புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
‘‘நம் நாட்டில் புகையிலையினால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை காப்பாற்றவும், புகையிலையின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்திடவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். புகையிலையில் சுமார் 5 ஆயிரம் நச்சுப்பொருட்கள் உள்ளன. புற்றுநோய், இதய நரம்பு நோய்கள், சுவாச நோய்கள் உள்ளிட்ட பல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய நச்சுத்தன்மையும் புகையிலையில் உள்ளது.

புகையிலையைப் பயன்படுத்துவதால் பொருளாதாரத்திலும், ஆரோக்கியத்திலும், சூழலியலிலும் இழப்பு ஏற்படுகிறது. மத்திய அரசு நம் நாட்டில் புகையிலை பயன்பாட்டைக் கட்டுப்படுத்த பல்வேறு சட்டங்களை இயற்றி நடைமுறைப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைத்து வயதினரும் புகையிலையைப் பயன்படுத்தி பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதுவும் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகி உடல்நிலை பாதிக்கப்படுபவர்கள் ஏராளம்.

உதாரணத்திற்கு தினம் ஒரு சிகரெட் பிடித்தால் ஒருவரின் வாழ்க்கையில் தினமும் 5 நிமிடங்கள் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தான் புகை பிடித்து தன்னையும் அழித்துக்கொண்டு பிறருக்கும் தீங்கை ஏற்படுத்துவது கொடுமையிலும் கொடுமை. இப்படி புகையிலைப் பொருட்களை பல்வேறு வகையில் பயன்படுத்துபவர்களை பார்த்து மற்றவர்களும் பயன்படுத்தி பாதிக்கப்படுவது தொடர்கிறது.

நம் நாட்டில் 15 வயதுக்கும் மேற்பட்டவர்களில் சுமார் 30 சதவீதம் பேர் புகையிலையைப் பயன்படுத்துவதாக ஆய்வறிக்கை தெரிவித்தது. தமிழகத்தில் சுமார் 20 சதவீதம் பேர் புகையிலையைப் பயன்படுத்துவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே மத்திய அரசு – புகையிலையின் பயன்பாட்டை வெகுவாகக் குறைக்கவும், புகையிலைப் பொருட்களுக்கு அதிகபட்ச வரியை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குழந்தைப் பருவம் முதல் முதியவர் வரை அனைவரிடத்திலும் பத்திரிகைகள், தொலைக்காட்சிகள், வானொலிகள், சுவரொட்டிகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் புகையிலையைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும்.

புகையிலையைத் தடுக்க அரசால் ஏற்கனவே இயற்றப்பட்ட சட்டங்கள் இன்னும் கடுமையாக்கப்பட வேண்டும். மருந்துப்பொருளாகவும், நன்மைகள் தரும் வகையிலும் புகையிலையைப் பயன்படுத்த அனுமதிக்கவும், தீமைகள் தரும் புகையிலைப் பொருட்களை பயன்படுத்துவதை எதிர்க்கவும் மத்திய மாநில அரசுகளும், பொது மக்களும், தொண்டு நிறுவனங்களும், அனைத்து அரசியல் கட்சியினரும் ஏன் நாடே ஒருங்கிணைந்து செயல்பட்டு தீமை விளைவிக்கும் புகையிலையின் பயன்பாட்டை வெகுவாகக் குறைத்து நாட்டு மக்களையும், நாட்டையும் பாதுகாப்போம்.

மேலும் மத்திய அரசு புகையிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ளோரை பயனுள்ள மாற்றுத்தொழிலில் ஈடுபட உதவிகள் செய்து அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட வழிவகுக்க வேண்டும்’’. இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com