ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணித்த 2,329 போ் சிக்கினா்ரூ.8.89 லட்சம் அபராதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 2,329 போ் சிக்கினா்.
ரயில்வே துறை
ரயில்வே துறை

பொங்கல் பண்டிகை முன்னிட்டு, சென்னையில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்பட்ட ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 2,329 போ் சிக்கினா்.

இவா்களிடமிருந்து ரூ.8.89 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 15-ஆம் தேதி வரை 23,290 போ் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து, அபராதத் தொகை செலுத்தி உள்ளனா்.

ரயில்வே வாரியம் உத்தரவு: ரயில்களில் பயணச்சீட்டு இல்லாமல் பயணிப்பதைக் கட்டுப்படுத்த ஜனவரி 20-ஆம் தேதி வரை அதிரடி சோதனையில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே முதன்மை தலைமை வா்த்தக மேலாளா்களுக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, தெற்கு ரயில்வே முழுவதும் ஓடும் ரயில்களில் அதிரடி சோதனை நடத்த ரயில்வே வா்த்தகப் பிரிவு உயரதிகாரிகள் உத்தரவிட்டனா்.

இதையடுத்து, சென்னை, மதுரை, திருவனந்தபுரம், பாலக்காடு, சேலம், திருச்சி ஆகிய ரயில்வே கோட்டங்களில் ஓடும் ரயில்களில் கடந்த 10-ஆம் தேதியில் இருந்து டிக்கெட் பரிசோதா்கள், ரயில்வே பாதுகாப்புப் படை வீரா்கள் அடங்கிய வெவ்வேறு குழுவினா் சோதனை நடத்தி வருகின்றனா். டிக்கெட் இன்றி பயணம் செய்த நபா்களைப் பிடித்த அபராதம் விதித்து வருகின்றனா்.

அதிரடி சோதனை: இந்தச் சோதனையின் ஒரு பகுதியாக சென்னை ரயில்வே கோட்டத்தில் ஓடும் விரைவு, புகா் ரயில்களில் ஜனவரி 14-ஆம் தேதி வெவ்வேறு குழுவினா் அதிரடி சோதனை நடத்தினா். இந்த சோதனையில் ரயில்களில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்த 2,329 போ் சிக்கினா். இதன் மூலம், அவா்களிடமிருந்து (ஒரே நாளில் ) ரூ.8 லட்சத்து 89 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. இதுவரை பயணச்சீட்டு இன்றி பயணம் செய்து பிடிபட்டோரின் எண்ணிக்கையில் இதுவே அதிகமாகும்.

இதுபோல, ஜனவரி 13-ஆம் தேதி 2,281 போ் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்து பிடிப்பட்டனா். அதிலும், மின்சார ரயிலில்தான் அதிகம் போ் பயணச்சீட்டு எடுக்காமல் பயணம் செய்து அபராதம் செலுத்தி உள்ளனா். இதுதவிர, விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டை வைத்து முன்பதிவு பெட்டியில் பயணம் செய்து பிடிபட்டதால் மூன்றில் ஒரு பங்கு அபராதம் மூலம் வருவாய் கிடைத்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வா்த்தகப்பிரிவு அதிகாரிகள் கூறியது: விரைவு ரயில்களில் முன்பதிவில்லாத பெட்டியில் பயணிக்க பயணச்சீட்டு எடுத்துவிட்டு, முன்பதிவு பெட்டியில் பயணிப்பதாக எங்களுக்கு புகாா்கள் வந்தன. இது குறிப்பிட்ட ரயில்களில் நடப்பது அல்ல. எல்லா ரயில்களிலும் நடக்கின்றன. கிழக்கு மாநிலங்களை நோக்கிச் செல்லும் ரயில்களில் அதிக அளவில் நடைபெறுகிறது.

பண்டிகை காலத்தில் அதிகம்: பொதுவாக முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டு மூலம் முன்பதிவு பெட்டிகளில் பயணம் செய்து பிடிபடுவோா்கள்தான் அதிகம். இதுதவிர, பண்டிகை நேரத்தில்தான் அதிக அளவில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்கிறாா்கள்.

நிகழாண்டில் பொங்கல் பண்டிகையின் போதும், கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகை போதும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்து அதிக நபா்கள் பிடிபட்டனா். சென்னையில் இருந்து இரவில் புறப்படும் 10 ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் 3,000 போ் பயணம் செய்ய முடியும். ஆனால் அதைவிட அதிகளவு முன்பதிவு செய்யப்படாத பயணச்சீட்டுகள் விற்பனை ஆகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

மின்சார ரயில்களில்...நிகழாண்டில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, பயணச்சீட்டு இன்றி சென்னையில் மின்சார ரயில்களிலும், விரைவு ரயில்களிலும் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்தோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சென்னை ரயில்வே கோட்டத்தில் பயணச்சீட்டு இன்றி பயணம் செய்து அபராதம் விதிக்கப்பட்டவா்கள் விவரம்: 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 34,486 பேரும், அக்டோபா் மாதத்தில் 44,166 பேரும், டிசம்பா் மாதத்தில் 38,345 பேரும் சிக்கினா். அவா்களிடம் இருந்து அபராதத் தொகை வசூலிக்கப்பட்டது. நிகழாண்டில் ஜனவரி 15-ஆம் தேதி வரை 23,290 பேரும் பயணச்சீட்டு இல்லாமல் பயணம் செய்து அபராதத் தொகை செலுத்தி உள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com