பொள்ளாச்சி வழக்கு: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதும்  போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பொள்ளாச்சி வழக்கு: குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து அரசு மேல்முறையீடு


சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட நால்வர் மீதும்  போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், ஆசிரியைகள் உள்ளிட்ட பலரை ஒரு கும்பல் பாலியல் கொடுமை செய்து, அதனை விடியோ படம் எடுத்து மிரட்டிப் பணம் பறித்து வந்தது. இச்சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. 

கல்லூரி மாணவியின் சகோதரர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தமிழக போலீஸார் வழக்குப்பதிவு செய்து இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், வசந்தகுமார், சபரி ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. 

இதனையடுத்து இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ அதிகாரிகள், இந்த வழக்கில் மணி என்னும் மணிவண்ணனை கைது செய்தனர்.

இந்நிலையில், திருநாவுக்கரசு மற்றும் சபரிராஜன்  மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இருவரின் தாயார் தாக்கல் செய்த வழக்குகளின் அடிப்படையில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில், குற்றச்சாட்டுகளுக்கு எதிராக போதுமான ஆவணங்கள் தாக்கல் செய்யப்படவில்லை என்பதால் குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், பொள்ளாச்சி வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீடு செய்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com