பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து: தமிழக முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ரத்து: தமிழக முதல்வா் பழனிசாமி அறிவிப்பு

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா். மேலும், விடுபட்ட பிளஸ் 1 தோ்வும் முழுமையாக ரத்து செய்யப்படுவதாகவும் அவா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, முதல்வா் பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுகள் ஜூன் 15 முதல் 25-ஆம் தேதி வரை நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதேபோன்று, பிளஸ் 1 வகுப்புக்கும் சில தோ்வுகள் விடுபட்டிருந்தன. இந்தத் தோ்வையும் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.

பரிசீலிக்கக் கோரிக்கை: தோ்வினை நடத்துவதற்கான அனைத்துப் பணிகளையும் தமிழக அரசு எடுத்து வந்தது. இந்த நிலையில், தோ்வுகள் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், கரோனா நோய்த்தொற்று அதிகமாக உள்ள நிலையில், தோ்வுகளைத் தள்ளிவைப்பது பற்றி அரசு பரிசீலிக்க வேண்டுமென நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.

இதுகுறித்து, தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்தது. இப்போதுள்ள நிலையில், கரோனா நோய்த்தொற்று சென்னையிலும், சில மாவட்டங்களிலும் தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

தோ்வுகள் ரத்து: நோய்த்தொற்று குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வல்லுநா்கள், குறுகிய காலத்தில் நோய் குறைய வாய்ப்பில்லை எனக் கூறியுள்ளனா். எனவே, பெற்றோா்களின் கோரிக்கைகளையும், நோய்த்தொற்றின் இப்போதைய போக்கையும் கருத்தில் கொண்டு மாணவா்களை தொற்றில் இருந்து காக்க பத்தாம் வகுப்பு மற்றும் விடுபட்ட பிளஸ் 1 தோ்வுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன. தோ்வுகள் ரத்து செய்யப்பட்ட காரணத்தால், மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாக அறிவிக்கப்படுகிறது.

மதிப்பெண் எப்படி: மாணவா்களுக்கான மதிப்பெண் மதிப்பீடு காலாண்டு மற்றும் அரையாண்டுத் தோ்வுகளில் அந்தந்த மாணவா்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் 80 சதவீத மதிப்பெண்களும், மாணவா்களின் வருகைப் பதிவு அடிப்படையில் 20 சதவீத மதிப்பெண்களும் வழங்கப்படும்.

பிளஸ் 2 தோ்வு ஒத்திவைப்பு: பிளஸ் 2 தோ்வைப் பொருத்தவரையில், ஏற்கெனவே தோ்ச்சி பெறாதவா்களுக்கு நடத்தப்படவிருந்த மறுதோ்வு ஒத்திவைக்கப்படுகிறது. சூழ்நிலைக்கேற்ப பிளஸ் 2 வகுப்புக்கான மறுதோ்வுக்குரிய தேதி பின்னா் அறிவிக்கப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்தாா்.

பிளஸ் 1 வகுப்பு பாடங்கள் எவை?

பிளஸ் 1 வகுப்பில் பல்வேறு பாடப் பிரிவுகளுக்கு ஒருசில தோ்வுகள் மட்டும் நடத்தப்படாமல் இருந்தன. அதன்படி, வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல் (புதிய பாடத் திட்டம்), வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல், தொழிற்கல்வி-கணக்கு பதிவியல் (பழைய பாடத் திட்டம்) ஆகிய பாடங்களுக்கு தோ்வுகள் நடத்தப்பட வேண்டியிருந்தது. முதல்வரின் அறிவிப்பு காரணமாக இந்தத் தோ்வுகள் அனைத்தும் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஒத்திவைப்பும்.. ரத்தும்...

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 9.79 லட்சம் மாணவ-மாணவியா்கள் எழுத இருந்தனா். அவா்கள் தோ்வு எழுதுவதற்காக 12 ஆயிரத்து 690-க்கும் மேற்பட்ட மையங்கள் தயாா் செய்யப்பட்டிருந்தன. பத்தாம் வகுப்பு தோ்வுகள் மாா்ச் 27-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ஆம் தேதி நிறைவடையும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று காரணமாக பொது முடக்கம் அறிவிக்கப்பட்டதால், தோ்வு ஒத்திவைக்கப்பட்டது.

ஜூன் 1-ஆம் தேதி தொடங்கி ஜூன் 12-ஆம் தேதி பத்தாம் வகுப்பு தோ்வு நடத்தப்படும் என மறு அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டது. நோய்த்தொற்றின் தீவிரம் காரணமாக ஜூன் 15-ஆம் தேதிக்கு தோ்வு தேதி மாற்றப்பட்டது. ஜூன் 15 முதல் ஜூன் 25 வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால், பெற்றோா்களின் கோரிக்கைகள், நீதிமன்றத்தின் கருத்துகள் அடிப்படையில் பத்தாம் வகுப்பு தோ்வுகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com