தூத்துக்குடி புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார்.


சென்னை: தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) அருண் பாலகோபாலன் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். புதிய எஸ்.பி.யாக ஜெயக்குமார் நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு செவ்வாய்க்கிழமை பிறப்பித்தது.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் செல்லிடப்பேசி கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் பொது முடக்கத்தை மீறியதாக கடந்த 19 -  ஆம் தேதி காவல் துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்தனர். காவல்துறையினர் செய்த கொடூர சித்ரவதையின் காரணமாக இருவரும் இறந்ததாக பொதுமக்களும், அரசியல் கட்சிகளும் குற்றம்சாட்டினர். மேலும் சாத்தான்குளத்தில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அந்த காவல் நிலையத்தில் ஆய்வாளர், இரு காவல் உதவி ஆய்வாளர்கள், இரு காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். அதேவேளையில் இச் சம்பவம் உயர் அதிகாரிகள் பணியில் கவனக்குறைவுடன் இருந்ததின் விளைவாக ஏற்பட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதன் விளைவாக தூத்துக்குடி ஏ.எஸ்.பி.,  டி.குமார், சாத்தான்குளம் டி.எஸ்.பி., சி.பிரதாபன் ஆகியோர் திங்கள்கிழமை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த அருண் பாலகோபாலனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியும், விழுப்புரம் எஸ்.பி., எஸ்.ஜெயக்குமாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக நியமனம் செய்தும் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.

தென் மண்டல ஐ.ஜி.யாக பணிபுரிந்து வந்த சண்முக ராஜேஸ்வரன் செவ்வாய்க்கிழமையுடன் ஓய்வு பெற்றார். இதையடுத்து அந்த பணியிடத்துக்கு தமிழக காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி., எஸ்.முருகனை நியமித்தும் தமிழக அரசின் உள்துறை உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com