வலுக்கிறது ரஜினிகாந்த் சர்ச்சை

நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக இருப்பது நல்லது என்று துரைமுருகன் தெரிவித்தார்.
வலுக்கிறது ரஜினிகாந்த் சர்ச்சை


அமைதியாக இருப்பது ரஜினிக்கு நல்லது
 நடிகர் ரஜினிகாந்த் அமைதியாக இருப்பது நல்லது என்று துரைமுருகன் தெரிவித்தார்.


 நாமக்கல்லில், சட்டப்பேரவை பொது கணக்குக் குழு ஆய்வுக்கு வந்திருந்த அதன் தலைவர் துரைமுருகன், செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை  மேலும் கூறியது: பெரியார் புகழ் என்றும் மறையாது.  அவரைப் பற்றி ரஜினிக்கு எதுவும் தெரியாது.  எங்களுடைய தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததுபோல்,  ரஜினி அமைதியாக இருப்பது அவருக்கு நல்லது என்றார் துரைமுருகன்.

தமது கருத்தைத் திரும்பப் பெற வேண்டும்
பெரியார் தொடர்பான தனது கருத்தை நடிகர் ரஜினிகாந்த் திரும்பப் பெற வேண்டும் என்று புதுவை முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார். இதுகுறித்து அவர் கூறியதாவது:


பெரியாரையும், திராவிடர் கழகத்தையும் ரஜினிகாந்த் விமர்சித்திருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. பெரியார் குறித்து தான் பேசிய கருத்தைத் திரும்பப் பெற்று, இந்த சர்ச்சைக்கு ரஜினிகாந்த் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார் அவர்.

தவறாக வழிநடத்துகிறார்கள்
நடிகர் ரஜினிகாந்தை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள் என்று  தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு கூறினார்.


நிருபர்களிடம் அவர் கூறியதாவது: 
50 ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்த சம்பவம் குறித்து  நடிகர் ரஜினிகாந்த் இப்போது பேச வேண்டிய அவசியம் என்னவென்று தெரியவில்லை. அவர் எப்போதும் பொறுமையாகப் பேசக் கூடியவர்.  இவ்விஷயத்தில் அவரை யாரோ தவறாக வழிநடத்துகிறார்கள். அவர் மீது எங்களுக்கு எந்த மனவருத்தமும் கிடையாது. ஆனால், பெரியாரின் பெருமையைச் சீர்குலைக்கும் வகையில் பேசுவது தவறானது.

அந்தக் கருத்தை ஏன் தெரிவித்தார்?
சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வியாழக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது:


ரஜினிகாந்த் தன்னை ஒரு நடுநிலையாளராகக் காட்டிக் கொள்ள முயற்சித்து வருகிறார். ஆனால், அவர் பெரியாரை எதிர்த்துப் பேசியது கேள்விக்குறியாகியுள்ளது. மறக்கப்பட வேண்டிய விஷயம் என தற்போது கூறியுள்ள ரஜினிகாந்த், அந்தக் கருத்தை முதலில் ஏன் தெரிவித்தார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 

கண்டனத்துக்குரியது 
பெரியார் குறித்து நடிகர் ரஜினியின் பேச்சு கண்டனத்துக்குரியது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் சேலத்தில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:


 பெரியாரைப் பற்றிப் பேசும்போது உண்மைக்குப் புறம்பான தகவலின் அடிப்படையில் ரஜினி பேசியிருப்பது மிகப்பெரிய வருத்தத்தை அளிக்கிறது. பெரியார் என்பவர் தனி ஒரு மனிதர் அல்ல.  அவர் ஒரு மிகப்பெரிய இயக்கம்.  தமிழ்நாட்டு மக்களுக்காக, தமிழர் நலனுக்காக எந்த  ஓர் எதிர்பார்ப்புமின்றி வாழ்ந்தவர். 
இதுபோன்ற ஒரு தலைவரைப் பற்றி ரஜினி பேசியிருக்க வேண்டிய அவசியமே இல்லை. பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கு எதிராக இருப்பவர்கள் கூட,  பெரியாரை மதிப்பார்கள். ஆனால், நடிகர் ரஜினியின் இதுபோன்ற கருத்துகள் கண்டனத்துக்குரியவை.

