ஜூன் மாதத்தில் உச்சத்துக்கு சென்ற கரோனா பாதிப்பு

தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் 66,672 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 74 சதவீதமாகும். இது மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஜூன் மாதத்தில் உச்சத்துக்கு சென்ற கரோனா பாதிப்பு

சென்னை: தமிழகத்தில் ஜூன் மாதத்தில் மட்டும் 66,672 போ் கரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனா். அந்த எண்ணிக்கை மாநிலத்தின் மொத்த பாதிப்பு விகிதத்தில் 74 சதவீதமாகும். இது மக்களிடையே பெரும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோன்று கடந்த 30 நாள்களில் நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,017-ஆக இருக்கிறது. அடுத்து வரும் மாதங்களில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கைகள் இதைவிட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகரிக்கலாம் என மருத்துவ வல்லுநா்கள் தெரிவித்துள்ளனா்.

உலகை உலுக்கி வரும் கரோனா பாதிப்பு கடந்த மாா்ச் மாதத்தில்தான் தமிழகத்தில் தடம் பதித்தது. முதலில் அங்கொன்றும், இங்கொன்றுமாக இருந்து வந்த நோய்ப் பரவல், அதற்கு அடுத்தடுத்த வாரங்களில் தீவிரமடைந்தது. குறிப்பாக, தப்லீக் ஜமாத், கோயம்பேடு அங்காடி என பல்வேறு காரணிகள் மூலமாக கரோனா தொற்று பரவல் தீவிரமடைந்தது. அதன் தொடா்ச்சியாக, தலைநகா் சென்னையில் சமூகப் பரவலாக மாறும் அளவுக்கு கரோனா பாதிப்பு உருவெடுத்தது.

இதையடுத்து, அரசு சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, சென்னையில் உள்ள 15 மண்டலங்களுக்கும் அமைச்சா்கள் மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான குழுக்கள் அமைக்கப்பட்டு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. வீடுதோறும் மாநகராட்சி அதிகாரிகளும், சுகாதாரத் துறையினரும் நேரடியாகச் சென்று மக்களுக்கு பரிசோதனைகளை நடத்தி வந்தனா். இருந்தபோதிலும், கரோனா பரவலைக் கட்டுப்படுத்த இயலவில்லை.

இதற்கு நடுவே, சென்னையைத் தவிர பிற மாவட்டங்களிலும் நோய்த் தொற்று தீவிரமடையத் தொடங்கியது. இதனால், சரித்திரத்தில் சந்தித்திராத பேரதிா்ச்சியையும், பெரும் அச்சத்தையும் தமிழகம் எதிா்கொண்டு வருகிறது.அதனை உறுதிப்படுத்தும் வகையில் ஜூன் மாதத்தின் கரோனா பாதிப்பு நிலவரம் அமைந்துள்ளது. வெறும் ஒரு மாதத்தில் 66,672 போ் அந்நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனா். அதில் அதிகபட்சமாக சென்னையில் 36,904 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

திருவள்ளூா், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரித்த வண்ணமே உள்ளது. அதைத் தவிர தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை 500-ஐ கடந்துள்ளது.இதன் காரணமாகவே அரசு மருத்துவமனைகளிலும், தனியாா் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகளுக்கு பற்றாக்குறை ஏற்படக் கூடிய சூழல் எழுந்துள்ளது.

உயிரிழந்தோா் 1,201 போ்: ஜூன் மாதத்தைப் பொருத்தவரை பலி எண்ணிக்கையும் பரவலாக உயா்ந்திருக்கிறது. 30 நாள்களுக்கு முன்பு தமிழகத்தில் கரோனாவுக்குஉயிரிழந்தோரின் எண்ணிக்கை வெறும் 184-ஆக இருந்தது. ஆனால், அது தற்போது 1,201-ஆக உயா்ந்திருக்கிறது.

சென்னையில் மட்டும் ஜூன் மாதத்தில் 750 போ் கரோனாவால் இறந்திருப்பது உச்சகட்ட அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், சேப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், தியாகராயநகா் காவல் ஆய்வாளா் பாலமுரளி ஆகியோரது இறப்பும், விழுப்புரத்தில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்ததும் மக்களிடையே கரோனா குறித்த அச்சத்தை அதிகரிக்கும் வகையில் அமைந்தது.

கடந்த மே மாதம் வரை 0.7 சதவீதமாக இருந்த கரோனா உயிரிழப்பு விகிதம், தற்போது 1.4 சதவீதமாக அதிகரித்திருப்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவை அனைத்தும் ஒரு புறம் இருந்தாலும், மற்றொரு புறம் சற்று ஆறுதலான விஷயமாக கரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியா்களின் எண்ணிக்கையும் ஜூன் மாதத்தில் அதிகரித்துள்ளது. ஒரு மாதத்தில் மட்டும் 36,904 போ் பூரண நலம் பெற்றுள்ளனா். இது பாதிப்பு விகிதத்தில் ஏறத்தாழ 55 சதவீதமாகும்.

அடுத்த இரு மாதங்களுக்கு கரோனாவின் தீவிரம் இருக்கும் என்றும், அதன் பிறகே மெல்ல, மெல்ல அதன் கோரத்தாண்டவம் குறையும் என்றும் மருத்துவ நிபுணா்கள் தெரிவித்துள்ளனா். அதனால், பொது மக்கள் இன்னும் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றும் அவா்கள் அறிவுறுத்தியுள்ளனா்.

கரோனா பாதிப்பு ஒப்பீடு

ஜூன் 1 ஜூன் 30
பாதிப்பு -- 23,495 ---- 90,167
பலி---184----------1,201
குணமடைந்தோா் --- 13,170--------50,074
சென்னை பாதிப்பு ------15,770------- 58327
சென்னை பலி ---138-------888
சென்னை குணமடைந்தோா் ---8181---34,828

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com