பவானி சுற்றுவட்டச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் மும்முரம்

பவானி நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுற்றுவட்டச்சாலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நில உரிமையாளர்களிடம் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தும் வருவாய்த் துறையினர்.
நில உரிமையாளர்களிடம் ஆவணங்களை பெற்று விசாரணை நடத்தும் வருவாய்த் துறையினர்.


பவானி: பவானி நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுற்றுவட்டச்சாலை அமைக்கத் தேவையான நிலத்தைக் கையகப்படுத்தும் பணியில் வருவாய்த் துறையினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மேட்டூர் - ஈரோடு வழித்தடத்தில் பவானி மிகவும் முக்கியமான நகராக உள்ளது. இந்த வழித்தடத்தில் பெங்களூர், கோவை, சேலம், சென்னை, கேரளா மாநிலம் உள்பட பல்வேறு ஊர்களுக்கு ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், பவானி நகருக்குள் அதிகப் போக்குவரத்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதோடு, போக்குவரத்து நெரிசலும் காணப்பட்டு வருகிறது.

இப்பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையிலும், நகருக்குள் வரத் தேவையில்லாத கனரக வாகனங்கள் தடையின்றி செல்லவும் பவானி நகரைச் சுற்றிச் செல்லும் வகையில் 8 கி.மீ. தொலைவுக்கு சுற்றுவட்டச் சாலை அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

பலகட்ட ஆய்வுக்குப் பின்னர் பவானி - மேட்டூர் சாலையில் குருப்பநாயக்கன்பாளையம் தொடங்கி வலதுபுறமாக விவசாய நிலங்கள் வழியாகச் செல்லும் இச்சாலை காடையம்பட்டி அருகே பவானி - அந்தியூர் சாலையைக் கடக்கிறது. தொடர்ந்து, பவானி - ஆப்பக்கூடல் சாலையையும் கடந்து, பவானி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்கப்பட்டு, எலவமலை, மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சிக் கிராமங்கள் வழியே தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகப் பணிமணை அருகே லட்சுமி நகர் அருகே சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையுடன் இணைகிறது. 100 அடி அகலத்தில் சுமார் 8.18 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்படும் இச்சாலைக்குத் தேவையான நிலங்கள் அளவீட்டுப் பணிகள் ஏற்கெனவே முடிவடைந்துள்ளன.

இதையடுத்து, நில உரிமையாளர்களிடம் நிலத்தின் பட்டா உள்ளிட்ட ஆவணங்கள், வங்கிக் கணக்கு எண் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் வருவாய்த் துறை சார்பில் கேட்கப்பட்டு வருகிறது. 
பவானி வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் கு.பெரியசாமி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற முகாமில் நிலம் எடுப்பு துணை வட்டாட்சியர் திருமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் எஸ்.ஸ்ரீதர், கிராம நிர்வாக அலுவலர்கள் செந்தில், வெள்ளிங்கிரி, ரகுநாத், பத்மாவதி, குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நிலம் தொடர்பான விவரங்களைப் பெற்றனர்.

பவானி, சேர்வராயன்பாளையம், புதுகாடையம்பட்டி, திப்பிசெட்டிபாளையம், பெரியமோளபாளையம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 120 பேரிடம் விவரங்கள் பெறப்பட்டன. இப்பகுதி மக்களுக்கு நிலத்துக்கு ரூ.3.99 கோடியும், பலன் தரும் மரங்களுக்கு ரூ.2.74 லட்சம், கட்டடங்களுக்கு ரூ.32.40 லட்சமும் இழப்பீடாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இச்சாலை அமைக்கப்படும்போது பவானி நகருக்குள் போக்குவரத்து நெரிசல் கணிசமான அளவு குறைவதோடு, கனரக வாகனங்கள் அவசியமின்றி நகருக்குள் வருவது கட்டுப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com