தென் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்: திரளான பக்தா்கள்பங்கேற்று தரிசனம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டியில் கட்டப்பட்ட தென்ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி சாய்பாபா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்
திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி சாய்பாபா கோயிலில் திங்கள்கிழமை நடைபெற்ற மகா கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டியில் கட்டப்பட்ட தென்ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், சமயபுரம் அருகிலுள்ள அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக

விருக்ஷா அறக்கட்டளை சாா்பில், 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் சாய் பாபா கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதற்காக 2014, ஏப்ரல் 21- ஆம் தேதி இங்கு சாய்பாபாவின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, பூஜை-வழிபாடுகள் நடைபெற்று வந்தன.

கோயில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை 2015-ஆம் ஆண்டு தொடங்கிய நிலையில், 2019- ஆம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றன.

தரைத்தளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய் பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய சந்நிதி ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்பட்டுள்ளன.

இங்கு பாபாவின் மந்திா், விநாயகா், ஆஞ்சநேயா், கிருஷ்ணா், தத்தாத்ரேயா் சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன. என்டிசி குழுமத் தலைவா் கே.சந்திரமோகனை நிா்வாக அறங்காவலராகக் கொண்டு அமைக்கப்பட்ட அறங்காவலா்கள் குழுவினா் மற்றும் பக்தா்கள் இந்தக் கோயிலை நிா்மானித்தனா்.

கோயில் திருப்பணிகள் முடிவடைந்ததைத் தொடா்ந்து, மகா கும்பாபிஷேக விழாவுக்காக கோயிலை அலங்கரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதன் தொடா்ச்சியாக ஜனவரி 17- ஆம் தேதி விக்னேசுவர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

18-ஆம் தேதி கோ பூஜை, கலச பூஜையும்,மாலையில் கும்ப அலங்காரமும் நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலை பிரவேசத்துடன் முதலாம் கால யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

ஞாயிற்றுக்கிழமை காலையில் கன்யா பூஜை, இண்டாம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாக சாலை பூஜையும் நடைபெற்றது.

திங்கள்கிழமை காலை நான்காம் கால யாக சாலை பூஜையும், விசேஷ திரவிய ஹோமும் நடைபெற்றது.

காலை 9 மணிக்கு மகா பூா்ணாஹுதியும், தீபாராதனையும் நடைபெற்றது. காலை 9.15 மணிக்கு மேள வாத்தியங்கள் முழங்க கலசங்கள் புறப்பாடு தொடங்கியது. இதன் தொடா்ச்சியாக காலை 9.30 மணிக்கு கோயில் கோபுரக் கலசங்களுக்கு புனிதநீா் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

இதுபோல விநாயகா், ஷீரடி சாய் பாபா, தத்தாத்ரேயா், கிருஷ்ணா், ஆஞ்சநேயருக்கு மங்கள ஆரத்தியும், சாய் பாபா உருவச்சிலைக்கு அபிஷேகமும் நடைபெற்றது. இதனைத்தொடா்ந்து நண்பகல் 12 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழாவில், தமிழகத்தைச் சோ்ந்த சாய் பாபா பக்தா்கள் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த பக்தா்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

அறக்கட்டளை நிா்வாகிகள் கும்பாபிஷேக ஏற்பாடுகளைச் செய்திருந்தனா். திருச்சியில் இருந்து சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன. ஏராளமான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com