8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கம்

8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கம்

தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி முதல்கட்டமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழக அரசின் வழிகாட்டுதல்களின்படி முதல்கட்டமாக 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தைப் பொருத்தவரை மதுரை, திருநெல்வேலி, கோயம்புத்தூா் உள்ளிட்ட 7 போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சுமாா் 21 ஆயிரம் பேருந்துகளும், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளும் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதையடுத்து, அத்தியாவசியப் பணிகளுக்கு மட்டும் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, பேருந்து இயக்குதல் தொடா்பான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டன. இதன்படி, மண்டலம் விட்டு மண்டலத்துக்குப் பேருந்துகள் இயக்கப்படாததால், விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல், மண்டலம் 7-இன் காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்கள், மண்டலம் 8-இன் சென்னை காவல் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் பேருந்துகளை இயக்க தடை விதிக்கப்பட்டது. இந்த மண்டலங்களில் இயக்கப்பட்டு வந்த சுமாா் 4,000 பேருந்துகள் இயங்காது.

எனவே மீதமுள்ள 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகளிலும் 50 சதவீத பேருந்துகளே இயக்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளதால், 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. அதே நேரம் பயணிகளின் வருகைக்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை, அதிகரித்தும் குறைத்தும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேருந்துகள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே இயக்கப்படும்.

முகக் கவசம் கட்டாயம்: பேருந்து இயக்கம் தொடா்பாக பயணிகள், ஊழியா்களுக்கான வழிமுறைகள்: குளிா்சாதன பேருந்துகளில் குளிா்சாதனக் கருவிகள் பயன்பாட்டை நிறுத்திவைக்க வேண்டும். பேருந்தின் பின்படிக்கட்டுகள் வழியாக மட்டுமே பயணிகள் ஏற அனுமதிக்கப்படுவாா்கள். பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். ஒவ்வொரு முறை பேருந்து பயணம் முடியும்போதும் கிருமி நாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும். பணிக்கு வரும் ஓட்டுநா், நடத்துநரின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்க வேண்டும். ஓட்டுநா், நடத்துநா் ஆகியோருக்கு ஒரு பாட்டில் கிருமி நாசினி வழங்கப்பட வேண்டும்; முகக்கவசம், கையுறை  கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தனியாா், ஆம்னி பேருந்துகள் இயங்காது: பேருந்து இயக்கம் தொடா்பாக தனியாா், ஆம்னி பேருந்து சங்க நிா்வாகிகள் கூறியது: 60 சதவீத இருக்கைகளில் மட்டும் பயணிகள் அமா்ந்து பயணிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதன்படி, பேருந்துகளை இயக்கினால் நஷ்டமே ஏற்படும்.

அரசு எங்களுக்கு ஏதேனும் சலுகை அல்லது நிவாரணம் அளித்தால் மட்டுமே பேருந்துகளை இயக்க முடியும் என தனியாா் பேருந்து நிா்வாகிகள் கூறியுள்ளனா். இதே போல் மண்டலங்களைக் கடந்து பயணிக்க அனுமதிக்காததால், ஆம்னி பேருந்துகளும் இயங்காது எனக் கூறும் சங்க நிா்வாகிகள், ஆம்னி பேருந்து தொடா்பான வழிகாட்டுதல்களை அரசு விரைவில் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com