கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு கார் ஓட்டியவர் கிணற்றில் விழுந்து பலி

தலைநகர் தில்லியில் தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா  ஆகியோருக்கு கார் ஓட்டிய குமாரசாமி(64), சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
கார் ஓட்டுநர் குமாரசாமி
கார் ஓட்டுநர் குமாரசாமி



வாழப்பாடி:  தலைநகர் தில்லியில் தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா  ஆகியோருக்கு கார் ஓட்டிய குமாரசாமி(64), சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குறிச்சி ஊராட்சி அணைமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரசாமி(64). இவருக்கு மல்லிகா என்ற மனைவியும், யுவராஜ், மணி, ரவி என்ற மூன்று மகன்களும் உள்ளனர். இளமைப் பருவத்திலேயே தலைநகர் தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணியில் சேர்ந்த குமாரசாமி, 35 ஆண்டுகளுக்கு மேலாக தில்லியிலேயே தங்கி பணிபுரிந்து வந்தார்.

தமிழகத்தில் இருந்து செல்லும்  முதல்வர்கள், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஆகியோர் தில்லிக்குச் சென்று தமிழ்நாடு இல்லத்தில் தங்கி இருந்து, பிரதமர், குடியரசுத் தலைவர், மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகளை சந்திக்க செல்லும்போது, அரசுக்கு சொந்தமான காரில் ஓட்டுநர் குமாரசாமி அழைத்துச் செல்வது வழக்கம்.

மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு பலமுறை குமாரசாமி காரை ஓட்டியுள்ளார். இவர்களிடம் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.

கடந்த மூன்றாண்டுக்கு முன் ஓய்வுபெற்ற இவர், வாழப்பாடி அருகே தனது சொந்த கிராமமான குறிச்சி அணைமேட்டில் வசித்து வரும், தனது தாய் பெத்தாய்க்கு துணையாக இருப்பதற்காக, வெளியிலிருந்து வந்து இங்கேயே தங்கி உள்ளார்.

இந்நிலையில், கடந்த 29 ஆம் தேதியிலிருந்து இவரை காணவில்லை, பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில், வெள்ளிக்கிழமை காலை வசிஷ்ட நதி கரையோரத்தில் இவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில்  பிணமாக மிதப்பது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று, இவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  இவரது மறைவுக்கு சுற்றுப்புற கிராம மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அவரது மகன் மணி தற்போது தில்லியில் உள்ள தமிழ்நாடு அரசு இல்லத்தில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். மற்றொரு மகன் யுவராஜ் தில்லி மத்திய காவல் துறையில் நுண்ணறிவுப்பிரிவில்  தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். இளைய மகன் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். 

தமிழக முன்னாள் முதல்வர்களுக்கு ஓட்டுநராக பணிபுரிந்தவர், தனியாக வாழ்ந்து வந்த தாய்க்கு துணையாக இருப்பதற்காக சொந்த கிராமத்திற்கு வந்தபோது கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com