விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு ரயில் சேவை தொடக்கம்

கரோனா பொதுமுடக்கத் தளர்வையடுத்து, விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. 
விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு திங்கள்கிழமை  மாலை புறப்பட்ட ரயிலில் குறைந்த அளவிலேயே பயணம் செய்த பயணிகள். 
விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு திங்கள்கிழமை  மாலை புறப்பட்ட ரயிலில் குறைந்த அளவிலேயே பயணம் செய்த பயணிகள். 


விழுப்புரம்: கரோனா பொதுமுடக்கத் தளர்வையடுத்து, விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு ரயில் சேவை திங்கள்கிழமை தொடங்கியது. 

தமிழகத்தில் மாநில அரசு விடுத்த கோரிக்கையின்பேரில் விழுப்புரம்-மதுரை, திருச்சி-நாகர்கோவில், கோவை-காட்பாடி, கோவை-மயிலாடுதுறை ஆகிய 4 ரயில்களை திங்கள்கிழமை முதல் இயக்க தெற்கு ரயில்வே அனுமதி அளித்திருந்தது.

அதன்படி, காலை 7 மணிக்கு மதுரையிலிருந்து 21 பெட்டிகளுடன் புறப்பட்ட ரயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் வழியாக விழுப்புரத்துக்கு பிற்பகல் 12.05 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த ரயிலில் 500 பயணிகள் வந்தனர்.

இதேபோல, விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு ரயில் மாலை 4 மணியளவில் புறப்படத் தயாரானது. இதையொட்டி, முன்பதிவு செய்திருந்த பயணிகள் பிற்பகல் 3 மணிக்கே ரயில் நிலையத்துக்கு வரவழைக்கப்பட்டனர். பரிசோதனையில் காய்ச்சல், கரோனா அறிகுறிகள் இல்லாத பயணிகள் மட்டும் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர்.

ஒரு மண்டலத்திலிருந்து வேறு மண்டலத்துக்கு ரயிலில் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்பதால், பயணிகள் பலர் வருவாய்த் துறையினரிடம் இ-பாஸ் வாங்கி வந்திருந்தனர். இ-பாஸ் பெறாமல் கடைசி நேரத்தில் ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பயணிகளுக்கு அங்கேயே வருவாய்த் துறை மூலம் இ-பாஸ் உடனடியாக வழங்கப்பட்டது. 

இந்த பணிகளை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங், கோட்டாட்சியர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் ரயில் பெட்டிகளில் ஏறி, பயணிகளுக்கு கரோனா தடுப்பு பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மாலை 4 மணியளவில் சுமார் 400 பயணிகளுடன் ரயில் விழுப்புரத்திலிருந்து மதுரைக்கு புறப்பட்டுச் சென்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com