ஆன்லைன் முறையில் விவசாயிகள் கடன் பெறுவதற்கான வழிமுறைகள் செய்யப்படும்: இரா.காமராஜ்

ஆன்லைன் முறையில் விவசாயிகள் எளிதாக கடன் மற்றும் உரம் போன்ற பொருள்கள் பெறுவதற்கான வழிமுறைகள் செய்யப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
ஆலங்குடி கிராமத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தார்.
ஆலங்குடி கிராமத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமைத் துவக்கி வைத்தார்.

 
ஆன்லைன் முறையில் விவசாயிகள் எளிதாக கடன் மற்றும் உரம் போன்ற பொருள்கள் பெறுவதற்கான வழிமுறைகள் செய்யப்படும் என தமிழக உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் நன்னிலம் அருகே செய்தியாளர்களிடம் பேசும்போது தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது, 

நீதிமன்ற உத்தரவின்படி புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவிகள் செய்யப்படும். ரேஷன் அட்டை இல்லாத புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் ஏற்கனவே உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. விடுபட்டவர்கள் யாராவது இருப்பின் அவர்களையும் கண்டறிந்து நீதிமன்ற உத்தரவின்படி உதவிகள் வழங்கப்படும். 

தமிழகஅரசு அறிவிப்பின்படி குறைவின்றி பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் தொடர்ந்து அரிசி வழங்கப்பட்டு வருகிறது. ஆன்லைன் என்பது காலத்தின் கட்டாயம். அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. இருந்தபோதிலும் விவசாயிகள் எந்தவித சிரமமும் இன்றி, எளிதாக கடன் மற்றும் உரம் போன்ற பொருள்கள் பெற்றுக்கொள்ள வழிவகைகள் செய்யப்படும்.

வெளிநாட்டு வாழ் தமிழர்களை மீட்டெடுத்து அழைத்து வருவதற்கான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. தற்போதும் வெளிநாட்டிலிருந்து வந்து கொண்டிருக்கிறார்கள். இந்தியாவிலேயே கரோனாத் தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்து, வீடு திரும்புவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் தான் அதிக சதவிகிதத்தில் உள்ளது. தமிழகத்தில் குணமடைந்து வீடு திரும்பிச் செல்வோரின் எண்ணிக்கை 62 சதவீதமாக உள்ளது. 

கரோனாத் தொற்று பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், தமிழகத்தில் நடைபெறுகின்ற மக்களுக்கான வளர்ச்சிப்பணிகள் பாதிக்கப்படக்கூடாது என்ற உயர்ந்த எண்ணத்தின் அடிப்படையில் தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. தெற்காசியாவிலேயே மிகப்பெரிய கால்நடைப் பூங்கா சேலம் தலைவாசலில் அதிமுக ஆட்சியில் தான் துவக்கப்பட்டுள்ளது. 

கால்நடை வளர்ப்போர் மற்றும் விவசாயிகள் பயனடைந்து வருகின்ற மிகப்பெரியப் பூங்காவாக இந்த பூங்கா செயல்பட்டு வருகிறது என்றார். தமிழகத்தில், கால்நடை வளர்க்கும் விவசாயிகள்  ஏதேனும் அவசர உதவி தேவைப்பட்டால், 1962 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு  அவசர கால்நடை ஆம்புலன்ஸ் உதவியினை பெறலாம் எனத் தெரிவித்தார்.
  
முன்னதாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டம் ஆலங்குடி கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாமினை தமிழக உணவுத்துறை அமைச்சர் துவக்கி வைத்தார். இம்முகாமில் கோமாரி நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, கால்நடைகளுக்கான சினை ஊசி போன்றவை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கால்நடை வளர்ப்போருக்கு தாதுஉப்பு கலவைகள், தீவன புள் கரணை, தீவன விதைகள் ஆகியவற்றை அமைச்சர் வழங்கினார். 

இதனைத்தொடர்ந்து நன்னிலம் பேரூராட்சி பேருந்து நிலையம் அருகில், கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் மற்றும் முகக்கவசங்களை, வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு வழங்கி, அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது, சமூக இடைவெளியைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.

திருவாரூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் துவக்க நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தனபாலன், முன்னாள் எம்பி டாக்டர் கே.கோபால், வருவாய் கோட்டாட்சியர் ஜெயப்பிரீத்தா, கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் விஜயகுமார், நன்னிலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் விஜயலட்சுமி இராம குணசேகரன், துணைத் தலைவர் சிபிஜி.அன்பு, கூத்தனூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்கத் தலைவர் இராம குணசேகரன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  ஏ என் ஆர்.பன்னீர்செல்வம், ஒன்றிய குழு முன்னாள் தலைவர் எஸ்.சம்பத், அரசு அலுவலர்கள், கூட்டுறவு மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com