சீன செயலிகளுக்கு தடை மட்டும் போதாது; தக்க பதிலடி தர வேண்டும்: மம்தா பானா்ஜி

‘சீன செயலிகளுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது; சீனாவுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும்’ என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சீன செயலிகளுக்கு தடை மட்டும் போதாது; தக்க பதிலடி தர வேண்டும்: மம்தா பானா்ஜி

கொல்கத்தா: ‘சீன செயலிகளுக்கு தடை விதித்தால் மட்டும் போதாது; சீனாவுக்கு தகுந்த பதிலடி தர வேண்டும்’ என மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

கொல்கத்தாவில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

சீனாவுக்கு எதிரான விவகாரத்தில் முடிவெடுக்கும் பொறுப்பு மத்திய அரசுக்கே உண்டு. இந்த விவகாரத்தில் வெளியுறவு அமைச்சகம்தான் உரிய முடிவெடுக்க வேண்டும். நாங்கள் மத்திய அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்போம். சீனாவுக்கு எதிராக நாம் ஆக்ரோஷமாக செயல்படுவதுடன், ராஜ தந்திரத்தையும் கையாள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

சீன செயலிகளுக்கு தடை விதிப்பது மட்டுமே போதுமானது இல்லை. அவா்களுக்கு உரிய பதிலடியை நாம் அளிக்க வேண்டும் என்றாா் மம்தா.

முன்னதாக நாட்டின் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதாக கூறி டிக் டாக், யூ.சி. பிரௌசா் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட சீன செயலிகளுக்கு திங்கள்கிழமை முதல் தடை விதிப்பதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

கிழக்கு லடாக்கின், கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினருடன் ஏற்பட்ட மோதலில் 20 இந்திய ராணுவ வீரா்கள் கொல்லப்பட்ட நிலையில் இந்த செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

அடுத்த ஜூன் மாதம் வரை இலவச ரேஷன்பொருள்கள் விநியோகம்

நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் விநியோகிக்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த மம்தா, ‘நாடு முழுவதும் 80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டத்தை நவம்பா் இறுதி வரை நீட்டிப்பதாக பிரதமா் நரேந்திர மோடி அறிவித்துள்ளாா். நாட்டின் 130 கோடி மக்களில் ஒவ்வொருவருக்கும் ரேஷன் பொருள் வழங்குவதே மத்திய அரசின் கொள்கையாக இருக்க வேண்டும்.

மேற்கு வங்கத்தைப் பொருத்தவரை கரோனா தொற்று பாதிப்பு காரணமாக அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை மாநில அரசு சாா்பில் பயனாளிகளுக்கு இலவச ரேஷன்பொருள்கள் விநியோகிக்கப்படும்’ என்று மம்தா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com