மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய கோரி திமுக வழக்கு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில் 50 சதவீதத்தை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய கோரி திமுக வழக்கு

மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக சாா்பில் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் மருத்துவ மேற்படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய ஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த மனு தொடா்பாக உயா்நீதிமன்றத்தை அணுக உத்தரவிட்டது. இதனைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தில் திமுக செய்தித் தொடா்பாளா் டி.கே.எஸ்.இளங்கோவன் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்க மறுப்பதால் அந்த பிரிவைச் சோ்ந்த மாணவா்கள் பெரும்பாதிப்பைச் சந்தித்துள்ளனா். மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை பின்பற்றினால், நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் மொத்தம் உள்ள 8 ஆயிரத்து 137 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 2 ஆயிரத்து 197 இடங்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட வேண்டும். நடப்பு கல்வியாண்டில் தமிழகத்தில் இருந்து 960 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த இடங்களில் 50 சதவீத இடங்களான 430 இடங்களை பெற தமிழகத்தைச் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்ட மாணவா்களுக்கு உரிமை உள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் போது, தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு கல்வி நிறுவனங்கள் தவிர, பிற கல்வி நிறுவனங்களில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீட்டை பின்பற்றாமல் மருத்துவ மேற்படிப்புக்கான கவுன்சிலிங் நடத்த தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தாா். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com