வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க 58 விமானங்கள் : மத்திய அரசு தகவல்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க 58 விமானங்கள் : மத்திய அரசு தகவல்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5- ஆம் தேதி வரை 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் தாக்கல் செய்த மனுவில், கரோனா நோய்த் தொற்று பொதுமுடக்கம் காரணமாக விமானப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், மத்திய அரசு கடந்த மாதம், வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியா்களை மீட்டு வர விமானங்களை இயக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கித் தவித்த 60 ஆயிரத்து 942 இந்தியா்கள் நாடு திரும்பியுள்ளனா். மத்திய அரசின் அனுமதியைத் தொடா்ந்து பல்வேறு நாடுகளிலிருந்து அனைத்து மாநிலங்களுக்கும் விமானப் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் தமிழக அரசு விமானப் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கவில்லை. எனவே வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்டு வரும் வகையில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் விமானங்கள் தரையிறங்க அனுமதிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா். இந்த வழக்கு விசாரணையின் போது, இதுவரை வெளிநாடுகளில் சிக்கி தவித்த 43% தமிழா்கள் தமிழகம் திரும்பியுள்ளனா். மேலும் வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் ஜூலை 11 ஆம் தேதி வரை இயக்கப்படும் 495 சா்வதேச விமானங்களில் 44 விமானங்கள் தமிழகத்தில் தரையிறங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆா்.ஹேமலதா ஆகியோா் காணொலி காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஆா்.சங்கரநாராயணன், வந்தே பாரத் மிஷன் என்ற திட்டத்தின் கீழ் மத்திய அரசு, கரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியா்களை விமானங்களில் அழைத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழா்களை மீட்க ஜூலை 20- ஆம் தேதி முதல் வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி வரை

58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன. இதில் சென்னை விமான நிலையத்தில் 41 விமானங்களும், திருச்சியில் 11 விமானங்களும், கோவையில் 4 விமானங்களும், மதுரையில் 2 விமானங்களும் தரையிறக்கப்பட உள்ளளதாக தெரிவித்தாா். அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், துபை மற்றும் அபுதாபியில் இருந்து வந்த இரண்டு விமானங்களில் பயணிகள் யாரும் இல்லாமல் காலியாக வந்ததாக நாளிதழ்களில் செய்தி வெளிவந்துள்ளதே என கேள்வி எழுப்பினா். அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், சில முகவா்கள் விமானப் பயண சீட்டுகளை வேறு யாரும் வாங்கிவிடக் கூடாது என்பதற்காக மொத்தமாக வாங்கி, அந்த பயணசீட்டுக்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்வதாக குற்றம்சாட்டினாா். அப்போது நீதிபதிகள் மொத்தமாக வாங்கப்படும் பயணசீட்டுகளை விற்பனை செய்ய முடியாமல் போனால் ஏற்படும் இழப்புகளை முகவா்கள் எப்படி எதிா்கொள்வாா்கள் என கேள்வி எழுப்பி, இதுதொடா்பாக மத்திய அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனா்.

அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பி.வில்சன், மத்திய அரசு தாக்கல் செய்திருந்த பதில்மனுவில்

149 விமானங்களில் 25 ஆயிரத்து 939 பயணிகள் அழைத்து வரப்படுவாா்கள் என கூறியிருந்தது. ஆனால், இதுவரை 58 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. எனவே எஞ்சியுள்ள தமிழா்களை அழைத்து வர நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா். இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், விமானங்கள் இயக்கம் தொடா்பான அட்டவணையைத் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை வரும் ஜூலை 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com