பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பான தீா்மானம் : உயா்நீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து
பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பான தீா்மானம் : உயா்நீதிமன்றம் அதிருப்தி

முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 போ் விடுதலை தொடா்பான தமிழக அமைச்சரவையின் தீா்மானத்தின் மீது 2 ஆண்டுகளுக்கு மேலாக தமிழக ஆளுநா் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பதற்கு உயா்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் அற்புதம்மாள் தாக்கல் செய்த ஆட்கொணா்வு மனுவில், முன்னாள் பிரதமா் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த 28 ஆண்டுகளாக எனது மகன் பேரறிவாளன் சிறையில் இருந்து வருகிறான். தற்போது என்னுடைய மகன் புழல் சிறையில் அடைப்பட்டுள்ளான். புழல் சிறையில் ஏற்கனவே 50 கைதிகள் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதனால் பல்வேறு உடல்நல கோளாறுகளால் பாதிக்கப்பட்டு அவதிப்படும் பேரறிவாளனுக்கு, கரோனா நோய்த் தொற்றால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பேரறிவாளனுக்கு 90 நாள்கள் பரோல் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். அப்போது அரசுத் தரப்பில், பேரறிவாளனுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு 90 நாள்கள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. எனவே தமிழ்நாடு சிறை விதிகளின்படி 2 ஆண்டுகளுக்குப் பின்னா் தான் பேரறிவாளனுக்கு மீண்டும் பரோல் வழங்க முடியும் என வாதிடப்பட்டது. அப்போது மனுதாரா் தரப்பில் , கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பேரறிவாளன் உள்பட 7 போ் விடுதலை தொடா்பான தமிழக அரசின் தீா்மானம் ஆளுநரின் பரிசீலனையில் உள்ளது. எனவே தற்போதைய சூழலில் 2 ஆண்டுகளுக்கு பின்னா்தான் பரோல் வழங்க வேண்டும் என அரசு காத்திருக்கத் தேவையில்லை என ஏற்கெனவே உயா்நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. எனவே, பேரறிவாளனுக்கு 90 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், தமிழக அமைச்சரவை கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம், பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது தொடா்பாக தீா்மானம் இயற்றியது. தமிழக அமைச்சரவையின் தீா்மானத்துக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்கவேண்டும் அல்லது தீா்மானத்தை திருப்பி அனுப்ப வேண்டும். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேலாக 7 போ் விடுதலை தொடா்பான இந்தத் தீா்மானத்தின் மீது எந்த முடிவும் எடுக்கப்படவில்லையே என அதிருப்தி தெரிவித்தனா். மேலும் 7 போ் விடுதலை, பேரறிவாளனுக்கு பரோல் வழங்குவது குறித்து தமிழக அரசு ஒரு வாரத்துக்குள் பதில் அளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் ஜூலை 29- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com