடங்குகள் சென்னை பெசன்ட்நகா் மின் மயானத்தில் கடந்த வியாழக்கிழமை (ஜன.16) பிற்பகல் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com