மறக்க வேண்டியதை நினைவூட்டியது ஏன்?
 பெரியார் பேரணி விவகாரம் குறித்து மறக்க வேண்டிய விஷயத்தை ரஜினிகாந்த் நினைவூட்டியது ஏன் என மதிமுக பொதுசெயலாளர் வைகோ கேள்வியெழுப்பியுள்ளார். 


இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: 
ஈ.வெ.ரா. குறித்து நடிகர் ரஜினிகாந்த், "துக்ளக்' விழாவில் கூறிய கருத்துகளை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆதாரப்பூர்வமாக மறுத்திருக்கிறார்.
அதன் பிறகும் தாம் தெரிவித்த செய்திக்காக வருத்தம் தெரிவிக்க மாட்டேன் என்று கூறியுள்ள ரஜினிகாந்த், "இவை மறக்கக் கூடிய நிகழ்வுகள்" என்று கூறுகிறார். 
மறக்க வேண்டிய நிகழ்வுகளை ஏன் அவர் இப்போது நினைவூட்டுகிறார்? என்ற கேள்வி எழுகிறது.

தி.க.வினர் மிரட்டுகிறார்களா?
 சேலத்தில் திராவிடர் கழகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் நடந்ததைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார். அதற்காக, தி.க.வினர் அவரை மிரட்டிப் பார்க்கிறார்களா? என பால்வளத் துறை அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி கூறினார்.


விருதுநகரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியது: கடந்த 1971-ஆம் ஆண்டில் சேலத்தில் திராவிடர் கழகத்தினர் நடத்திய ஊர்வலத்தில் நடந்ததைத்தான் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.  சேலம் பேரணி குறித்து தினமணி உள்ளிட்ட சில நாளிதழ்களில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு, ரஜினி கொடும்பாவியை எரிப்போம், வீட்டை முற்றுகையிடுவோம் என மிரட்டிப் பார்க்கிறார்கள்.
ரஜினிகாந்த் நியாயமானவர், நல்லவர், மனதில் பட்டதை பேசக்கூடியவர். அவர் பேசியதை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்.  அவர் கூறிய பகுத்தறிவு கருத்துகள், மூட நம்பிக்கை குறித்த கருத்துகளை ஏற்றுக்கொள்கிறோம். ஆன்மிகத்தை பொருத்தவரை ரஜினி கூறியதில் தவறில்லை. தி.மு.க.வின் முகமூடிதான் தி.க. என்றார்.

ரஜினி பேசியதில் தவறில்லை
பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த்  பேசியதில் எந்தத் தவறும் இல்லை என மன்னார்குடி ராமானுஜ ஜீயர் தெரிவித்தார்.


சேலத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: 
தஞ்சை பெரிய கோயிலில் ஆகம விதிப்படி தமிழில் குடமுழுக்கு நடத்துவதில் தவறில்லை. தமிழர்களின் தாய் மொழி தமிழ் என்பதால், தமிழில் குடமுழுக்கு நடத்தலாம்.  மேலும், துக்ளக் விழாவில் பெரியார் குறித்து ரஜினி பேசியதில் எந்தத் தவறுமில்லை என்றார்.

இந்து முன்னணி ஆதரவு
சேலம் ஊர்வலம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக, இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி. ஜெயக்குமார் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியது: சேலத்தில் 1971-இல் நடைபெற்ற ஊர்வலத்தில் ஹிந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டது குறித்து ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். இந்த விஷயத்தில் ரஜினிக்கு இந்து முன்னணி ஆதரவு தெரிவிக்கிறது. இந்த விவகாரத்தில்,  அதிமுக அமைச்சர்கள் சிலர் பெரியாருக்கு ஆதரவாகப் பேசுகின்றனர். இதனால், அதிமுக தனது வாக்கு வங்கியை இழந்துவிடும். இந்து மதத்தைப் பற்றி இழிவாகப் பேசும் திராவிடர் கழகம் அதற்கான எதிர்வினையை சந்தித்தாக வேண்டும் என்றார்.
"தினமணி'யைச் சுட்டிக் காட்டி... பேட்டியின்போது, "1971-இல் சேலம் ஊர்வல சம்பவம் தொடர்பாக "தினமணியின் பதிவுகள்' என்ற தலைப்பில் தினமணியில்  வியாழக்கிழமை வெளியான தொகுப்பை வி.பி.ஜெயக்குமார் சுட்டிக்காட்டிப் பேசினார். இந்து முன்னணி மாநிலச் செயலர் குற்றாலநாதன் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com