மானாமதுரை: விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கும் பன்றிகளால் விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கோடை விவசாயம் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 
மானாமதுரை: விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கும் பன்றிகளால் விவசாயிகள் கவலை

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதியில் கோடை விவசாயம் செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களில் இரவு நேரங்களில் பன்றிகள் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருவதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

இவர்கள் பன்றிகளிடமிருந்து பயிர்களைக் காப்பாற்ற பல்வேறு வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். மானாமதுரை பகுதியில் பெரும்பகுதி விவசாயம் வைகைப்பாசனம் மற்றும் கிணற்றுப்பாசனம் மூலம் நடைபெற்று வருகிறது. மானாமதுரை பகுதியில் தற்போது பல கிராமங்களில் கிணற்றுப் பாசனத்தை நம்பி கோடை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. கால்பிரிவு, கீழமேல்குடி, இடைக்காட்டூர், பீசர்பட்டிணம், கீழப்பசலை உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் கோடைக்கால விவசாயமாக நெல் பயிரிட்டுள்ளனர். 

ஏற்கெனவே இக்கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் பருவத்தில் பயிர் செய்து நெல் அறுவடை செய்துவிட்ட நிலையில் தற்போது கோடை விவசாயம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயிர்கள் வளர்ந்து  கதிர்விட்டு வருகிறது. பருவத்தில் கிடைத்த மகசூல் கிடைக்கவில்லையென்றாலும் ஓரளவுக்கு சாகுபடி செய்துவிட முடியும் என கோடை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் நம்புகின்றனர். 

இதற்கிடையில் கீழமேல்குடி, கீழப்பசலை, கால்பிரிவு உள்ளிட்ட பல கிராமங்களில் இரவு நேரங்களில் அந்தந்த கிராமங்களின் கண்மாய் பகுதியை ஓட்டி அடர்த்தியாக வளர்ந்திருக்கும் கருவேல் மரங்களுக்கு உள்ளேயிருந்து வெளியே வரும் கொளுத்து வளர்ந்து உயரமாக இருக்கும் பன்றிகள் நெல் நடவு செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து நெற்கதிர்களைத் தின்றும் பயிர்களை கால்களால் மிதித்தும்  நாசமாக்கி வருகின்றன. 

விவசாயிகள் இரவு நேரங்களில் கண் விழித்து பன்றிகள் வரும்போது வெடிகளை வெடிக்கச் செய்து பன்றிகளை விரட்டி வருகின்றனர். மேலும் இவர்கள் பன்றிகளை விரட்ட பல்வேறு உத்திகளைக் கையாண்டும் பலன்கொடுக்கவில்லை. பன்றிகள் வயல்களுக்குள் புகுந்து பயிர்களை நாசமாக்கும் சம்பவங்கள் தினமும் நடப்பதாக விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். பன்றிகள் பயிர்களை நாசமாக்காமல் இருந்தால் எதிர்பார்க்கும் ஓரளவு மகசூலாவது கிடைக்கும். 

பன்றிகளின் அட்டகாசம் தொடர்ந்தால் மகசூல் எதிர்பார்த்தபடி இருக்காது என்றும் விவசாயிகள் தெரிவித்தனர். எனவே விவசாய நிலங்களுக்குள் புகுந்து நாசமாக்கும் பன்றிகளை விரட்ட வேளாண்மைத் துறையினர் ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com