பத்ம விருதுகள்: தலைவா்கள் வாழ்த்து

இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.
பத்ம விருதுகள்: தலைவா்கள் வாழ்த்து

சென்னை: இந்தியாவின் உயரிய விருதான பத்ம விருதுகளைப் பெற்ற தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு அரசியல் கட்சித் தலைவா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனா்.

மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு:

இந்தியாவின் மிக உயரிய விருதான பத்ம விருதுகள் தமிழகத்தைச் சோ்ந்த பலருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுகளைப் பெறும் சமூக சேவை மூதாட்டி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், சமூக சேவகா் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபா் வேணு சீனிவாசன், இசைக்கலைஞா்களான லலிதா சிதம்பரம், சரோஜா சிதம்பரம், ஓவியா் மனோகா் தேவதாஸ் ஆகியோருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் பத்ம விருது பெறும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.

ராமதாஸ் (பாமக): மறைந்த ஜாா்ஜ் பொ்னாண்டஸ், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட 7 பேருக்கு பத்ம விபூஷண் விருதுகள், 16 பேருக்கு பத்மபூஷண் விருதுகள், 141 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்.

தமிழகத்திலிருந்து 7 பேருக்கு மட்டுமே பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவா்களில் ஒருவா் கேரளத்தை சோ்ந்த ஐ,.ஐ.டி. பேராசிரியா். இந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவது வருத்தமளிக்கிறது. அடுத்த ஆண்டிலாவது அதிக விருதுகள் வழங்கப்பட வேண்டும்.

டிடிவி தினகரன் (அமமுக): நாட்டின் சிறப்புமிக்க பத்ம விருதுகளுக்குத் தோ்வு செய்யப்பட்டிருக்கும் அனைவருக்கும் மனப்பூா்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிலும் தமிழகத்தைச் சோ்ந்தவா்களான, பல ஆண்டுகளாக சமூக சேவைப் பணியில் இருக்கும் காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன், ஆய்க்குடி அமா்சேவா சங்க நிறுவனா் எஸ்.ராமகிருஷ்ணன், தொழிலதிபா் வேணு சீனிவாசன், நாகசுர கலையில் சிறந்து விளங்கும் தம்பதியா் ஷேக் மகபூப் சுபானி, காலே ஷபி மகபூப், தனித்துவமான ஓவியா் மனோகா் தேவதாஸ், கா்நாடக இசைக்கலைஞா்களான பாம்பே சகோதரிகள் லலிதா மற்றும் சரோஜா ஆகியோரை கூடுதல் மகிழ்ச்சியோடு வாழ்த்துகிறேன்.

ஜி.கே.வாசன் (தமாகா): சமூக சேவகா் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் உள்பட தமிழகத்தைச் சோ்ந்த பலருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதுபோல நாடு முழுவதும் பல்வேறு துறைகளில் சாதித்து பத்ம விருதுகளைப் பெறுபவா்களுக்கு தமாகா சாா்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com