தங்கத்தின் விலை குறையுமா, எப்போது குறையும்?

பாதுகாப்பான, லாபகரமான முதலீடாக தங்கம் இருப்பதால் சாமானியர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். 
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை
தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை, கடந்த 10 ஆண்டுகளில் வரலாறு காணாத அளவு உயரத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பணக்காரர்களும் தொழிலதிபர்களும் லாபகரமான முதலீடாகக் கருதினாலும் ஏழை எளிய மக்கள் தங்கத்தைக் கண்டு ஏங்கும் நிலை ஏற்படத் தொடங்கியுள்ளது. 

வியாழக்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து 9-ஆவது நாளாக உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் ரூ. 40,824-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ. 5,103-க்கு விற்பனை ஆகிறது.

ஜூலை 21-ஆம் தேதி முதல் ஜூலை 29-ஆம் தேதி வரை மட்டும் சவரனுக்கு ரூ. 3,208 வரை உயா்ந்துள்ளது. ஜனவரி மாத தொடக்கத்தில் ஒரு சவரன் தங்கம் ரூ. 30,520 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஜூலை 22-ஆம் தேதி ரூ.38 ஆயிரத்தையும், 24-ஆம் தேதி ரூ.39 ஆயிரத்தையும், 27-ஆம் தேதி ரூ.40 ஆயிரத்தையும் தாண்டி இன்றைய நிலவரப்படி ரூ. 41 ஆயிரத்தை நெருங்கியுள்ளது தங்கத்தின் விலை.

தங்கம் விலை உயரக் காரணம்

தற்போதைய சூழ்நிலையில் தங்கம் விலை உயர்வதற்குப் பொருளாதார சரிவு, அமெரிக்க டாலர் மதிப்பு ஆகிய இரண்டும் முக்கிய காரணங்களாக  பார்க்கப்படுகிறது. ஆனால், இதுதவிர உலக நாடுகளிடையேயான பிரச்னைகள், தங்கத்தில் முதலீடு, வட்டி விகிதங்களில் மாற்றம் ஆகியவையும் காரணமாகக் கூறப்படுகிறது. 

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பில் மாற்றம் ஏற்பட்டால் சாதாரணமாக தங்கத்தின் விலையிலும் மாற்றம் ஏற்படும். தற்போது கரோனா பொதுமுடக்கம் காரணமாக பொருளாதார சரிவினால் இந்திய ரூபாய் மதிப்பு உயர்ந்துள்ளது. 

கடந்த பிப்ரவரி மாதத்தில் 71.11 ஆக இருந்த டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஜூலை மாதத்தில் 74.60 ஆக உயர்ந்துள்ளது. 

இதுதவிர உலக சந்தையில் கடந்த 2011 செப்டம்பர் மாதம் ஒரு அவுன்ஸ் தங்கம் $1,900 ஆக இருந்தது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் மதிப்பு அதிகபட்சமாக $1981.10 உயர்ந்துள்ளது.

2011 ஆம் ஆண்டும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உச்சத்தை அடைந்தது. அந்த சமயத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 45 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

உலக நாடுகளுக்கு இடையேயான பிரச்னைகள்

பொதுவாக உலகில் பெரிய நாடுகளுக்கு இடையே போர் மூளும் சூழல், பொருளாதாரத் தடை, பொதுத் தேர்தல் ஆகியவற்றின்போது தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்படும். 

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்ற பிறகு, பல்வேறு நாடுகளுக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறது. அமெரிக்க- சீனா இடையே வர்த்தக ரீதியான பிரச்னைகளும் இருந்து வருகின்றன. 

மேலும், தங்கம் அதிகம் கொள்முதல் செய்யக்கூடிய ரஷியா, சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் சமீப காலமாக குறைவாகவே தங்கம் கொள்முதல் செய்துள்ளன. 

இந்தியாவைப் பொருத்தவரையில் கடந்த சில மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி வெகுவாக குறைந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல் முதல் ஜூன்) தங்கம் இறக்குமதியானது 94% வீழ்ச்சி அடைந்து 688 மில்லியன் டாலர்களாக (சுமார் 5,090 கோடி ரூபாய்) சரிந்துள்ளது.  கடந்த ஆண்டு இதே காலத்தில் தங்கம் இறக்குமதியானது 11.5 பில்லியன் டாலர்களாக( ரூபாய் 86,066 கோடி) இருந்துள்ளது.

