'மன் கி பாத்' உரையில் நாமக்கல் மாணவியுடன் பேசிய பிரதமர் மோடி!

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நடப்பு ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.
தந்தை மற்றும் தாய்,  சகோதரியுடன் மாணவி கனிகா
தந்தை மற்றும் தாய்,  சகோதரியுடன் மாணவி கனிகா

பிரதமர் நரேந்திர மோடி இன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் நாமக்கல்லைச் சேர்ந்த மாணவி என்.என்.கனிகாவுக்கு தமது பாராட்டுக்களை தெரிவித்தார். 

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இன்று பேசிய பிரதமர் மோடி, நடப்பு ஆண்டு சிபிஎஸ்இ தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுடன் காணொலி வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர், 'நம் தேசம் ஒரு நேர்மறையான மனநிலையுடன் செல்வதைப் பார்ப்பதால் நாடு எவ்வளவு வேகமாக மாறுகிறது என்பது தெரியும். முன்னதாக புகழ்பெற்ற பள்ளி, கல்லூரிகளில் பயின்ற பெரும்பாலான மாணவர்கள் மட்டுமே விளையாட்டு உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வெற்றி பெற்றனர். ஆனால் இப்போது கிராமங்கள், சிறு நகரங்கள் மற்றும் சாதாரண குடும்பங்களைச் சேர்ந்த பலரும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். அதேபோன்று நடப்பு ஆண்டு பொதுத் தேர்வில் பல்வேறு இன்னல்களை கடந்து மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றார். 

தொடர்ந்து, ஹரியாணாவின் பானிபட் நகரைச் சேர்ந்த கிருத்திகா, கேரளத்தின்  எர்ணாகுளத்தைச் சேர்ந்த விநாயக், உ.பி. அம்ரோஹாவைச் சேர்ந்த உஸ்மான் சைபி ஆகியோருடன் பேசிய பிரதமர் மோடி தமிழகத்தில் நாமக்கலைச் சேர்ந்த கனிகாவுடன் பேசினார்.

நாமக்கல்லைச் சேர்ந்த ஏழை லாரி ஓட்டுநர் எஸ்.கே.நடராஜன் என்பவரின் மகள் கனிகா காவேட்டிப்பட்டியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளியில் பயின்று பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்வில் 500-க்கு 490 மதிப்பெண்கள் எடுத்து சாதனை புரிந்ததை குறிப்பிட்டு பேசினார்.

ஏழைக் குடும்பத்தில் பிறந்து மிக நல்ல முறையில் கல்வி கற்று இன்று மருத்துவராக வரவேண்டும் என்ற கனவுடன், லட்சியத்துடன் தமது கல்வி பயணத்தை தொடரும் மாணவிக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், மாணவிக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் தமது கருத்துக்களை எடுத்துக் கூறினார்.

மேலும் அவரது சகோதரி ஷிவானி என்பவரும் மருத்துவம் படித்து வருவதையும் பிரதமர் பாராட்டினார். ஏழைக் குடும்பத்தில் இருந்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் மிக நல்ல முறையில் நாட்டிற்கு சேவை ஆற்ற முடியும் என்றும் அப்போது கூறினார்.

பின்னர், 'நாமக்கலைப் பற்றி நான் கேட்கும்போது, ​​ஆஞ்சநேயர் கோயில் நியாபகம் வரும். இனி நாமக்கலை நினைவு கூர்ந்தால் உங்கள் நியாபகமும் வரும்' என்று தெரிவித்தார்.

இதுகுறித்து பிரதமரிடம் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் எங்களை ஊக்குவிக்கும் வகையில் அவரின் பேச்சு அமைந்திருந்ததாகவும் நாமக்கல் கனரக லாரி ஓட்டுநர் நடராஜன்-ஜோதி தம்பதியினர் மற்றும் அவரது மகள்  கனிகா ஆகியோர் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர்.

தனது தந்தை நன்கு படிக்க வைத்ததால் தான் பிளஸ்- 2 சிபிஎஸ்சி தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற முடிந்ததாகவும், நாட்டின் பிரதமர் எங்களுடன் கலந்துரையாடியதை மிகவும் பெருமையாக கருதுவதாகவும் மாணவி கனிகா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com