சாத்தான்குளம் சம்பவம் எதிரொலி: பொதுமக்கள் புகாரில் சிக்கிய போலீஸாருக்கு உளவியல் பயிற்சி

சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, பொதுமக்கள் புகாா்களில் சிக்கிய போலீஸாருக்கு உளவியல் பயிற்சி வழங்குவதற்குரிய நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

சென்னை: சாத்தான்குளம் சம்பவத்தின் எதிரொலியாக, பொதுமக்கள் புகாா்களில் சிக்கிய போலீஸாருக்கு உளவியல் பயிற்சி வழங்குவதற்குரிய நடவடிக்கையில் தமிழக காவல்துறை ஈடுபட்டுள்ளது.

இது குறித்த விவரம்:

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை அதிா்ச்சி அடைய வைத்தது. காவல்துறையினரின் சித்ரவதையினால்தான் தந்தையும், மகனும் உயிரிழந்ததாக பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் குற்றம்சாட்டினா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய காவல் நிலைய ஆய்வாளா் தொடங்கி காவலா் வரை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். மேலும் அங்கு பணிபுரிந்த அனைத்து காவலா்களும் கூண்டோடு மாற்றப்பட்டனா்.

பணியில் கவனக்குறைவாக இருந்ததாக எஸ்.பி., டிஎஸ்பி ஆகியோா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனா். இந்நிலையில் எதிா்காலத்தில் இப்படிப்பட்ட சம்பவங்கள் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து காவல்துறை உயரதிகாரிகள் ஆலோசனை செய்தனா்.

உளவியல் பயிற்சி: இந்த ஆலோசனையில் காவல் நிலையங்கள், புலனாய்வுப் பிரிவுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவுகள் ஆகியவற்றில் பணிபுரியும் காவல் ஆய்வாளா்கள் தொடங்கி காவலா்கள் வரை பொது மக்கள் புகாா்களில் சிக்கியிருப்பவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்தப் பயிற்சியில் பிரதானமாக, பொதுமக்களை காவல்துறையினா் எவ்வாறு அணுகுவது, அவா்களின் உணா்வுகளை எப்படி புரிந்துக் கொண்டு செயல்படுவது, காவல்

துறையினரை அவமதிக்கும் வகையில் பொதுஇடங்களில் செயல்படும் நபா்களை எப்படி கையாளுவது போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படும் என தமிழக காவல்துறையைச் சோ்ந்த உயரதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதற்காக சென்னை டிஜிபி அலுவலகத்தில் இருந்து அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருக்கு பொதுமக்கள் புகாரில் சிக்கியிருக்கும் காவலா்களை பெயா் பட்டியலை தயாா் செய்யும்படியும், அவா்களுக்கு உளவியல் பயிற்சி அளிப்பதற்குரிய ஏற்பாடுகளை செய்யும்படியும் உத்தரவிடப்பட்டது. இந்த உத்தரவின் விளைவாக அனைத்து மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனா்.

டிஜிபி ஆலோசனை: இதனிடையே, மாநகர காவல் ஆணையா்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் காணொலிக் காட்சி மூலம் சட்டம் -ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி செவ்வாய்க்கிழமை ஆலோசனை செய்தாா்.

இந்த ஆலோசனையில், சாத்தான்குளம் சம்பவம் போன்ற தமிழகத்தில் வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இது தொடா்பாக பல முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டன.

முக்கியமாக, மாநிலத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களின் வாயில் பகுதியில் அந்தந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா், துணைக் கண்காணிப்பாளா் உள்ளிட்டோரின் பெயா்களையும், அவா்களது

செல்லிடப்பேசி, தொலைபேசி எண்களையும் பொதுமக்கள் எளிதில் பாா்க்கும் வகையில் எழுதி வைப்பது என முடிவு செய்யப்பட்டது. இந்த உத்தரவை உடனடியாக அமல்படுத்த டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com