தங்கத்தின் இறக்குமதி குறைந்த அதே நேரத்தில், தேவை அதிகரித்துள்ளதால் தங்கத்தின் விலை உயருகிறது. 

வட்டி விகிதங்கள்

நிதி சார்ந்த சேவைகளுக்கான வட்டி விகிதங்கள் தங்கத்தின் விலையுடன் நெருங்கிய தொடர்புடையவை. வட்டி விகிதங்கள் குறையும்போது, மக்கள் கையில் அதிகம் பணம் இருக்கும். இதனால் அவர்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புவர். இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து விலை உயரும். 

தற்போது பொருளாதார மந்த நிலை காரணமாக மற்ற முதலீடுகளில் வட்டி விகிதங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதால் முதலீட்டாளர்கள், தங்கத்தில் முதலீட்டைச் செலுத்துகின்றனர். 

நாட்டில் தங்கத்தின் இருப்பு அளவு

பெரும்பாலான முக்கிய நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கத்தை  இருப்பாக வைத்துள்ளன. 

ஒரு நாட்டில் பொருளாதாரம் சரியும்போது, அதனை ஈடுகட்ட தங்க இருப்பை அதிகரிக்கும் முயற்சியில் அந்த நாடு ஈடுபடும். அந்த வகையில், உலக நாடுகளும் தற்போது தங்கத்தின் இருப்பில் கவனம் செலுத்துவதால் விலை உயருகிறது. 

வழக்கம்போல தங்கம் இருப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அந்நாடு 8,133.5 டன் தங்கம் இருப்பில் வைத்துள்ளது.

இந்தியா 633.1 டன் தங்கத்துடன் 10 ஆம் இடத்தில் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தங்கம் இருப்பு குறைவு என்றாலும் இந்தியா ஒரு நிலையான தங்க இருப்பைப் பின்பற்றி வருகிறது.

அதே நேரத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டிலிருந்து தங்கத்தை வாங்குவதில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தங்கத்தில் முதலீடு

எந்த ஒரு சூழ்நிலையிலும் பாதுகாப்பான, லாபம் ஈட்டும் முதலீடாகக் கருதப்படுவதால் மக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். தங்க நகைகள் அணிவதில் இந்திய மக்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டுகின்றனர். மேலும், விழாக் காலங்கள், சுப நிகழ்ச்சிகளில் தங்கம் முக்கிய இடம் பெறுகிறது. இதனால் இந்தியாவில் தங்கத்தின் தேவை இருந்துகொண்டே இருக்கிறது. 

தற்போது தங்கம் விலை உயர்வை அடுத்து, சாமானிய மக்கள்கூட கையில் வைத்திருக்கும் பணத்தை தங்கத்தில் முதலீடு செய்ய விரும்புகின்றனர்.  ஆனால், தங்கம் தேவை (demand) விகிதமும், வழங்கல் (supply) விகிதமும் பெருமளவு வித்தியாசத்தில் இருக்கிறது. இதனால் விலை தொடர்ந்து உயரும் என்றே வல்லுநர்கள் கணிக்கின்றனர். 

2021 ஆம் ஆண்டு வரை தங்கத்தின் விலை குறைய வாய்ப்பில்லை என்றும் இதே நிலைமை நீடிக்கும் பட்சத்தில், அடுத்த 3 முதல் 4 வாரங்களில் தங்கத்தின் விலை சவரனுக்கு 43 ஆயிரம் ரூபாய் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை உயரும் என்று சந்தை வல்லுநர்கள் கணிக்கின்றனர்.

கரோனா நோய்த் தொற்றுப் பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படும்பட்சத்தில் 2021 ஜனவரிவாக்கில், உலகளவில் பொருளாதாரத்தில் நிலைத் தன்மை ஏற்படத் தொடங்கினால் தங்கத்தின் விலை குறையத் தொடங்கலாம். ஆனாலும், பெரிய அளவில் குறையுமா என்பது பற்றி அப்போதுதான் தெரிய வரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com