மக்கள் மனதில் நீக்கமற நிறைந்த அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று!

உலக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்து இருக்கும் ஏவுகணை நாயகன் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று. 
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்
ஏ.பி.ஜே.அப்துல் கலாம்

உலக மக்களின் இதயங்களில் நீக்கமற நிறைந்து இருப்பவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம். அப்படிப்பட்ட மகத்தான மாமனிதரின் எண்ண வடிவில் எழுந்த கனவுகள். உலகத்தில் பல இடங்களுக்கு சென்ற போது கலாம் சந்தித்தவர்களில், குழந்தைகள், துறவிகள், ஞானிகள், ஆசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழில் துறைத் தலைவர்கள், அரசியல் தலைவர்களிடமிருந்தும் கூட தெரிந்து கொண்ட விஷயங்கள் அவரது மனதை ஆராய்ந்து பார்க்கத் தொடங்கியது.

வளர்ச்சியடைந்த ஒரு தேசமாக மறுவடிவம் பெறுவதற்கான ஆற்றல் இந்திய தேசத்திடம் உள்ளது என்பதில் துளியும் கூட சந்தேகம் இல்லை. விண்வெளி, பாதுகாப்பு மற்றும் அணுசக்தித் துறையில் கலாம் பெற்ற அனுபவங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

உலகிலேயே தலை சிறந்ததைச் சாதிக்கும் வல்லமை கொண்டவர்கள் நம் இந்தியர்கள். பிரபஞ்சத்தில் வேறு எந்த நாட்டிலிருந்தும் வேறுபடுத்திக் காட்டும் ஒரு தனித்தன்மை, பளிச்சிடும் நம்பிக்கை மற்றும் ஆற்றல் இணைந்த ஓர் அற்புதமான சங்கமச் சக்தி கொண்டவர்கள் இந்தியர்கள்.

இந்திய மக்களின் ஆற்றல்கள் பயன்படுத்தப்படாமல் இருக்கிறது. நமக்குத் தேவையான நிறைய வளங்கள் நம்மிடம் உள்ளன. நமது குறிக்கோள்களில் நாம் முழு நம்பிக்கை வைக்கும்போது, நமது கனவு நனவாகும். அடுத்தடுத்த வெற்றிகளும் தொடரும். நமக்குள்ளே அந்த நம்பிக்கையை வளர்த்துக்கொள்வது பற்றியும், நம்மைப் பின் தங்க வைக்கும் தடைகளைத் தகர்த்தெறிந்து விட்டு முன்னேறுவது பற்றியும் சிந்திக்க வேண்டும். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவைப் பகிர்ந்து கொள்வதற்காக உங்களுடைய சொந்த வாழ்க்கை மூலமாகவும், மற்றவர்களின் வாழ்க்கை மூலமாகவும் அந்தக் கனவு மெய்ப்பட வேண்டும். அமைதி நிலவாவிட்டால் எந்த வளர்ச்சியையும் காணவே முடியாது.

வெளிப்படையாகத் தெரியாமல் மறைந்திருக்கும் அபரிமிதமான வளத்தை இயற்கை உள்ளபடியே நமக்கு வரமாக வழங்கியுள்ளது. வளங்களின் பற்றாக்குறை, நமது பிரச்னைகளுக்குக் காரணமல்ல. அவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில், நாம் மேற்கொள்ளும் அணுகு முறைகள் தான் பிரச்னைகளைக் கிளப்பி விடுகின்றன.

இப்போது, நாம் செலவழிக்கும் வளங்களையும், பணத்தையும் கொண்டு நாம் எட்டும் பலன்களைப் போல மூன்று மடங்கு அதிகமான ஆதாயத்தை சுலபமாகப் பெற்று விட முடியும். அதையும் கூட, பாதிக்குப் பாதி குறைவான காலக்கட்டத்துக்குள் சாதித்து விட முடியும். பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரிலும், வர்த்தகக் கட்டுப்பாடுகள், அமைப்பு ரீதியிலான ஒழுங்குமுறை, குழு மனோபாவம் என்ற பெயரில் தொழில் முனைப்பை மழுங்கடிக்கச் செய்யும் விதிமுறைகளையும், தங்களை மந்தப்படுத்தி முடக்கி விடும்.

விதிமுறைகளையும் கடந்து, இளைய சமுதாயம் எழுச்சி பெற்றாக வேண்டும். சிந்தனைதான் முதலீடு, முனைப்புதான் வழி முறை, கடும் உழைப்பே தீர்வு என்பதை நினைவில்கொள்ள வேண்டும். வளர்ச்சியடைந்த தேசம் என்ற நிதர்சனம் இந்திய மக்களிடத்தில் அன்றாட வாழ்க்கையில் ஓர் அங்கமாகி விட வேண்டும் என்பதுதான் அப்துல் கலாமின் கனவாகும்.

எனவே, அப்துல் கலாம் காட்டிய லட்சியப் பாதையில் பீடு நடைபோட்டு அவரது கனவை நனவாக்க வேண்டியது நமது கடமையாகும். வரும் காலங்களில் விவசாயிகள் அனைவரும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்பதை தனது கருத்தாகவும் அப்துல் கலாம் சொல்லியுள்ளார்.

கைவினைப் பொருள்கள், கைவினைக் கலைஞர்கள் அதிகமாக வளர்ச்சி அடைய வேண்டும். பயன்பாட்டில் உள்ள பிளாஸ்டிக் பொருள்களை குப்பையாக்காமல் மறு உபயோக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார் கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com